அரசியல்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ : எதிர்க்கட்சி ஆட்சிகளை நீடிக்கவிடாமல் செய்யும் சூழ்ச்சி - கி.வீரமணி அறிக்கை !

அதிபர் ஆட்சியைக் கொண்டுவரத் துடிக்கும் பாஜகவின் அபாயகரமான ஜனநாயக விரோத திட்டத்தை முறியடிப்போம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ : எதிர்க்கட்சி ஆட்சிகளை  நீடிக்கவிடாமல் செய்யும் சூழ்ச்சி -  கி.வீரமணி அறிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆர்.எஸ்.எஸின் திட்டமான ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதை சட்டமாக நிறைவேற்ற, நாடாளுமன்ற அவசரக் கூட்டம் கூடுகிறது. அதிபர் ஆட்சியைக் கொண்டு வந்து மாநில ஆட்சிகளை மாற்றி அமைத்திடும் இந்தத் திட்டத்தை - முயற்சியை முறியடிக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம், களப் பணிகளில் ஈடுபட முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

திடீரென்று நாடாளுமன்றத்தின் சிறப்புத் தொடர் கூட்டங்கள் வரும் 18.9.2023 அன்று முதல் 22 ஆம் தேதிவரை - அய்ந்து நாள்கள் நடைபெறும் என்ற அறிவிப்பு நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பிரதமர் மோடியின் திட்டமான - ஒரே நாடு, ஒரே தேர்தல்!

அதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பிரதமர் மோடியின் திட்டமான - ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அரசின் கொள்கைத் திட்டமாக அறிவிக்கப்பட்டு, அதனை சட்டமாக இரு அவைகளிலும் அவசர அவசரமாக நிறைவேற்றிவிட்டு, வருகிற நாடாளுமன்றத் தேர்தலையொட்டியே (அதுவும் முன்கூட்டியேகூட நடத்தப்படலாம் என்ற ஊகங்கள்படி) நடத்தப் பெற திட்டமிட்டு, இதில் இறங்கியிருக்கிறார்கள் என்பது புரிகிறது!

திடீரென்று நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது அமோக அக்கறை, ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு வருவானேன்? ‘இந்தியா’ என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணியாக ஒன்று சேர்ந்து, ஒன்றியத்தில் உள்ள பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். மோடி அரசை தேர்தல் வாக்களிப்புமூலம் அகற்ற ஆயத்தமாகி, நாளுக்கு நாள் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலம் பெற்று வருவதுடன், தங்களுக்குள்ள வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையுடன் தேர்தலில் திரள உறுதி பூண்டுள்ளதால், இப்படி ஒரு தந்திரம், அரசியல் வியூகத்தை அமைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.அரசமைப்புச் சட்ட கர்த்தாக்கள் கருத்துக்கு, சிந்தனை செயலாக்கத்திற்கு விரோதமானது இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் ஏற்பாடு ஆகும்!

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ : எதிர்க்கட்சி ஆட்சிகளை  நீடிக்கவிடாமல் செய்யும் சூழ்ச்சி -  கி.வீரமணி அறிக்கை !

அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் முரணான நடவடிக்கை!

அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு கூறுகளுக்கு -அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் முரணான நடவடிக்கையாகவே இந்த சட்டம் - தங்களுக்குள்ள ‘ரோட் ரோலர்’ மெஜாரிட்டியைப் பயன்படுத்திக் கொண்டு வந்து இதனை நிறைவேற்றினாலும்கூட, பல சட்ட சிக்கல்களுக்கு - சாதாரண சிக்கல்கள் அல்ல; இடியாப்பச் சிக்கல்களுக்கு இது அரசுகளைக் கொண்டு போய் நிறுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்தோ அல்லது பொருளாதார நெருக்கடி மாநிலங்களில் ஏற்பட்டோ அவ்வாட்சிகளைக் கலைத்தால், ஏற்கெனவே வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்படி (எஸ்.ஆர்.பொம்மை வழக்கு போன்றவற்றாலும்) பொதுத் தேர்தல் எப்போது வரும் என்று காத்திருக்கவேண்டும்.

குறிப்பிட்ட காலம் வரும்வரை தேர்தல் நடத்த முடியாமல் இருக்க முடியுமா?

உதாரணமாக, ஒன்றிய அரசு பெரும்பான்மை இழந்தால் அல்லது எதனாலேயோ அரசு கவிழ்ந்தால், நாடாளுமன்றத் தேர்தலை மட்டும் மீண்டும் நடத்தாமல், மறுபடியும் குறிப்பிட்ட காலம் வரும்வரை தேர்தல் நடத்தாமல் இருக்க முடியுமா? மாநில அரசுகள் எப்படி இயங்கும்? இதுபோன்ற ‘மில்லியன் டாலர்’ கேள்விகளுக்கும், சிக்கல்களுக்கும் இந்த ஏற்பாடு எந்த வகையில் கதவு திறக்கும்?

(அவற்றை அரசமைப்புச் சட்ட ரீதியாக மற்றொரு சமயம் விளக்குவோம்!)

அதற்கு முதலில் திடீரென்று இப்படி ஒரு செய்தி, கூடையிலிருந்த பாம்பு திடீரென்று சீறி எழுந்து, படமெடுத்தாடுவதுபோல பல அரசியல் வியூகங்கள் முக்கிய காரணமாக இருக்கக் கூடும்.

1. வேட்பாளர், பிரச்சார யுக்தி, தேர்தல் அறிக்கை என்று இப்போது மூன்றாவது கட்டத்தை எட்டிவிட்டு எதிர்க்கட்சிகளின் ‘‘இந்தியா’’ (I-N-D-I-A) கூட்டணி முன்னேறுவதற்கு ஒரே பிரேக் போட்டு அவர்களுக்குள் ஒருவித சலசலப்பை உருவாக்கி அதனை உடைக்கவே இந்தத் திடீர் அறிவிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ : எதிர்க்கட்சி ஆட்சிகளை  நீடிக்கவிடாமல் செய்யும் சூழ்ச்சி -  கி.வீரமணி அறிக்கை !

இந்தியா கூட்டணிக்குள் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தவே இவ்வறிவிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலை முதலில் ஒற்றுமையாக முடித்துவிட்டு, பிறகு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இந்தக் கூட்டணி அந்தந்த மாநிலங்களில் தங்கள் தங்கள் வாய்ப்பு, விருப்பப்படி நடத்திக் கொள்ள உள்ள நிலைமையை முற்றிலும் தலைகீழாக மாற்றியும், தொகுதி பங்கீட்டில் ஒரு பெருங்குழப்பத்தை இந்த கூட்டணிக் கட்சிகளுக்குள் ஏற்படுத்தவும் வித்திடுவதே இந்தத் திட்டத்தின் மூல நோக்கமாகும்.

முன்வரலாறு எதுவும் கிடையாது!

31 ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்ட அறிவிப்பு, செப்டம்பர் ஒன்றாம் தேதி மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு (அந்தக் குழு உறுப்பினர்கள் பெயரும் அத்துடன் முடிவு செய்யப்படாமல், அடுத்த அறிவிப்பு என்ற அவசரக் கோலங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர் இப்படி ஒரு கமிட்டித் தலைவர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதாக முன்வரலாறு எதுவும் கிடையாது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்).

2. தற்போதுள்ள கேபினெட் அமைப்பு முறை என்ற மாநில அரசுகள், சட்டப் பேரவைகள் தனித்தனியே இயங்குவதை சிதைத்து, அதிபர் ஆட்சி (Presidential System) முறைக்கு ஆயத்தப்படுத்தும் நோக்கமும் இதில் உள்ளடக்கி இருப்பதாகவே தெரிகிறது!

3. தி.மு.க. ஆட்சி போன்ற மாநிலக் கட்சி அரசுகளை அதற்கு மேலும் 3 ஆண்டுகள் இருந்தாலும், கலைத்துவிட்டு, உடனே தேர்தல் என்றால், அதற்கான முழு ஆயத்தம் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கும் மாநிலங்களுக்கு என்றால் - குறிப்பாக எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று தனி ஆட்சி அமைந்த கருநாடகம் போன்ற பல மாநிலங்களுக்கும் மீண்டும் தேர்தல் என்றால், அதில் புதைந்துள்ள அரசமைப்புச் சட்ட ‘கண்ணிவெடி’ ஏற்பாடுகளைப்பற்றி மக்களுக்குப் புரிய வைக்கவே காலம் அதிகம் தேவைப்படும்.

4. அடிக்கடி இடைத்தேர்தல் நடந்தால், செலவு அதிகம் என்பது, ஒரு போலி வாதம் - ஏற்கத்தக்கதா?

அரசமைப்புச் சட்டப்படி பழைய நாடாளுமன்றக் கட்டடம் இருக்கும்போது, 900 கோடி ரூபாய் செலவில் மற்றொரு புதிய கட்டடம், அதனுடைய தொடர்ச்சி கட்டடங்கள் இவை ஆடம்பர ‘டாம்பீக’ செலவு அல்லவா?

குடியரசுத் தலைவர், பிரதமர் வெளிநாடு போக, தனித்தனி விமானம், சகல வசதி கொண்ட அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்ட விமானம் என்பது போன்றவை ஆடம்பர செலவுகள் அல்லவா?

ஜனநாயகத்திற்கு நிரந்தர வழியனுப்பி வைக்கவே இந்த சர்க்கரை பூசிய தனி ஒரு ஏற்பாடு!

இதெல்லாம் உண்மை; நாட்டில் இனி வருங்காலத்தில் தேர்தல்களே நடக்காமல், ஜனநாயகத்திற்கு நிரந்தர வழியனுப்பி வைக்கவே அரசமைப்புச் சட்ட விதிகளை மாற்றி, இந்த சர்க்கரை பூசிய விஷ உருண்டை என தனி ஏற்பாடு!

‘We, the People’ - ‘மக்களாகிய நாங்கள்’ என்பதை அறவே குழிதோண்டிப் புதைக்கவே - அதற்காகவே இந்த சூழ்ச்சி வலை, கண்ணிவெடி ஏற்பாடுகள்!

நாடு தழுவிய பிரச்சாரப் பெருமழை பொழிய வேண்டியது அவசர அவசியம்!

இந்தச் சூழ்ச்சி வலையை மக்கள் புரிந்துகொள்ள நாடு தழுவிய பிரச்சாரப் பெருமழை பொழிய வேண்டியது அவசர அவசியமாகும்! சட்டப் போராட்டங்களும் தொடங்கலாம்!

அனைத்துக் கட்சிகளும் உடனடியாக களப் பணி ஏற்பாடுகளைச் செய்ய முந்தவேண்டும்!

banner

Related Stories

Related Stories