அரசியல்

இந்திய அரசு ‘ஒன்றிய அரசுதான்’ - கானல் நீரை அள்ளிக்குடிக்க விரும்பும் தினமலருக்கு தி.மு.க நிர்வாகி பதிலடி!

ஒன்றிய அரசு என்று மத்தியில் உள்ள அரசை குறிப்பிடுவது, பிரிவினை வாதத்தின் மறுவடிவம் என்று கருதுவது தினமலர் நிருபரின் கற்பனை கனவாகவே தோன்றுகிறது என மதுரை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் விமர்சித்துள்ளார்

இந்திய அரசு ‘ஒன்றிய அரசுதான்’ - கானல் நீரை அள்ளிக்குடிக்க விரும்பும் தினமலருக்கு தி.மு.க நிர்வாகி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அரசை ஒன்றி அரசு எனக் குறிப்பிடுவது பிரிவினை சிந்தனை என தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டதற்கு பதிலடி கொடுத்துள்ளார் மதுரை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம்.

அதன் முழு விவரம் பின்வருமாறு:-

2.6.2021-ம் நாள் வெளிவந்த ‘தினமலர்’ செய்திப் பத்திரிக்கையில் 12-ம் பக்கத்தில் "ஒன்றியத்தில் ஒளிந்திருக்கிறதா பிரிவினை சிந்தனை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வடிவில் அந்த தினசரி பத்திரிக்கையின் நிருபர் எழுதி இருக்கிறார். அந்த செய்தித் தொகுப்பில் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் இந்தியாவை ஆட்சி செய்யும் அரசை "ஒன்றிய" அரசு என்று அழைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

பேச்சில் மட்டுமல்ல, தமிழக ஆட்சி தலைவர்களின் அலுவல் பூர்வமான அறிக்கைகளிலும் "ஒன்றியம்" ஒட்டிக்கொண்டிருகிறது என்று குறிப்பிட்டதோடு அது என்ன ஒன்றிய அரசு என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்? இந்த பத்திரிக்கையின் நிருபர் மேலும் தெரிவிக்கிறார், "மத்திய அரசு" தெரியும், "மைய அரசு" தெரியும், கொஞ்சம் தமிழ் கற்ற புலவர்கள் "நடுவண் அரசு" என்று அதையே சொல்வார்கள்". ஆனால், திடீர் என்று இப்போது ஏன் இந்த புதிய "ஒன்றிய" என்ற பயன்பாடு என மற்றுமொரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும், பல செய்திகள் இந்த ஒரு சொல்லுக்குள் ஒளிந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள் என்று தினமலர் நிருபர் குறிப்பிடுகிறார். இந்த பத்திரிக்கையின் நிருபர் எதற்காக இந்தக் காலகட்டத்தில் இப்படியொரு ஐயப்பாட்டை எழுப்பி அதற்கு விளக்கம் கூறுவதாக எண்ணிக்கொண்டு தங்களுடைய திரைமறைவு நோக்கங்களையும், சிந்தனைகளையும் இந்த "ஒன்றியம்" என்ற சொல் சிதைத்துவிடுமோ என்ற அச்சத்தில், கற்பனையான அனுமானங்களை தாங்களே இட்டுக்கட்டிக் கொண்டு, "இருட்டறையில் கறுப்புப் பூனையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பதுதான், இந்த செய்தித் தொகுப்பை கொஞ்சம் ஆழ்ந்து படிப்பவர்களுக்கு தெளிவாக விளங்கும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் (The Constitution ofIndia) 1949 நவம்பர் 26-ம் தேதி இந்திய நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியல் நிர்ணய சபையால் (Constituent Assembly) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 1950-ல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அமல்படுத்தப்படுகிறது. அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தினுடைய பகுதி 1-ல் (PART I) இந்திய ஒன்றியமும் அதன் எல்லைகளும் (THE UNION AND ITS TERRITORY) என்ற பகுதியில் முதல் பிரிவு (ARTICLE 1)-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி பாரத் என்று அழைக்கப்படும் இந்தியாவினுடைய எல்லைகள் என்பது இந்திய ஒன்றியத்தில் அடங்கிய மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கியதாகும். மாநிலங்களின் எல்லைகள் எதுவென்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் (9th Schedule) மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ம் ஆண்டே அமுலுக்கு வந்த நிலையில் மாநிலங்களின் கூட்டு ஆட்சி அமைப்புதான் மத்தியில் உள்ள ஒன்றிய அரசு என்பதும், தனித்தனி மாநிலங்களின் எல்லைகளும் ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களின் (UNION TERRITORIES) எல்லைகளையும் உள்ளடக்கியதுதான் இந்திய ஒன்றிய அரசின் எல்லைகள் ஆகும் என்பது அரசியல் சட்டத்திலேயே வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்து 70 ஆண்டுகளுக்கு பின்னர் திராவிட முன்னேற்ற கழகம் முத்தமிழறிஞர் கலைஞரின் மறைவிற்கு பின்னர் கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் தமிழகத்திலே ஆட்சி அமைத்ததை தொடர்ந்து அவரின் ஆட்சிப் பணிகளின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நேரடியாகச் சென்றடைகிறது, அதிலும் குறிப்பாக கொரோனா நோய் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களும் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் பெரிதும் பயனடைதுள்ளனர் என்பது தமிழ்நாட்டு மக்கள் அறிந்த உண்மைகளாகும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய சுற்றுப் பயணங்களும், மின்னல் வேக நடவடிக்கைகளும் அனைத்து மக்களையும் கவர்ந்திருக்கின்ற சூழலில் அந்தக் கவனத்தை திசை திருப்புவதற்காக தினமலர் நிருபர் உள்நோக்கத்தோடு "ஒன்றியம்" என்ற சொல்லில் பிரிவினை ஒளிந்திருக்கிறது என்ற திட்டமிட்டு வாதத்தை திசைதிருப்பும் நோக்கில் முன்வைக்கிறார்.

அவருடைய இந்த வாதம் ஆதாரம் இல்லாத அனுமானம், கானல் நீர், தனது நிழலை பார்த்தே அஞ்சும் சுபாபம் என்றுதான் கருத முடிகிறது. தமிழக மக்களுடைய முழுமையான கவனம் அனைத்தும் முதல்வரின் செயல்பாடுகளை நோக்கி ஒட்டுமொத்தமாக திரும்பி இருப்பதால், மக்களின் அந்தக் கவனத்தை மடைமாற்றம் செய்வதற்காக கற்பனையாக ஒன்றியம் என்ற சொல்லிற்கு தினமலர் பத்திரிக்கை நிருபர் புதிய பொருள் இருப்பதாக அகழாய்வும் ஆராய்ச்சியும் நடத்துகிறார்.

ஆம்! பொதுவெளியில் காற்றோடு சிலம்பம் சுற்றுகிறார். அவரின் இந்த முயற்சி படுதோல்வியை சந்திக்கும் என்பதில் எந்த விதமான ஐயப்பாடும் இல்லை. இந்திய அரசியல் நிர்ணய சபை 1946-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி முதன்முதலாகக் கூடி, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீண்ட விவாதங்கள், கலந்துரையாடல், வாக்கெடுப்புகள் என நடைபெற்று இன்றைய இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பண்டிட் ஜவஹர்லால் நேருவும், "பாபா சாகிப்" டாக்டர்.அம்பேத்கர் அவர்களும் பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய இந்திய நாட்டிற்கு பொருத்தமான ஆட்சி முறை "கூட்டாட்சி முறை" (Federation) தான் பொருத்தமானது என வாதிட்டவர்கள். அவர்களை தொடர்ந்து அரசியல் நிர்ணய சபையில் அங்கம் பெற்ற பல்வேறு தேசியத் தலைவர்கள் இந்தியாவிற்கு பொருத்தமான ஆட்சி முறை கூட்டாட்சிதான் என உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

இந்திய அரசு ‘ஒன்றிய அரசுதான்’ - கானல் நீரை அள்ளிக்குடிக்க விரும்பும் தினமலருக்கு தி.மு.க நிர்வாகி பதிலடி!

வரலாற்று ஆசிரியர்களும் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய துணைக்கண்டம் (SubContinent) என்று தான் குறிப்பிடுகிறார்கள். எனவே பல்வேறு மாநிலங்களின் கூட்டாட்சி அமைப்பு முறையை ஒன்றிய அரசு (Union Government) என்று அழைப்பதில் எந்த நோக்கமும், தவறும் இல்லை. ஒன்றிய அரசு என்று மத்தியில் உள்ள அரசை குறிப்பிடுவது, பிரிவினை வாதத்தின் மறுவடிவம் என்று கருதுவது தினமலர் நிருபரின் கற்பனை கனவாகவே தோன்றுகிறது. ஆனால், அதே நேரத்தில் பல்வேறு தேசிய இனங்களுடைய பூர்வீக வாழுமிடம் இந்திய துணைக்கண்டம் என்பதும் ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான தாய்மொழி, நாகரிகம், கலாச்சாரம் ஆகிய அடிப்படைக் கோட்பாடுகள் வேறுபாடும் என்கின்ற எதார்த்தத்தையும் அந்தப் பத்திரிக்கையின் நிருபர் புரிந்து கொள்ள மறுக்கிறார்.

அவருடைய நோக்கம் எல்லாம் இந்தியாவில் வாழ்கின்ற அனைத்து தேசிய இனங்களையும் ஒன்றாக்கி, அவர்களுடைய தனித்தன்மைகளை நிர்மூலமாக்கி, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்கின்ற ஒற்றை கலாச்சாரமும், "இந்து ராஷ்ட்ரியமும்" உருவாக்க வேண்டும் என்பதுதான். அந்த நோக்கத்தின் வெளிப்பாடாகத் தான் தினமலர் பத்திரிகை நிருபர் கானல் நீரை அள்ளிக்குடிக்க விரும்புகிறார். ஏமாற்றம்தான் அவருக்கு இறுதிப் பரிசாகக் கிடைக்கும். அதுமட்டுமல்ல வரலாறு உரிய பாடத்தை, உரிய நேரத்தில் நிச்சயம் கற்பிக்கும்.

banner

Related Stories

Related Stories