அரசியல்

“ஆளுநர் முதல் சூட்டிலே திருந்தியதாகத் தெரியவில்லை... அதனால்தான்...” - வெளுத்து வாங்கிய சிலந்தி கட்டுரை !

ஆளுநருக்கு 'தி.மு.கழகம்' என்பது என்ன என்று தெளிவாகப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறோம். ஆணவம், அகம்பாவம் இவற்றைச் சுருட்டி வைத்துவிட்டு, தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்படுவது ஆளுநருக்கு நல்லது.

“ஆளுநர் முதல் சூட்டிலே திருந்தியதாகத் தெரியவில்லை... அதனால்தான்...” - வெளுத்து வாங்கிய சிலந்தி கட்டுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஒரே கல்லில் பல மாங்காய்!

ஒரு நாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டம்! ஒரே கல்லில் பல மாங்காய்... என்பார்களே, அதனை அடித்துக் காட்டியுள்ளார் முதல்வர் தளபதி ஸ்டாலின்! இந்தக் கூட்டத்தின் மூலம் ஆளுநரின் அகம்பாவம் தோலுரிக்கப்பட்டுள்ளது! பி.ஜே.பி.யின் சுயரூபம் வெளிக் கொணரப்பட்டது! அ.தி.மு.க.வின், பி.ஜே.பி. எதிர்ப்பு நாடக முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது ! தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வகுத்த வியூகத்தி லிருந்து வெளிவர முடியாமல், இவர்கள் எல்லோரும் விழிபிதுங்கி நிற்கும் காட்சி வரலாறாகிறது!

உச்சநீதிமன்றத்தின் கண்டனம் தன்மீது பாயுமோ என்ற அச்சத்தில் அதைத் தவிர்க்க தான் சாதுர்யமாகச் செயல்படுவதாகக் கருதி, சில ஆண்டுகளாக; கிடப்பில் கிடந்த மசோதாக்களைத் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி! பாவம்; அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்; இந்த எதிர் விளைவை! “நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று, அதனாலே முழிக்குதே அம்மா கண்ணு!” என்ற பாடல் வரிகளை மாற்றி, “நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று, அதனாலே முழிக்குதே ஆளுநர் கண்ணு!" என்று பாடிடும் வகையில் எல்லாமே நடந்துவிட்டது!

நாளை உச்சநீதிமன்றத்துக்குச் சென்று தன்னிடம் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானங்கள் எதுவும் நிலுவையில் இல்லை என்று தெரிவிக்கும் நோக்கோடு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்; இப்படி தமிழ்நாடு அரசு உடனடியாக சட்டப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டி, அவரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் ஆளுநருக்கே திருப்பி அனுப்பிடும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பி வைக்கும் என்பதை ஆளுநர் ரவியின் சித்து விளையாட்டுகளெல்லாம் தமிழ்நாட்டு அரசியல் அரங்கில் செல்லுபடியாகாது என்பதை; பல படிப்பினைகளைப் பெற்றும் ஏனோ அவர் உணரவில்லை!

“ஆளுநர் முதல் சூட்டிலே திருந்தியதாகத் தெரியவில்லை... அதனால்தான்...” - வெளுத்து வாங்கிய சிலந்தி கட்டுரை !

தமிழ்நாடு அரசு தயாரித்துத் தந்த ஆளுநர் உரையில் தமிழினத் தலைவர்களின் பெயர்களையும், சில சொற்களையும் அவரே விடுத்து உரையாற்றிவிட்டு, தான் பெரிய சாதனையைப் புரிந்து விட்டதாகவும், ஆளும் கட்சி என்ன செய்துவிட முடியும் என்றும் இறுமாப்பில் இருந்தபோது, தமிழ்நாட்டு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவையில் எழுந்து, 'ஆளுநர் உரையில் அரசு தயாரித்துத் தந்த உரைதான் அவைக் குறிப்பில் இடம் பெறும்” எனத் தீர்மானம் நிறைவேற்றியதும், அவையிலிருந்து தேசியகீதம் ஒலிப்பதற்கு முன்பே ஆளுநர் ஒட்டமும் நடையுமாக வெளியேறியபோதே பாடம் பெற்றிருப்பார் என்று கருதினோம்! சனாதன தர்மத்துக்கு சப்பைக்கட்டு கட்டிடும் ஆளுநர், பிறப்பால் தான் தலையில் பிறந்த சாதியைச் சேர்ந்தவர், தன்னை வெற்றி காண இயலாது என்ற இறுமாப்பில் சுழன்றபோது; தமிழ்நாட்டு முதலமைச்சர் அவரது தலையிலே இறக்கிய முதல் இடியிலேயே அவர் தெளிவு பெற்றிருப்பார் - பெற்றிடுவார் என எண்ணினோம்! முதல் சூட்டிலே அவர் திருந்தியதாகத் தெரியவில்லை!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது வழக்கு இருப்பதால் அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் எனத் தான்தோன்றித் தனமாக, ஒரு ஆளுநரின் அதிகார வரம்பு அறியாது தெரிவித்துவிட்டு, முதல் அமைச்சரின் விளக்கப் பதிலுக்குப் பிறகு நத்தை தனது கூட்டுக்குள் பதுங்குவதுபோல பதுங்கிக் கொண்டார்! "எல்லோருக்கும் எல்லாம்” எனும் “திராவிட மாடல்' ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வரை முடக்குவதாக எண்ணி, 'இங்கு உண்மையில் ஆரியம் - திராவிடம் கிடையாது' - என்று பேசிவிட்டு, எதிர்ப்பு வலுவானதும்; நண்டு ஓடிப் பொந்துக்குள் புகுந்துகொள்வது போல ராஜ்பவனத்துக்குள் முடங்கிப் போனார்!

'தமிழ்நாடு' என்பதை 'தமிழகம்' எனக் குறிப்பிட்டால் போதும் என்று பேசியதோடு மட்டுமின்றி, தனது ஆளுநர் அலுவலகத்தில் அதற்கான மாற்றங்களைச் செய்து, விழா அழைப்பில், "தமிழ்நாடு அரசு" என்ற பெயரை தன்னிச்சையாக தமிழகமாக மாற்றி, சிறு பிள்ளைத்தன விளையாட்டு என்பார்களே; அந்த முறையில் செயல்பட்டார்!

ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுக்கு எதிராக அவர் செயல்பட்டதால், தமிழ்நாட்டின் பல திக்குகளிலிருந்தும் எழுந்த எதிர்ப்பில், சுழற் காற்றில் சிக்கிய சருகாய் அல்லாடிப் போனார்! இத்தனைக்குப் பிறகும் அவர் தன்னையும், தனது போக்கையும் திருத்திக் கொண்டதாகத் தெரியவில்லை! தன்னை மேதையாகத் தனக்குத் தானே எண்ணிக் கொண்டு, ஆணவத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்துகொண்டு அடி மரத்தை வெட்டிடும் செயலில் இறங்கி அவ்வப்போது தலைகுப்புற கீழே விழுந்தாலும், மீண்டும் எழுந்து மரத்தில் ஏறிக்கொண்டு அதே செயலில் ஈடுபடும் பைத்தியக் காரச் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்!

“ஆளுநர் முதல் சூட்டிலே திருந்தியதாகத் தெரியவில்லை... அதனால்தான்...” - வெளுத்து வாங்கிய சிலந்தி கட்டுரை !

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசுக்கு எதிராக நியமனப் பதவியில் இருந்துகொண்டு, சர்வாதிகாரப் போக்கோடு, இணையான அரசாங்கம் (Parallel Govt.) நடத்தத் தொடங்கினார்! சட்டமன்றத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் (பா.ஜ.க. தவிர) எடுத்த முடி- வினை ஒட்டி நிறைவேற்றப்பட்ட மசோதாக்களைக் கிடப்பிலே போட்டது மட்டுமின்றி, 'பல நாட்கள் கிடப்பில் போட்டால் அந்த மசோதாக்களை ஏற்க இயலாது என்றுதான் அர்த்தம்' என்று இறுமாப்பு விளக்கங்களைத் தந்தார்!

*காலவரையின்றி மசோதாக்களைக் கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது” என்று உச்சநீதிமன்றம், ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக தமிழ் நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் கருத்துத் தெரிவித்ததை ஒட்டி, ஆண்டுக்கணக்கில் நிலுவையில் வைத்திருந்த; அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களில், 10 மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார்! தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை சாதுர்யமாக எதிர்கொள்வதாக அவர் நினைத்து அனுப்பினார்; தான் பெரிய வியூகம் அமைத்து தன் செயலைத் தற்காத்துக் கொண்டதாக நினைத்தார் ஆளுநர்; அந்த வியூகத்தை, சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி, திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநருக்கு மீண்டும் உடனடியாக அனுப்பிவிட்டார் முதலமைச்சர்! இந்த சிறப்- புக் கூட்டம் ஆளுநரை மட்டுமின்றி பா.ஜ.க., அ.தி.மு.க.வின் முகமூடிகளையும் கிழித்தெறிவதாக அமைந்து விட்டது!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ஒரு அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டார். அதாவது, "ஆளுநர் மசோதாக்களை நிறுத்தித்தான் வைத்துள்ளார்; ரத்து செய்ததாகக் குறிப்பிடவில்லை” என 'With Hold' என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு தனது ஆங்கிலப் புலமையைக் காட்டிக் கொண்டார்! “ஆளுநர் “With Hold' என்று குறிப்பிட்டுள்ளதால், இந்த 10 சட்ட முன் வடிவுகளை நிராகரிக்க வில்லை” என்று குறிப்பிட்டார்! ஆளுநர் 'With Hold' - என்று குறிப்பிட்டு அந்த சட்ட முன் வடிவுகளைத் திருப்பி அனுப்பாமல், ஒரு கடிதம்மூலம் தெரிவித்திருந்தால்கூட எடப்பாடி பழனிச்சாமியின் வாதம் ஏற்கக் கூடியதாக இருக்கலாம்; சட்ட முன் வடிவு களைத் திருப்பி அனுப்பி விட்ட பிறகு எப்படி அந்த வாதம் பொருந்தும்?

“ஆளுநர் முதல் சூட்டிலே திருந்தியதாகத் தெரியவில்லை... அதனால்தான்...” - வெளுத்து வாங்கிய சிலந்தி கட்டுரை !

சராசரி அறிவு படைத்தவர்களுக்குப் புரியக் கூடிய விவகாரம், நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச் சாமிக்குப் புரியாமல் போனது விந்தை யல்லவா? பொதுவாக ஆளுநர், குடியரசுத் தலைவர் போன்றோர் மசோதாவைத் திருப்பி அனுப்பும் போது 'With Hold' என்று குறிப்பிடுவது, நிராகரிப்பதாகவே அர்த்தம் - என்பதை ஆதாரங்களுடன் எடுத்து காட்டி சட்டமன்றத்தில் பேசிய நிதியமைச்சரும் சட்ட அமைச்சரும் விளக்கமளித்தனர்.

இந்த விளக்கங்களை தனது கவனத்தில் கொள்ளாது, இல்லாத ஒரு குற்றச்சாட்டைக் கூறிவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் தனது கட்சியினருடன் வெளிநடப்புச் செய்தார்! ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களில் ஒன்று, முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவின் பெயரை தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்துக்கு வைக்க வேண்டும் என்றிருந்ததைக் கூட அறியாமல், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது போல; ஒரு நொண்டிச் சாக்கைக் கூறி வெளிநடப்புச் செய்தது அ.தி.மு.க.!

அ.தி.மு.க. வெளிநடப்பு செய்த காரணத்தை மிகவும் அழகாகச் சுட்டிக் காட்டிய அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன், 'பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' என்றார்! ‘பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முறிவு என்பதெல்லாம் வெளிநாடகம்; பி.ஜே.பி.யிலிருந்து தாங்கள் வெளியே வந்துவிட்டதாகக் கூறினாலும் அவர்களுக்கு இடையே உள்ளூர ஒரு நீரோட்டம் உள்ளது என்பதால், ஆளுநருக்கு எதிராகப் பேசினால் அது மோடியைத் தாக்குவதாக அமைந்துவிடும் என்று பயந்து வெளிநடப்புச் செய்து விட்டனர்" என்று குறிப்பிட்டு அ.தி.மு.க.வின் சுயரூபத்தைச் சுட்டிக் காட்டினார்! தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஒரு நாள் நடத்தி, ஒரே கூட்டத்தில் பலரது சுயரூபங்களை தோலுரித்துக் காட்டிவிட்டார் முதலமைச்சர்!

இப்போது ஆளுநருக்கு 'தி.மு. கழகம்' என்பது என்ன என்று தெளிவாகப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறோம்! ஆணவம், அகம்பாவம் இவற்றைச் சுருட்டி வைத்துவிட்டு, தனது அதிகார வரம்புக்கு உட்பட்டுச் செயல்படுவது ஆளுநருக்கு நல்லது!.

- சிலந்தி கட்டுரை !

banner

Related Stories

Related Stories