அரசியல்

“இது ஆளுநருக்கு அழகா? - RN.ரவியின் ‘சனாதன ஆதரவு’ பேச்சு ஆபத்தை உருவாக்கும்”: எச்சரிக்கும் தினகரன் நாளேடு!

ஒன்றிய அரசின் முகத்தை தமிழகத்தில் பிரதிபலிக்கும் கண்ணாடியாக ஆளுநர் செயல்படுவது ஆபத்தை உருவாக்கும் என ‘தினகரன்’ நாளேடு கண்டனம் தெரிவித்துள்ளது.

“இது ஆளுநருக்கு அழகா? - RN.ரவியின் ‘சனாதன ஆதரவு’ பேச்சு ஆபத்தை உருவாக்கும்”: எச்சரிக்கும் தினகரன் நாளேடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக மக்களின் உணர்வுகளை உள்ளடக்கிய மசோதாக்களை நீண்ட காலமாக கிடப்பில் போட்டுவிட்டு ஒன்றிய அரசின் முகத்தை தமிழகத்தில் பிரதிபலிக்கும் கண்ணாடியாக ஆளுநர் செயல்படுவது ஆபத்தை உருவாக்கும் என ‘தினகரன்’ நாளேடு 13.6.2022 தேதியிட்ட இதழில் ‘ஆளுநருக்கு அழகா’? என்ற தலைப்பில் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதுவருமாறு:-

சனாதன தர்மத்தின் ஒளியால் உருவாக்கப்பட்டதே இந்தியா என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மீண்டும் தனது பேச்சால் சர்ச்சையின் வலைக்குள் சிக்கியிருக்கிறார். இந்தியாவை பொறுத்தவரை ஆளுநர் பதவி என்பது கட்சிகளை கடந்து சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு நடுநிலை நாயகமான பதவியாகவே கருதப்படுகிறது. அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் கூட ஆளுநர் பதவிக்கு வந்தபிறகு, அதற்குரிய பொறுப்போடு நடந்திருக்கின்றனர். ஆனால் தமிழக ஆளுநரின் சமீபத்திய பேச்சுகள், அவர் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்பதையே தொடர்ந்து காட்டுகிறது.

சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் சென்னை வானகரத்தில் ஹரிவராசனம் பாடல் இயற்றப்பட்ட நூற்றாண்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ரவி, ‘‘சனாதன தர்மத்தில் உருவாக்கப்பட்டதே இந்தியா. மரத்தின் கிளைகள், இலைகள் விரிவதுபோல, நமது எண்ணங்கள், செயல்பாடுகள் வேறுபடலாம். ஆனால் மரத்தின் வேர் போன்று பரமேஸ்வரா என்பது ஒன்றே என சனாதனம் கூறுகிறது.’’ என ஆன்மிக கருத்துகளை அள்ளி வீசியிருக்கிறார். மேலும் இந்திய அரசியலமைப்பானது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளதாக அவர் கூறியிருப்பதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது கருத்துக்கு தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மதவாத, சனாதன கருத்துகளை பொறுப்பான பதவியில் இருந்து கொண்டே ஆளுநர் கூறுவது ஆச்சரியமளிக்கிறது. ஆர்எஸ்எஸ்சிற்கு ஆதரவாகவும், பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளராகவும் ஆளுநர் இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பழைய வரலாறுகளை மீண்டும் பேசுகிறேன் எனக் கூறிக் கொண்டு மதவாத சக்திகளுக்கு ஆதரவாகவும் அக்கூட்டத்தில் ஆளுநர் பேசியுள்ளார்.

‘‘சோமநாதர் கோயில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷவார் போன்ற நகரங்களை கஜினி முகம்மது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம்’’ என ஆளுநர் சந்தடி சாக்கில் தெய்வம் நின்று கொல்லும் என்கிற கருத்தை மெய்ப்பிப்பதாக கூறிக் கொண்டு, வெடிகுண்டு கலாசாரத்திற்கு ஆதரவாகவும் பேசியுள்ளார்.

இந்தியா என்பது சமயசார்பற்ற நாடு மட்டுமல்ல. பல்வேறு மொழிகள், இனங்கள், மாநிலங்கள் இருப்பினும் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற நாடாகவே உள்ளது. ஆளுநர் பதவியில் உள்ளவர்களே இத்தகைய கருத்தை தெரிவிக்கும்போது, அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் போக்கு உருவாகும். தமிழக ஆளுநரின் சர்ச்சை பேச்சுகள் கடந்த சில மாதங்களாகவே தொடர்கிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த மாதம் பி.எப்.ஐ குறித்து அவர் கூறிய கருத்துகளும் சர்ச்சையை கிளப்பின. இஸ்லாமிய அமைப்புகளின் கண்டனத்திற்கு அவர் உள்ளானார். தமிழக மக்களின் உணர்வுகளை உள்ளடக்கிய மசோதாக்களை நீண்டகாலமாக கிடப்பில் போட்டுவிட்டு, ஒன்றிய அரசின் முகத்தை தமிழகத்தில் பிரதிபலிக்கும் கண்ணாடியாக ஆளுநர் செயல்படுவது ஆபத்தை உருவாக்கும். அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளாக இருப்பதும், ஆளுநர் ஆளுநராகவே இருப்பதும்தான் இந்தியாவிற்கு வலு சேர்க்கும்.

banner

Related Stories

Related Stories