அரசியல்

மூடநம்பிக்கைகளுக்கு மாறான அறிவியல் பார்வையே இன்றைய தேவை; ஒன்றிய அரசு ஒருங்கிணைப்பு பணியையே செய்யட்டும்!

கொரோனா தடுப்பின் வெற்றி மாநில அரசுகளால்தான் சாத்தியம். இந்திய ஒன்றிய அரசு ஒருங்கிணைப்புப் பணியையே செய்யட்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

 மூடநம்பிக்கைகளுக்கு மாறான அறிவியல் பார்வையே இன்றைய தேவை; ஒன்றிய அரசு ஒருங்கிணைப்பு பணியையே செய்யட்டும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா ஒழிப்புத் தொடர்பாக பிரதமர் தெரிவித்துள்ள மூன்று அறிவிப்புகள் வரவேற்கத் தக்கவையே. கொரோனா தடுப்புப் பணியின் வெற்றி என்பது மாநில அரசுகளின் மூலம்தான் சாத்தியம் இந்திய ஒன்றிய அரசு ஒருங்கிணைப்புப் பணியையே செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:

கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாம் அலையின் வீச்சை எப்படி தடுத்து, ஒழிப்பது என்பதில் உலக நாடுகளைப் போலவே, ஒருபடி கூடுதலாக நம் நாட்டிலும் அந்தப் பெருங் கவலை நம் மக்களையும் ஆட்சியாளர்களையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. அதை உணர்ந்தே இந்திய ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

(‘மத்திய அரசு’ என்பதற்குப் பதிலாக இந்திய யூனியன் என்பதை ‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பது குறித்து தவறான கருத்து சிலரால் திட்டமிட்டுப் பரப்பப்படுவதால், இனிமேல் நமது சொல்லாக்கம் - எழுத்தாக்கத்தில் இந்திய ஒன்றிய அரசு என்றே பயன்படுத்துவோம்.

அதுபோல அதிகாரப்பூர்வமான சொல்லாட்சிப் பெயரான ‘தமிழ்நாடு’ என்னும் சொல்லே, ‘தமிழகம்‘ என்பதற்குப் பதிலாக பயன்படுத்தப்படும் என்று நமது வாசக நேயர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்)

இந்திய ஒன்றிய அரசு சார்பில் பிரதமர் மோடியின் செய்தி

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று விடுத்த செய்தியில் மூன்று முக்கிய அறிவிப்புகளை இந்திய ஒன்றிய அரசின் சார்பில் அறிவித்துள்ளார்.

1. தடுப்பூசிகளை இனி மொத்தமாக ஒன்றிய அரசே பல மருந்து நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கும்.

75 விழுக்காடு மாநிலங்களுக்கும், 25 விழுக்காடு தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2. தடுப்பூசி அனைவருக்கும் மாநிலங்கள் மூலம் இலவசமாகப் போடப்படும். (தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோர் அதற்குரிய பணத்தைக் கட்டி, போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி அவர்களுக்கு 150 ரூபாய்க்கு விலை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது).

3. நவம்பர் மாதம் வரை ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்.

- இம்மூன்று அறிவிப்புகளும் ஏற்கத்தக்க அறிவிப்புகளாகும் ‘Better late than never’ - “செய்யாததைவிட சற்று காலதாமதம் செய்தாவது செய்வது மேலானது” என்ற அந்த பழமொழிக்கொப்ப.

அறிவியலைப் பின்பற்றுவதே ஒரே வழி!

பிரதமர் மோடி, தடுப்பூசி மூலம்தான் கரோனாவை ஒழிக்க முடியும் என்று இப்போதாவது தெளிவான முடிவுக்கு வந்திருப்பது நல்லது. இதை அவரது கட்சியினருக்கும் அறிவுறுத்தி, அறிவியலை நம்ப வேண்டும் - பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

கைதட்டல், விளக்கேற்றுதல், யாகம் செய்வித்தல், பசுவின் சாணியை உடல் முழுவதும் பூசிக் கொள்ளுதல் மந்திர உச்சாடனங்கள் மூலம் கரோனாவை விரட்டுதல், ‘கோமியம்‘ குடித்தல் போன்றவை இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) கூறும் அறிவியல் மனப்பான்மையைப் பரப்புதல் என்ற அடிப்படைக் கடமைக்கு முற்றிலும் விரோதம் என்பதால், ஆய்வின்மூலம் கரோனாவை வலிமை இழக்கச் செய்யும் தடுப்பூசிகள்தான் ஒரே சரியான வழி என்பதை இந்தத் திட்டவட்டமான கொள்கை அறிவிப்பின் மூலம் ஒப்புக் கொண்டுள்ளார்.

மக்களில் சிலர் துவக்கத்தில் காட்டிய தயக்கம் படிப்படியாக மறைந்தது; அனைத்து வயது தரப்பினரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆயத்த மனப்பான்மையைப் பெறுகின்ற காலத்தில் நம் நாட்டில் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடும், அதை கொள்முதல் செய்வதில் ஒன்றிய அரசு எடுத்த சில நிலைப்பாடுகளும் அடிக்கடி மாற்றத்திற்குள்ளாகின.

ஒரு கட்டத்தில் மாநில அரசுகளே பொறுப்பு என்பதுபோல் கை விரித்த நிலைக்கும் சென்று, பிறகு நாட்டின் உச்ச நீதிமன்றமும், எதிர்க்கட்சிகளும், வல்லுநர்களும், பொதுவானவர்களும் சொன்ன கருத்துக்குச் செவி சாய்த்து, இந்த மாற்றம் அடைந்த ஒன்றிய அரசின் கொள்கை அறிவிப்பு இப்போது வந்துள்ளது!

மாநிலப் பட்டியலில் சுகாதாரம்

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பிரதமரின் இந்த அறிவிப்பை (இந்திய ஒன்றிய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்குக் கட்டணமின்றி விநியோகிக்கும் அறிவிப்பை) வரவேற்றுள்ள நிலையில், சுகாதாரம் மாநிலப் பட்டியலின் கீழ் இருக்கிறது என்று பிரதமர் தனது பேச்சில் பல முறை சுட்டிக்காட்டியிருப்பதால், அனைத்துத் தரப்பு மக்களும் தடுப்பூசி போடுவதற்குப் பதிவு செய்வது, சான்றிதழ் அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் அனைத்திலும் மாநில அரசுகளுக்கே முழு சுதந்திரம் அளிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறி வரவேற்றுள்ளார்.

தடுப்பூசிகள் கண்டுபிடிப்பை மேலும் விரிவாக்கும் அறிவிப்புகள் - அறிவியல் சாதனைகளாக - மூக்கில் செலுத்துதல் உள்பட ஆய்வு; மேலும் குழந்தைகள் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதும் பயனுறு முறையில் செயல்பட வேண்டுமானால், அது மாநில அரசுகள் மூலம்தான் முடியும் என்பதே யதார்த்த நிலை.

எனவே, மாநிலங்களுக்கு அரசமைப்புச் சட்டப்படி உள்ள உரிமைகளை அளித்து, ஒன்றிய அரசு ஒருங்கிணைப்பது மூன்றாம் அலை மிரட்டும் நேரத்தில், தக்கதொரு தடுப்பு ஏற்பாடாகவே அமையும். அறிவியல் நம்மை என்றும் கைவிடாது என்பதை ஒன்றிய அரசு மக்களுக்கு வலியுறுத்த வேண்டும்.”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories