சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றிபெற்றது. அதோடு எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியின் பெரிய கட்சியாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அக்கட்சியில் புதிய செயற்குழு அமைக்கப்பட்ட பின்னர், புதிய காரிய கமிட்டி உறுப்பினர்களின் முதல் கூட்டம் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டம் முடிந்த பின்னர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த மே 5ஆம் தேதி முதல் மணிப்பூர் பற்றி எரிகிறது. பிரதமருக்குப் பல நாடுகளுக்குச் செல்லவும், ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவும், ஜி20இல் கலந்து கொள்ளவும் மோடிக்கு நேரம் இருந்தது. ஆனால், 5 மணி நேரத்தில் போகக்கூடிய மணிப்பூருக்கு மோடியால் செல்ல முடியவில்லை. அவருக்கு அதற்கு நேரம் இல்லை. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு மணிப்பூரைப் பற்றி இரண்டு நிமிடம் பேசியதோடு சரி, அதன்பின்னர் மணிப்பூர் குறித்து மோடி பேசவில்லை.
தற்போதைய அரசியல் சூழலில், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கூட்டாட்சி முறையைத் திட்டமிட்டு வலுவிழக்க பாஜக திட்டமிடுகிறது, மாநில அரசுகளுக்கான வருவாய் மறுக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது" எனக் கூறினார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், " இதனை கூட்டாட்சியின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறோம்.. இதைச் செயல்படுத்தக் குறைந்தது ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற பாஜகவில் போதியளவில் எம்பிக்கள் இல்லை. இது அவர்களுக்கும் நன்கு தெரியும். இருப்பினும், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மாயையை முன்வைத்து உண்மையான பிரச்சினைகளைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள்" என்று கூறினார்.