அரசியல்

“எங்கள் தாயே தமிழ்நாடு தான்.. என்னதான் முண்டினாலும் இது ‘ஒன்றியம்’ தான்”: எழுத்தாளர் வே.ஸ்ரீராம் கட்டுரை!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகவே கூடி வாழ விரும்பும் இனம் தமிழினம். அது, கடல்கடந்து வென்றதுண்டு. கலகம் என்பது அதற்குத் தெரியாத ஒன்று. தயவுசெய்து அதன் ஆன்மாவை உரசிப் பார்க்காமல் அன்பு செய்யுங்கள்!

“எங்கள் தாயே தமிழ்நாடு தான்.. என்னதான் முண்டினாலும் இது ‘ஒன்றியம்’ தான்”: எழுத்தாளர் வே.ஸ்ரீராம் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பெற்றவளை ‘அம்மா’ என்றும் அழைப்போம். ‘தாயே’ என்றும் அழைப்போம். எப்படி அழைத்தாலும் பாசம் மாறிவிடப் போவதில்லை!

போலவே, இந்தப் புண்ணியத் திருமண்ணை நீங்கள் தமிழ்நாடு என்று அழைக்கச் சொன்னாலும் - தமிழகம் என்று அழைக்கச் சொன்னாலும் அதன் உள்ளார்ந்த உணர்வு மாறிவிடப் போவதில்லை!

இந்த மண்ணுக்காக உருகி உருகித் தொழுது இளைத்து மறைந்த படைப்பாளிகளில் சுப்பிரமணிய பாரதியாரை விஞ்சியவர் ஒருவர் இங்கே இருக்க முடியாது. அந்த மகாகவியே ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே…’ என்றுதானே பாடினார் !

மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தைப் பல்லாண்டுக்காலப் போராட்டத்துக்குப் பிறகு 1967 ஏப்ரல் 16இல் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றித் தீர்மானம் போட்டார் அன்றைய முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா.

அதன் பின்பும் இரண்டு ஆண்டுகள் இழுத்தடித்து, அந்தப் பெருமகனின் மறைவுக்கு ஏறத்தாழ 15 நாட்கள் முன்புதான் அதைச் சட்டமாக்கி அனுமதி அளித்தது அன்றைய ஒன்றிய காங்கிரஸ் அரசாங்கம்.

அப்படியெல்லாம் போராடிப் பெற்ற ஒன்றை போகிறபோக்கில் விமர்சனம் செய்வது சரிதானா? அவசியம்தானா?

பெயருக்கு நேரத்தைச் செலவிடுவதைவிட, இதுகாறும் மத்தியில் ஆண்டோர் - ஆள்வோர் ‘தலைமை’ நிலையில் இருந்துகொண்டு தமிழ்நாட்டுக்கு செய்துவிட்ட நன்மைகள் என்ன - செய்த புறக்கணிப்புகள் என்னவென்ன என்பதையெல்லாம் புறநானூற்று உதாரணங்களோடு அலசி ஆராய்ந்து, அழகிய கட்டுரையாக்கி அனுப்பி அறிவுறுத்தினால் நல்லது நடக்குமே! நாடு வளம் பெறுமே!

“எங்கள் தாயே தமிழ்நாடு தான்.. என்னதான் முண்டினாலும் இது ‘ஒன்றியம்’ தான்”: எழுத்தாளர் வே.ஸ்ரீராம் கட்டுரை!

அதை விட்டுவிட்டு மாநிலப் பெயரில் உனக்கு நாடு என்னும் பதம் தேவையா என்பதெல்லாம் என்னவிதமான சிந்தனை?

புரிகிறது! ‘இந்திய அரசாங்கம்’ என்று அழைக்காமல் ‘ஒன்றியம்’ என்று அழைத்தால் கொதிப்பு வரத்தான் செய்யும். அதற்கு என்ன செய்வது?

ஏன் அப்படி அழைக்கத் தோன்றுகிறது, அழைக்க வைத்தது எது, அப்படி அழைப்பது உறுத்துகிறது என்றால் அதைத் தவிர்ப்பதற்கான வழிகள் என்ன... என்றெல்லாம் ஆராய்வதுதான் நலம்பயக்கும். அதை விடுத்து வரைவிலக்கணத்தைக் காட்டிக்கொண்டிருப்பதால் வழி கிடைக்காது!

ஆம், உலை மட்டும் கொதித்துப் பலனில்லை. உள்ளே, அரிசியோ குருணையோ இருந்தால்தான் சோறு நிச்சயம். அல்லவெனில் சத்தம் மட்டுமே மிச்சம்.

இந்திய அரசாங்கத்துக்கு நம்மீது முழுமையான அக்கறை உண்டு என்னும் நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு இயல்பாக வந்தாக வேண்டும் அல்லவா? அந்த நம்பிக்கையை உண்டாக்கி நிற்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் முதற்கடமை அல்லவா?

வீட்டுக்குள் தட்டுப் பாத்திரம் வீசி எறியப்படும் அலையலோசை கேட்கிறதென்றால் அந்த வீட்டுத் தலைவன் ஏதோ குடைச்சல் கொடுக்கிறான் என்றுதானே பொருள்.

அது நீட்டோ, ஜி.எஸ்.டியோ, எழுவர் விடுதலையோ அல்லது குடியுரிமைச் சட்டமோ... எதுவாக இருந்தாலும் அமல்படுத்தும் உரிமையைத் தன்னகத்தே வைத்திருக்கும் ஒன்றிய அரசாங்கம், சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கம் ஒரு சந்தேகத்தை எழுப்பி வரும்போது அதற்கு முறையாக விளக்கம் கொடுக்க வேண்டியது அதன் கடமை அல்லவா?

‘எல்லாம் சரியாகத்தான் இருக்கும். போய் வேலையைப் பார்…’ என்னும் தலைமையாசிரியத்தன அணுகுமுறை சுமுகமான உறவுக்கு சரிப்படுமா? படாது!

ஒன்றை நன்றாக கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தமிழகம் ஒரு வளர்ந்த மாநிலம். அறிவுச் செல்வமும் - உழைக்கும் திறனும் மிகுந்த மாநிலம். இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களுள் மூன்றாவது இடத்தில் இருப்பது தமிழ்நாடு.

தன்னுடைய திறமையால் - உழைப்பால் - செலுத்தும் வரிப் பணத்தால் இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களை வாழவைத்துக் கொண்டிருப்பது தமிழ்நாடு.

அதற்குண்டான மரியாதையை அது எதிர்பார்ப்பதில் என்ன தவறு?

தொலைதூரத்தில் உழைத்துச் சம்பாதித்து, அதன் பெரும் பகுதியை வீட்டுக்கு அனுப்பிவைக்கும் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை கணக்கு கேட்டால் தப்பா?

ஓ…தகப்பனையே கணக்குக் கேட்பாயா... ஏன், தனிக்குடித்தனம் போகும் திட்டமா என்றெல்லாம் கேட்டு வாயடைப்பதில் நியாயமுண்டா?

சொல்லுங்கள்… தமிழ்நாட்டு மக்களின் மனதைப் புரிந்துகொள்ள - தமிழர்களின் விருப்பத்தை அறிந்துகொள்ள இரண்டு தேசியக் கட்சிகளும் இதுகாறும் காட்டிய அக்கறைதான் என்ன? இங்கே, மாநிலக் கிளை அலுவலகம் ஒன்றைத் திறந்துவைத்துக் கொண்டதைத் தவிர…

“எங்கள் தாயே தமிழ்நாடு தான்.. என்னதான் முண்டினாலும் இது ‘ஒன்றியம்’ தான்”: எழுத்தாளர் வே.ஸ்ரீராம் கட்டுரை!

தமிழ்நாட்டின் தேவைகளை, அபிலாஷைகளை இப்படியே தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டே இருப்பீர்கள் என்றால், இப்படித்தான் மாற்றாந்தாய் மனப்பான்மையை உரைக்கச் செய்வீர்கள் என்றால்… இன்றில்லை ஒரு நாள் அது தேசிய ஒருமைப்பாட்டுக்குக் கேடாகத்தான் போய் முடியும் என்று கடந்த ஐந்து வருடங்களாக மாய்ந்து மாய்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். கேட்பாரில்லை… இன்று, ட்ராகனின் அபாயச் சங்கு அருகில் கேட்கிறதா அல்லவா!?

தனித்த அனுபவம் ஒன்றைப் பகிர்கிறேன்.

பதினெட்டாம் நூற்றாண்டின் மகத்தான பெண் ஆளுமையான வேலு நாச்சியார் குறித்த உண்மை வரலாற்றினை ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளாக கடுமையாக ஆராய்ச்சி செய்து, மீட்டெடுத்து - பல்கலைக்கழகங்கள் முதல் கிராமங்கள் வரை செல்லுமிடமெல்லாம் அந்த மேன்மையை உரக்கச் சொல்லி வருகிறேன்.

