வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து.இதையடுத்து கடந்த மாதம் சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாகப் பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பின்னர் இந்த வன்முறை மாநில முழுவதும் பரவியுள்ளது.கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த வன்முறையில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தாமல் அமைதி காத்து வரும் ஒன்றிய அரசைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட அங்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி சென்ற சிறுமி ஒருவர் பள்ளி வளாகத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று நடைபெற்ற ஒரு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், 3 லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று மணிப்பூரில் பெண் வர்த்தகர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், ஹுய்ரம் பினோதினி தேவி என்ற பெண் செய்தியாளர்களிடம் பேசியது இந்திய முழுக்க கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பேசியதாவது " கடந்த 2 மாதமாக போராட்டம் தொடரும் நிலையில் , மத்தியில் ஆட்சி செய்யும் தலைவர்கள் இதுவரை ஆறுதல் வார்த்தை ஏதும் சொல்லாதது வருத்தத்தை தருகிறது. பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா போன்றவர்கள் மெளனமாக இருப்பது நாங்கள் இந்தியர்களே இல்லை என்ற உணர்வை உருவாக்குகிறது. மணிப்பூர் மக்களும் இந்திய குடிமக்கள்தான். எங்களுடைய உணர்வுகளை ஒன்றிய அரசு கேட்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.