அரசியல்

"திராவிடம் பற்றிய வரலாறு தெரியாமல் உளறி அழிக்கத் துடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி" : கொதித்தெழுந்த வைகோ!

வரலாறுகளை மறைத்து ஆர்.எஸ்.எஸ்யை விளம்பரம் செய்யும் முகவராக ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

"திராவிடம் பற்றிய வரலாறு தெரியாமல் உளறி அழிக்கத் துடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி" : கொதித்தெழுந்த வைகோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டின் வரலாற்றை அறியாமல் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவி உளறிக் கொட்டி வருகிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

திருச்சியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் சார்பில், மருது சகோதரர்கள் நினைவு நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசிய போது,“தமிழகத்தின் உண்மையான வரலாற்றை அழிப்பதற்கு இங்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

உண்மையான வரலாற்றை மறைத்து அதற்கு நிகரான வரலாற்றை எழுத முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அவர்கள், தமிழகத்தில் இன ரீதியாக பிரிவினை இருப்பது போன்றதொரு தவறான தகவலை உருவாக்கினார்கள்.திராவிடம் ஆரியம் என்ற இனங்கள் இருப்பது போன்ற பிரிவை உருவாக்கினார்கள்.

திராவிடர்கள் என்பவர்கள் தனி இனம் என்ற கருத்தாக்கத்தின் தந்தை ராபர்ட் கால்டுவெல். உண்மையில் இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது. இந்தியாவைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கான பிரிட்டிஷாரின் உத்திகளில் இதுவும் ஒன்று.

இன்றளவும் கொண்டாடப்படும் சிலர், லண்டனுக்குச் சென்று பிரிட்டிஷாரிடம் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதெல்லாம் மறைக்கப்பட்ட வரலாறு” என்று பேசி உள்ளார். தமிழ்நாட்டின் வரலாற்றை அறியாமல் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவி உளறிக் கொட்டி வருவதில் இதுவும் ஒன்றாகும்.

"திராவிடம் பற்றிய வரலாறு தெரியாமல் உளறி அழிக்கத் துடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி" : கொதித்தெழுந்த வைகோ!

ரிக் வேதம், அவ்வேதத்திற்குச் சொந்தக்காரர்களை ‘ஆரியர்’ என்றும் மற்றவர்களை ‘அனாரியர்’ என்றும் குறிப்பிடுகிறது. ஆரியரை எதிர்த்த மக்களை ‘தாசர்’ என்று குறிப்பிடுகிறது. தோற்கடிக்கப்பட்ட அனாரியர் (ஆரியர் அல்லாதவர்) சமூகத்தின் நாலாம் பிரிவாக சூத்திரர்(Sudra) ஆக்கப்பட்ட சூத்திரர்களும் இழிந்த பிரிவினர் ஆவர்.

அனாரியர் என்றும், தாசர் என்றும், அசுரர் என்றும் பின்னர் வர்ண சாதி முறையில் சூத்திரர் - பஞ்சமர் என்றும் ஒடுக்குமுறைக்கு இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் உள்ளாகி உள்ளமைக்கு இலக்கியப் பதிவுகள் இருக்கின்றன. ‘திராவிட’ என்ற சொல் மகாபாரதத்தில் வருகிறது. அது தென்னகப் பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

திராவிடர் பற்றி மனுதர்மம் பேசுகிறது. மனு சாஸ்திரத்தில் (X,43, 44) சாதி இறக்கம் செய்யப்பட்ட சத்திரியர்களைப் பற்றி வருகிறது. திராவிடர்கள் சத்திரியர்களாக இருந்தனர் என்றும், பின்னர் விருசாலர்களாக (சூத்திரர்கள்) தாழ்ந்தார்கள் என்றும், “திராவிடச் சத்திரியர்கள், புனிதச் சடங்குகளை விட்டுவிட்டனர் என்றும், அதனாலேயே தாழ்ந்தார்கள் என்றும் மனுநூல் குறிப்பிடுகிறது.

இந்தியத் துணைக் கண்டத்தின் தென்பகுதியை ‘திராவிடம்’ என்று வடமொழியாளர்கள் அழைக்கும் போக்கு நீண்ட காலமாக, மகாபாரதம் உள்ளிட்ட நூல்களில் பேசப்பட்ட ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.

தமிழ் மொழி ‘திராவிடம்’ என்று வடவர்களால், சமஸ்கிருதம் பேசிய ஆரியர்களால் அழைக்கப்பட்டது. தமிழ் அறிஞர்களே தமிழை ‘திராவிடம்’ என்று அழைக்கும் போக்கு கி.பி. 17ஆம் நூற்றாண்டு அளவிலே பரவலானது. கி.பி. 17ஆம் நூற்றாண்டில், தாயுமானவர் தமிழைத் ‘திராவிடர்’ என்று குறிப்பிடுகிறார்.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம்(1856) வெளிவரும் முன்பு, தமிழ்மொழி ‘திராவிடம்’ என்றே தமிழறிஞர்களால் வழங்கப்பட்டது. இந்த வரலாறுகளை மறைத்து ஆர்.எஸ்.எஸ் என்ன கட்டமைக்கிறதோ அதனை விளம்பரம் செய்யும் முகவராக ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.

ஆங்கிலேயர்களின் தாள் வணங்கி, ஏகாதிபத்திய வெள்ளை அரசின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக் கிடந்த கூட்டத்தைக் கொண்டாடும் ஆளுநர் ரவியிடம் இது போன்ற கருத்துகளைத்தான் எதிர்பார்க்க முடியும். அவை ஒரு போதும் உண்மை ஆகாது.

banner

Related Stories

Related Stories