அரசியல்

எடியூரப்பாவின் திடீர் டெல்லி விஜயம்; உண்மைக் காரணம் என்ன? - சிலந்தி கட்டுரை!

கர்நாடக முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கர்நாடக பா.ஜ.க. வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது என்பதை சிலந்தியின் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எடியூரப்பாவின் திடீர் டெல்லி விஜயம்; உண்மைக் காரணம் என்ன? - சிலந்தி கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா - பிரதமர் சந்திப்பை நமது தமிழக ஊடகங்கள் ‘மேகதாது’வில் அணை கட்டிட ஒப்புதல் பெற சென்றுள்ளார். தமிழக அனைத்துக் கட்சிக் குழுவைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் மேகதாது குறித்து பிரதமரிடம் பேச டெல்லி விரைகிறார் என்ற பரபரப்புச் செய்திகளை அள்ளித் தந்தன.

அதே நேரத்தில் கர்நாடக ஊடகங்கள் மாநில முதல்வரின் டெல்லி விஜயம் குறித்து தந்த தகவல்கள் வேறாக இருக்கின்றன. கடந்த சில மாதங்களாக கர்நாடக முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கர்நாடக பா.ஜ.க. வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது. எடியூரப்பாவின் அமைச்சரவை சகாக்களில் சிலரும் - சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் எடியூரப்பாவை மாற்றியே தீர வேண்டும் என்பதில் திடமாக உள்ளனர். பி.ஜே.பியின் கர்நாடகத் தலைவர்கள் சிலர் எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்கிட வேண்டும் என்பதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

எடியூரப்பா மீதும் அவர் குடும்ப உறுப்பினர்கள் மீதும் ஊழல் புகார் இருப்பதாகவும், 79 வயது நிரம்பிய அவரை முதல்வராக வைத்து அடுத்த தேர்தலை சந்திப்பது கடினம் எனக் கூறியும் எடியூரப்பா பதவி விலகக் கோரி அவர்கள் வற்புறுத்துகின்றனர். எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் பா.ஜ.க. எம்.பி., ஷோபாகரன் லஜ்ஜியை மத்திய அமைச்சராக்கியது, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பல யூகங்களை உருவாக்கியது! எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியிலிருந்து விலக்கிடும் நோக்கோடுதான், அவரை சமாதானப்படுத்த ஷோபாவை மந்திரியாக்கியுள்ளனர் என்றும் பரவலாகப் பேசத் தொடங்கினர்.

டெல்லியிலிருந்து சரியான - தெளிவான அறிவிப்பு ஏதும் இல்லாத நிலையில், "நித்யகண்டம் பூரண ஆயுசு"... எனும் நிலையில் முதலமைச்சர் பதவியிலிருந்து பொறுப்புகளை ஆற்றுவது என்பது மிகப்பெரும் சிக்கலானது எடியூரப்பாவுக்கு! ஊடகங்கள் நித்தம் நித்தம் அவற்றின் பங்காக பலவித ‘ஹேஸ்ய’ங்களை ஊதி பெருமாளைப் பெத்த பெருமாளாக்கி வந்தன! இந்தச் சூழலில் டெல்லி சென்று பிரதமர், அமித்ஷா மற்றும் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து தனது பதவியை உறுதிப்படுத்திக்கொள்ள உத்ரவாதம் பெற்றிட சென்ற எடியூரப்பா - தான் டெல்லி செல்வதின் உண்மை காரணத்தை வெளிப்படையாக அறிவிக்க இயலாத சூழலில் - பல திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் அனுமதி பெறவும், அதில் மேகதாது அணைகட்டும் திட்டமும் அடக்கம் என்று கூறிச்சென்றார்.

எடியூரப்பாவின் திடீர் டெல்லி விஜயம்; உண்மைக் காரணம் என்ன? - சிலந்தி கட்டுரை!

ஆனால் நமது தமிழக ஊடகங்கள் -மேகதாது திட்டம் தொடங்க அனுமதி பெறவே அவர் டெல்லி சென்றது போல ‘பரபரப்பு’ செய்திகள் வெளியிட்டன! தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகள் குழு டெல்லி சென்று - மேகதாது அணை கட்டும் முடிவை தடுத்து நிறுத்த வேண்டும் என உரிய அமைச்சரைச் சந்தித்து விளக்கமளித்து வந்துள்ளனர்! இந்த நிலையில் அதன் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில், எடியூரப்பா பிரதமரைச் சந்தித்தது மேகதாது அணைக்கு அனுமதி பெற என்றும் மேகதாது அணைக் கட்டப்பட்டே தீரும் என எடியூரப்பா கூறியதாகவும் செய்தி வெளியிடுகின்றன! பிரதமரைச் சந்தித்த பின் மேகதாது அணைகட்டுவது தொடர்பாக பிரதமர் என்ன கருத்துக் கூறினார் என்று கூறாமல் மேகதாது அணை கட்டியே தீருவோம் என எடியூரப்பா கூறியதை, ‘ஏதோ பிரதமர் அனுமதி அணைக்கு பெற்றுவிட்டது’ போல ஏடுகள் கொட்டை எழுத்தில் போட்டும், தலைப்புச் செய்தியாக ஊடகங்களும் வெளியிடுகின்றன.

எடியூரப்பா டெல்லி விஜயம் குறித்து, பெங்களூரிலிருந்து வெளிவரும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு, “CM meets PM, Shrugs Off talk on leadership Change.” ‘முதலமைச்சர் - பிரதமர் சந்திப்பு: தலைமை மாற்றம் குறித்து பேச்சுப் பற்றி (கேட்ட கேள்வியை) தோளை குலுக்கி அலட்சியப்படுத்தினார்.’ - எனும் பொருள்படத் தலைப்பிட்டுள்ளது. “yediyurappa meets Modi in Delhi, laughs off leadership Change chatter” எடியூரப்பா - டெல்லியில் மோடியை சந்தித்தார். தலைமை மாற்றம் குறித்த பேச்சை சிரித்து ஒதுக்கினார். - என பெங்களூரு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’- தலைப்பிட்டுள்ளது! இதே போன்று எடியூரப்பா - மோடி சந்திப்பு குறித்து மற்ற மற்ற ஏடுகளும் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன! தன் பதவியைத் தக்க வைக்க எடியூரப்பா செய்த டெல்லி விஜயத்துக்கு - அவர் பல்வேறு காரணம் கூறி இருந்தாலும் உண்மைக் காரணம் இது எனும் போது, மேகதாது பிரச்சினைக்காகவே அவர் டெல்லி சென்றதுபோல - தலைப்பிட்டு தேவையற்ற தகிப்புகளை விதைப்பதில் என்ன ஆனந்தமோ நமது ஊடகங்களுக்கு.

எடியூரப்பாவின் டெல்லி பயணத்தில் அவருடன் அவரது மகன்தான் சென்றுள்ளார். தொடர்புடைய அமைச்சர்களோ, அதிகாரிகளோ யாரும் செல்லவில்லை - என்பதும், அவர் சென்றது தனது பதவியை காத்திட என்பதும் தெளிவான உண்மையாக காட்சி தரும் வெள்ளிடைமலை! அதேபோல தமிழ்நாடு முதல்வர் டெல்லி செல்ல இருக்கிறார் - என்ற செய்தியை, எடியூரப்பாவைத் தொடர்ந்து, பிரதமரைச் சந்திக்க தமிழ்நாடு முதல்வர் டெல்லி செல்கிறார் - என ‘பிரேக்கிங்’ செய்தியாக வெளியிடுகின்றனர்! தமிழக முதல்வர் டெல்லி செல்கிறார் என்பது உண்மை! ‘பிரதமரைச் சந்திக்க’என்பது அவர்களது கற்பனையில் உதித்த ஒன்று.

ஏன் டெல்லி செல்கிறார்? எதற்காக என்பதை தெளிவாக அறிந்து வெளியிடாது அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் ‘ஹேஸ்ய’ங்களை செய்திகளாக்குவது, நாளை பலவித தேவையற்ற விவகாரங்களையும், விவாதங்களையும் உருவாக்கிவிடும், அது திசை திருப்பங்கள் பலவற்றிற்கு வித்திடும் என்பதை நமது ஊடகவியலாளர்கள் உணராதது ஏனோ? வரலாறாக வேண்டிய பல செய்திகளில் கற்பனை குதிரையை செலுத்தி - வதந்திகளைப் பரப்பி நாளைய வரலாற்று ஆசிரியர்களுக்கு குழப்பத்தை உருவாக்கி விடாதீர்கள் என ஊடகவியலாளர்களை வேண்டுகிறோம்.

banner

Related Stories

Related Stories