அரசியல்

ஆளுநர் ஏன் மக்களின் துயரத்தில் பங்கேற்க கூடாது? அரசியல் மட்டும்தான் செய்வாரா.. கரூர் MP ஜோதிமணி கேள்வி!

மக்களுடைய துயரத்தில் பாஜக விளம்பரம் தேடும் நேரத்தில் தமிழக முதல்வரும் அவரது தலைமையில் உள்ள நிர்வாகமும், காவல்துறையும் மிக தீவிரமாக பணிகளை மேற்கொண்டதாலேயே வெள்ள பாதிப்புகளை கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

ஆளுநர் ஏன் மக்களின் துயரத்தில் பங்கேற்க கூடாது? அரசியல் மட்டும்தான் செய்வாரா.. கரூர் MP ஜோதிமணி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ஆகியோருடன் சென்று இன்று பார்வையிட்டார் கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது,

மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு மூத்த அமைச்சர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழுவிடம் இழப்பீடு குறித்து விளக்கி கூறி உரிய நிவாரணம் பெற்றுத் தருவதற்காகன முயற்சிகளை மேற்கொள்வோம். தமிழக அரசின் நடவடிக்கை மிக சிறப்பாக உள்ளது. கணுக்கால் அளவு தண்ணீரில் பாஜகவினர் படகில் செல்கின்றனர். மக்களுடைய துயரத்தில் பாஜகவினர் விளம்பரம் தேடும் நேரத்தில் தமிழக முதல்வரும் அவரது தலைமையில் உள்ள நிர்வாகமும், காவல்துறையும் மிக தீவிரமாக பணிகளை மேற்கொண்டதாலேயே வெள்ள பாதிப்புகளை கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வரிடம் பேசியதை நாங்கள் வரவேற்கிறோம். குறைந்தபட்சம் 2,000 கோடியாவது கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டிருந்த நிலையில், இன்று வரை ஒன்றிய அரசிடமிருந்து எந்த ஒரு நிதியும் வரவில்லை. நமக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி கூட நிலுவையில் உள்ளது. தமிழகத்திற்கு தேவையான நிதியுடன் வெள்ள பாதிப்புக்கான நிதியையும் ஒன்றிய அரசு உடனடியாக அளிக்க வேண்டும். இதனை நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் வலியுறுத்துவோம்.

தமிழக அரசு இழப்பீடு எவ்வளவு என்று கணக்கிட்டு அதனை ஒன்றிய அரசுக்கு அனுப்பி உள்ளது. ஒன்றிய அரசு இங்கு வந்து பார்வையிட வேண்டுமென்றால் பார்வையிடலாம். அனைவரும் களத்தில் தான் உள்ளோம். தமிழக அரசு தெளிவாக முடிவு செய்துதான் ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளது.

இந்நேரத்திற்குள் நிதி வந்திருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கக்கூடிய ஒன்றிய அரசாக உள்ளது. உடனடியாக தமிழக மக்கள் துயரத்தில் பங்கேற்று தமிழக மக்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் தமிழக அரசோடு சேர்ந்து களத்தில் ஒன்றிய அரசு நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

மாநில அரசுக்கான அதிகாரங்களும் கவர்னருக்கு இல்லாத அதிகாரங்களும் அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் வரம்பு மீறி நடந்து கொள்வதை தமிழக அரசும், அரசியல் கட்சிகளோ, தமிழக மக்களோ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ்நாடு வெள்ளத்தில் மிதக்கும் நேரத்தில் ஏன் ஆளுநர் மாளிகை விட்டு வெளியில் வந்து தன்னுடைய பொற்பாதங்களை வெளியே எடுத்து வைத்து மக்களின் துயரத்தில் பங்கேற்க கூடாது.

ஆளுநர் ஏன் குடியரசுத் தலைவர் மூலமாக ஒன்றிய அரசிடம் தமிழகத்திற்கு இவ்வளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது உடனடியாக தமிழகத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்கக்கூடாது. மக்களின் பிரச்சனையை தமிழக அரசு மட்டும்தான் தோளில் சுமக்க வேண்டும் என்ற சூழலில் ஆளுனர் அரசியல் மட்டுமே செய்வார் என்பதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

banner

Related Stories

Related Stories