அரசியல்

“2 கோடி வேலை வாய்ப்புகள் பற்றி யாரும் வாய் திறக்கக்கூடாது”: பாஜக தேர்தல் நாடகம் அம்பலம் - தினகரன் நாளேடு!

ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் பற்றி யாரும் வாய் திறக்கக்கூடாது. கேட்டால் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு இந்தியாவை காட்டுவார்கள்

“2 கோடி வேலை வாய்ப்புகள் பற்றி யாரும் வாய் திறக்கக்கூடாது”: பாஜக தேர்தல் நாடகம் அம்பலம் - தினகரன் நாளேடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

"புதிய ஊழியர்களை தேர்வு செய்வதில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்த காலதாமதமே 18 மாதங்களில் 10 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டிய சூழலுக்குத் தள்ளியிருக்கிறது" என்று ‘தினகரன்’ நாளேட்டின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து 15.6.2022 தேதிய ‘தினகரன்’ நாளேட்டின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது :

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக 2014ம் ஆண்டு தோ்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்தார் பிரதமர் மோடி. இன்று 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார் அவ்வளவுதான். பிரதமராக மோடி பதவி ஏற்ற போது இருந்த நல்ல சூழல் இன்று இல்லை. 2 ஆண்டுகளை கொரோனா முற்றிலுமாக தின்றுவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு உச்சத்தில் இருக்கிறது. சமையல் காஸ் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயை தாண்டிவிட்டது. பல இடங்களில் வேலை இழப்பு. நிமிர்ந்து நிற்க வேண்டிய நிறுவனங்கள் நலிந்து போய்விட்டன.

பல சிறுகுறு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. வேலைஇழந்தவர்கள் ஏராளம், கடன், வறுமையால் உயிர் துறந்தவர்கள் ஏராளம். எதிலும் ஒரு கணக்கு இல்லை. கொரோனாவால் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதில் கூட இன்னும் ஒரு தெளிவு இல்லை. அப்படி இருக்கும் போது வேலை வாய்ப்பு இழந்தவர்கள் எத்தனை பேர், வேலைக்காக காத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்ற பட்டியல் மட்டும் கிடைத்து விடுமா என்ன?

ஆனால் ஒன்றிய அரசு அலுவலகங்களில் மொத்தம் உள்ள 40.05 லட்சம் பணியாளர்களில் 2020 மார்ச் 1ம் தேதி கணக்குப்படி 31.32 லட்சம் பேர் தான் பணியில் இருந்தனர். அதாவது 8.72 லட்சம் காலிப்பணியிடம். தற்போது அந்த எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டுவிட்டது.

காலிப்பணியிடம் உருவாக உருவாக அதை நிரப்பவேண்டும். ஆனால் கொரோனா காலம், நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிய ஊழியர்கள் தேர்வு செய்வதில் ஒன்றிய அரசு செய்த காலதாமதம் இன்று 18 மாதங்களில் 10 லட்சம் பேரை நிரப்ப வேண்டிய சூழலுக்கு கொண்டு வந்து தள்ளியிருக்கிறது. அத்தனை பணிச்சுமைக்கு மத்தியில் ஒன்றிய அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். எங்கும், எதிலும் காலிப்பணியிடம் இல்லாத துறைகள் இல்லை. 2024ம் ஆண்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்கு முன்னதாக காலிப்பணியிடங்களை நிரப்பும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த அனைத்து துறைகளின் காலிப்பணியிடம் குறித்து ஆலோசனை கூட்டத்தில் 10 லட்சம் காலிப்பணியிடம் இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 மணி நேரம் ஒன்றிய அரசுத்துறை செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதன் அடிப்படையில் 18 மாதங்களில் இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

ரயில்வே உள்பட ஒன்றிய அரசின் முக்கிய துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் இனி வேகமாக நிரப்பப்படும். அதன் மூலம் 10 லட்சம் புதிய முகங்கள் ஒன்றிய அரசு துறைகளில் பணி பெறுவார்கள். ஆனால் ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் பற்றி யாரும் வாய் திறக்கக்கூடாது. கேட்டால் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு இந்தியாவை காட்டுவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories