அரசியல்

‘பிரமித்துப் போயுள்ளேன்’: நரிக்குறவர் இன மக்களின் மனதில் இடம் பிடித்த முதலமைச்சர் - காங். MLA நெகிழ்ச்சி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் இன மக்களுடனே உண்டு, அளவளாவி, அவர்களின் தேவையை நிறைவேற்றியுள்ளதை பார்த்து பிரமித்துப் போயுள்ளேன் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

‘பிரமித்துப் போயுள்ளேன்’: நரிக்குறவர் இன மக்களின் மனதில் இடம் பிடித்த முதலமைச்சர் - காங். MLA நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ். தர்ஷினி ஆகியோரது வீடியோ பதிவினை பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 16.3.2022 அன்று அம்மாணவிகளை தலைமைச் செயலகத்தில் அழைத்துப் பேசினார்.

அப்போது, அம்மாணவிகள் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் வகுப்பில் சேர்த்திட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், தாங்கள் வசிக்கும் ஆவடி நரிக்குறவர் குடியிருப்புகளை மேம்படுத்திடவும், தங்கள் கல்விக்கு தேவையான உதவிகளை செய்திடவும் கேட்டுக் கொண்டார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ அழைப்பில் ஆவடி நரிக்குறவர் குடியிருப்பு மக்களிடம் உரையாடினார். அப்போது அம்மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் வர வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தனர்.

‘பிரமித்துப் போயுள்ளேன்’: நரிக்குறவர் இன மக்களின் மனதில் இடம் பிடித்த முதலமைச்சர் - காங். MLA நெகிழ்ச்சி!

அதனையேற்று, முதலமைச்சர் ஆவடியில் இன்று நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று, அம்மக்களிடம் கலந்துரையாடினார். பின்னர், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முதலில், திருமுல்லைவாயல் குடியிருப்பு பகுதியில் உள்ள ஜெயா நகரில் நரிக்குறவர் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை 39 நபர்களுக்கும், குடும்ப அட்டை 20 நபர்களுக்கும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை 4 நபர்களுக்கும், சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி 38 நபர்களுக்கும் என மொத்தம் 101 நரிக்குறவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, ஆவடி பருத்திப்பட்டுக் கிராமத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் மாணவி தர்ஷிணி வீட்டிற்குச் சென்று உணவு உண்டார். மேலும், மக்கள் பயன்பட்டிற்காக உயர் மின்கோபுர விளக்குகளையும், குடிநீர்த் தொட்டிகளையும் திறந்து வைத்தார். அதன் பிறகு, நரிக்குறவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை 30 நபர்களுக்கும், குடும்ப அட்டை 18 நபர்களுக்கும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 6 நபர்களுக்கும், கிராம நத்தம் பட்டா 46 நபர்களுக்கும் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி 22 நபர்களுக்கும் என மொத்தம் 122 பயனாளாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

அப்போது அம்மக்கள் “எங்கள் குடியிருப்புக்கு நீங்கள் நேரில் வந்ததை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை, எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது, நீங்கள் பொறுப்பேற்றவுடன் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், சாலைகள், குடிதண்ணீர் வசதி ஆகியவற்றை அமைத்துக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி” என்று தெரிவித்துக் கொண்டனர்.

‘பிரமித்துப் போயுள்ளேன்’: நரிக்குறவர் இன மக்களின் மனதில் இடம் பிடித்த முதலமைச்சர் - காங். MLA நெகிழ்ச்சி!

அதற்கு முதலமைச்சர் “எது தேவையானாலும், எப்போது வேண்டுமானாலும், மாவட்ட நிர்வாகத்தையும், என்னையும் அணுகலாம் என்றும், கடந்த மார்ச் 31-ஆம் தேதி டெல்லிக்குச் சென்று இந்தியப் பிரதமரை சந்தித்தபோது கூட, நரிக்குறவர் சமுதாயத்தை பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்தி மனு வழங்கினேன்” என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி வீட்டிற்குச் சென்று கலந்துரையாடினர். அப்போது முதலமைச்சருக்கு இட்லி, வடை மற்றும் கறிக்குழம்பு வழங்கினர். முதலமைச்சர் அதை அன்போடு பெற்றுக்கொண்டார். பின்னர் அருகிலிருந்த சிறுமிக்கும் இட்லி ஊட்டினார். முன்னதாக நரிக்குறவ மாணவிகள் அவருக்கு பாசி மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அது அனைத்தையும் மகிழ்ச்சியுடன் அவர் ஏற்றுக் கொண்டார்.

நரிக்குறவர் வீட்டில் அமர்ந்து முதலமைச்சர் உணவு அருந்தியது நரிக்குறவர் சிறுமிக்கு இட்லி ஊட்டியது உள்ளிட்ட வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. முதலமைச்சரின் இந்த செயலை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “1968 ல் வெளிவந்த ஒளிவிளக்கு படத்தில் எம்ஜிஆர் அவர்கள் ஜெமினி ஸ்டுடியோவில் துணை நடிகர்களுடன் நரிக்குறவர் போன்று வேடமிட்டு, பாட்டுப்பாடி ஆடியதைப் பார்த்து, சிறுவனாக இருந்தபோது பிரமித்தேன். நடிப்புக்காக செட் போட்டு எடுத்தது என்று பின்னாளில் தெரிந்தது.

ஆனால், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த மக்களுடனே உண்டு, அளவளாவி, அவர்களின் தேவையை நிறைவேற்றியுள்ளதை பார்த்து உண்மையிலேயே பிரமித்துப் போயுள்ளேன். மகிழ்ச்சியடைந்தேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories