அரசியல்

வெளிச்சத்துக்கு வந்த அடுத்த முறைகேடு.. சரிந்த பங்குகள்.. சில மணி நேரத்தில் ரூ.35,600 கோடியை இழந்த அதானி !

OCCRP என்ற அமைப்பு மறைமுகமாகவும், முறைகேடாகவும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெளிச்சத்துக்கு வந்த அடுத்த முறைகேடு.. சரிந்த பங்குகள்.. சில மணி நேரத்தில் ரூ.35,600 கோடியை இழந்த அதானி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டியது. பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 24-வது இடத்துக்கு சரிந்திருந்தார். அவரது சொத்துமதிப்பு பல லட்சம் கோடி சரிந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

அதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், வேறு வழியின்றி அது குறித்த விசாரணைக்கு பங்குச்சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி ஒப்புக்கொண்டது. எனினும் அது குறித்த விவரங்கள் முறையாக வெளியிடப்படாமல் இருந்து வருகிறது.

வெளிச்சத்துக்கு வந்த அடுத்த முறைகேடு.. சரிந்த பங்குகள்.. சில மணி நேரத்தில் ரூ.35,600 கோடியை இழந்த அதானி !

இந்த நிலையில், OCCRP என்ற அமைப்பு மறைமுகமாகவும், முறைகேடாகவும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அதானி குடும்ப உறுப்பினர்கள் அல்லது வர்த்தக கூட்டாளிகள் மறைமுக நிதியை (Opaque Funds) பயன்படுத்தி அதானி குழும நிறுவன பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வாயிலாக வாங்கி விற்பனை செய்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளது.

மேலும் மொரிஷியஸ் நாட்டு நிறுவனங்கள் வாயிலாக அதானி குடும்பத்துடன் நீண்ட காலமாக வர்த்தக தொடர்பு கொண்டுள்ள நாசர் அலி ஷபன் அஹ்லி மற்றும் சாங் சுங்-லிங் ஆகியோர் அதானி குழும பங்குகளை சுமார் 430 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகைக்கு வாங்கியதாக அதில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் அதானி நிறுவனங்களின் 75 சதவீதத்திற்கும் அதிகமான பங்கீட்டை கொண்டு அதானி நிறுவன பங்கை செயற்கையாக உயர்த்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியான நிலையில் பங்குசந்தையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. இதன் காரணமாக இன்று பங்குசந்தை வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு 35,600 கோடி அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. மேலும் இந்த சரிவு தொடரும் என்றும் பங்கு சந்தை நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories