அரசியல்

’ஒன்றிய அரசு’ : தவறான திசையில் செல்லாதீர் என தமிழிசைக்கு சொல்லட்டும் - OPSக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி!

பொதுமக்கள் தடுப்பூசி போட்டுகொள்வதற்கு அதிகப்படியாக ஆர்வம் காட்டுவது சந்தோஷமாக உள்ளது. தடுப்பூசிகளில் எது சிறந்தது எனக் கூறுவது தவறான செய்தி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

’ஒன்றிய அரசு’ : தவறான திசையில் செல்லாதீர் என தமிழிசைக்கு சொல்லட்டும் - OPSக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

OPS அவர்கள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களிடம் தவறான வழியில் செல்லாதீர்கள் என்று கூறட்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அண்ணை வேளாங்கண்ணி கல்லூரியில் தமிழ்நாடு மீடியா கேமராமேன் அசோசியேசன் சார்பில் பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஊடகத்துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய யுவராஜ் மரணத்திற்கு மௌன அஞ்சலி செலுத்தபட்டது. யுவராஜின் குடும்பத்திற்கு நிவரணத் தொகையை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் வழங்கினார். இதில் தி.மு.க சிறுபான்மை நல உரிமைப்பிரிவின் இணைச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்ரமணியன் மேடையில் பேசியதாவது, ”முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பத்திரிக்கையாளர்களை மிகவும் மதிக்க கூடியவர். பத்திரிக்கை செய்திகளை அடிப்படையாக வைத்து மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து வந்தவர்.

அவரைப் போலவே நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பத்திரிக்கையில் வரும் அரசு தொடர்பான செய்திகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். எந்தத் துறையின் கீழ் செய்தி வருகிறதோ அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பத்திரிகையாளர்களுக்கு என தனியே தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.

கொரோனா இரண்டாவது அலைக்கு செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளும் அப்படியே இருக்கும். மூன்றாவது அலை வரும்பட்சத்தில் நம்மால் சமாளிக்க முடியும். கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு என தனியே 25 படுக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன ஊடகவியாளர்களுக்கான படுக்கை சரிவர பயன்படுத்தப்படுகிறதா என்பதை நானே நேரடியாக கவனித்து வந்தேன் என்று கூறினார். ஊடகவியலாளர்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

நிகழ்ச்சி முடிந்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது,

தடுப்பூசி வருகைக்கு ஏற்ப மக்களை வரவழைத்து தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கண்காணித்து வருகிறார்கள் என்றார். கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தால் முன்னுரிமை கொடுத்து முகாம்களில் அவர்களை பரிசோதித்து தடுப்பூசி செலுத்தப்படும்.

சென்னையை பொறுத்தவரை முழுமையாக தொற்று குறைந்துள்ளது, தேவைப்படும்போது சிகிச்சை மையங்கள் பரிசோதனை மையங்கள் மற்றும் பணியாளர்கள் அதிகப்படுத்தப்படுவர். பெரிய அளவிலான சந்தோசம் என்ன என்றால் பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் உள்ளது தான். போட்டி போட்டுக்கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி கூடுதலாக தடுப்பூசி பெற்று கொண்டிருக்கிறோம். இன்று இரவு அல்லது நாளை மேலும் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

மேலும் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் தகுதியுள்ள தடுப்பூசிகள் தான். ஐ.சி.எம்.ஆர் சான்று அளித்த பிறகுதான் தடுப்பூசி போடப்படுகிறது என்றும் இடையில் உள்ளவர்கள் எது சிறந்த தடுப்பூசி என்று கூறி தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

ஒன்றிய அரசு என்ற வார்த்தை குறித்து ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர், தமிழிசை சௌந்தரராஜன் ஒன்றியத்திற்கு மிகச்சிறப்பான விளக்கத்தை புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு விழாவின் போது சொல்லியுள்ளார், ஓபிஎஸ் அவர்கள் நேரடியாக தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு தவறான திசையில் நீங்களும் செல்லாதீர்கள் என அறிவுரை சொல்லலாம் என்றார்.

முதல்வர் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார், காணொலி வாயிலாக இன்று கூட ஒரு பதிவை ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கிறார். சென்னையில் கூட பத்து விழிப்புணர்வு வாகனங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

banner

Related Stories

Related Stories