
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் அமைந்ததை சில ஊடகங்கள் ஏதோ புதிய பேரொளியைப் போல பூதாகரமாகக் காட்டுகின்றன. இது ஏற்கனவே பியூஸ் போன பல்புதான் என்பதை அவர்களது கடந்த கால தோல்வி வரலாறு சொல்லும்.
2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டசபைத் தேர்தலிலும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிட்டன. கூட்டணியாகத்தான் தோற்றன. எனவே, இவர்கள் சேர்ந்திருந்தாலும் தோல்விதான். பிரிந்து நின்றாலும் தோல்விதான்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 47 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 23 விழுக்காட்டையும், பா.ஜ.க. கூட்டணி 18 விழுக்காட்டையும் பெற்றது. அ.தி.மு.க.வின் விழுக்காட்டையும் பா.ஜ.க. விழுக்காட்டையும் கூட்டினால் 41 விழுக்காடு தான் வருகிறது. 47 ஐ தாண்டவில்லை. இதுகூட, தோற்ற அந்த இரண்டு கட்சிக்கும் தெரியவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை சட்டமன்றத் தொகுதி வாரியாகக் கணித்து அப்போதே 'தி இந்து' நாளிதழ் ஒரு கட்டுரை தீட்டியது.
"222 சட்டமன்றத் தொகுதி வாரியாக தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகள் பெற்றுள்ளது” என்று 'தி இந்து' ஆங்கில நாளிதழ் அதில் குறிப்பிட்டது.
அந்தக் கட்டுரையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 222 சட்டமன்றத் தொகுதி வாரியாக தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகள் பெற்றுள்ளது என்றும், 222 சட்டமன்ற தொகுதிகளில் மற்ற கட்சிகளை காட்டிலும் தி.மு.க. கூட்டணிக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளது என்றும், 32 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய 192 சட்டமன்றத் தொகுதிகளில்முழுமையாக தி.மு.க. கூட்டணியே அதிக வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது என்றும் சொல்லப்பட்டது.
திருவள்ளூர், தென்சென்னை, அரக்கோணம், பெரம்பலூர், கரூர், திருச்சி, கோவை, நாமக்கல், நீலகிரி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி மக்களவை தொகுதிகளில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிக வாக்குகளைத் தி.மு.க. கூட்டணி பெற்றுள்ளது என்றும் 'தி இந்து' சொல்லி இருந்தது.

மக்களவைத் தேர்தல் வாக்கு விவரங்களின்படி & சட்டசபைத் தொகுதி களில் மட்டுமே அ.தி.மு.க. முன்னணியில் இருக்கிறது. 3 தொகுதிகளில் பா.ம.க. அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. பா.ஜ.க. எந்த சட்டமன்றத் தொகுதியிலும் கூடுதல் வாக்குகளை வாங்கவில்லை. எனவே, தேர்தலுக்கு முன்னதாகவே அவர்களது தோல்வி முகத்தை நாம் எளிதில் கணிக்கலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க.வுக்கு எதுவுமே இல்லை என்பதும் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மை ஆகும். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் வரலாறு என்ன?
1984 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் 1989 தேர்தலில் 3 இடங்களிலும், 1991 தேர்தலில் 15 இடங்களிலும், 1996 தேர்தலில் 37 இடங்களிலும் போட்டியிட்டு, ஒரு தொகுதியில்கூட தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. பா.ஜ.க. முதன்முறையாக 1996 சட்டசபைத் தேர்தலில் ஒரு இடத்தில் வென்று, சட்டசபைக்குள் நுழைந்தது.
1998 நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளை பா.ஜ.க.வுக்கு ஒதுக்கினார் ஜெயலலிதா. 3 தொகுதிகளில் பா.ஜ.க. வென்றது. 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது பா.ஜ.க.. அந்த கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட, 4 இடங்களில் பா.ஜ.க. வென்றது.
2001 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. 21 தொகுதிகளில் போட்டியிட்டு, 4 இடங்களில் வென்றது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கினார் ஜெய லலிதா. அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது.
2006 சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டது பா.ஜ.க.. 225 தொகுதிகளில் போட்டியிட்டு, 221 இடங்களில் டெபாசிட் இழந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தொகுதியிலும் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. 2011 சட்டசபைத் தேர்தல் 200-க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க. தனி அணியாகப் போட்டியிட்டது. 198 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது.
2016 சட்டசபைத் தேர்தலில் 188 இடங்களில் போட்டியிட்டு 180 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது பா.ஜ.க.. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் போட்டியிட்டது பா.ஜ.க. இந்தக் கட்சியும் முழுமையாகத் தோற்றது. அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது.