உலக சரித்திரத்தில் அந்நியரை வென்ற ஒரே சரித்திரம் வேலு நாச்சியாரின் வீர சரித்திரம் என்ற மேன்மையை உலக அரங்கில் பதிய வைக்க போராடிக் கொண்டிருக்கிறேன். 2010இல், மரியாதைக்குரிய வைகோ அவர்களின் பேராதரவோடு வேலு நாச்சியாரின் சரிதத்தை தமிழ் தியேட்டர் கலை வடிவில் அறுபது கலைஞர்களோடு நிறைந்த சபையில் அரங்கேற்றினோம். அனைத்து பத்திரிகைகளும் நடுப்பக்கத்தில் வெளியிட்டு அள்ளி அணைத்துக் கொண்டாடின. அமெரிக்க மண்ணிலும், மும்பையிலும், தில்லி தமிழ்ச்சங்கத்திலும்கூட வெற்றிகரமாக மேடையேற்றி வந்தோம்.

கிழக்கிந்திய கம்பெனியின் மூர்க்கமான சைனியத்தை வென்று நின்ற உலகின் ஒரே சரித்திரம் என்பது வேலு நாச்சியாரின் மேன்மை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் மேன்மை மட்டுமல்ல; அது, ஒட்டுமொத்த இந்தியாவின் மேன்மையும்தான் அல்லவா?

அப்படியான இந்த மண்ணின் வரலாற்று மேன்மையை இந்திய அரசாங்கம் உயர்த்திப் பிடிக்கும் என்று பரிபூரணமாக நம்பினேன்!

நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் போர்க்கப்பல்களில் ஏதேனும் ஒன்றினுக்கு வேலு நாச்சியார் பெயரை வைக்க வேண்டுகோள் வைத்து, அதற்குண்டான நியாயங்களையும் இணைத்து ஒன்றிய அரசாங்கத்துக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு கடிதம் எழுதினேன் (20.10.2016)... பலனில்லை.

விடாமல் முயன்றதில், சென்னையில் இருக்கும் கோஸ்ட் கார்டு அலுவலகத்துக்கு நேரில் கொண்டு போய் கொடுக்கச் சொன்னார்கள். அப்படியே செய்தேன். அதற்குண்டான சான்றாவணத்தையும் பெற்றுக்கொண்டு வந்தேன். அவ்வளவுதான். இதுகாறும் பதிலில்லை.

சென்ற வாரத்தில் ஒரு நாள் வடமாநிலத்தில் ஓடும் லோக்கோமொடிவ் ரயில் ஒன்றுக்கு வேலு நாச்சியார் பெயர் சூட்டப்பட்டிருப்பதாகச் செய்தி வந்தது. நல்ல விஷயம்தான். நன்றி பாராட்ட வேண்டியதுதான்.

அதையும்கூட உணர்வோடு செய்திருக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கம். ஆம், பெருமைக்குரிய இந்தச் செய்தியை இந்திய அரசாங்கம் உலகுக்கு உரத்து சொல்லியிருக்க வேண்டும். ஏதோ கடனுக்குப் பெயர் வைத்துக் கழித்துக் கட்டியது போல் ஓடவிட்டிருக்கக் கூடாது!

“எங்கள் தாயே தமிழ்நாடு தான்.. என்னதான் முண்டினாலும் இது ‘ஒன்றியம்’ தான்”: எழுத்தாளர் வே.ஸ்ரீராம் கட்டுரை!

இங்கிருக்கும் முக்கியஸ்தர்கள் பலருக்கே இந்தச் செய்தியை நான் எடுத்துச் சொன்ன பிறகுதான் தெரிய வருகிறது என்பது வேதனையானது. ஒன்றிய அரசாங்கம் என்பது தன் மாநிலப் பெருமைகளை வாயாரப் போற்றிக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு? ஒருவேளை, கடைக்கோடி மாநிலம்தானே என்று எண்ணிவிட்டார்களோ?

தலைமாட்டில் இருக்கும் காஷ்மீருக்கு கவலைப்பட்டவர்கள் தமிழ்நாட்டுக்குச் செவி சாய்க்காதது ஏன்? தமிழ்நாடு என்பது தேச வரைபடத்தின் பாதத்தில் இருப்பது உண்மைதான். முள் குத்தும் இடமும் அதுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்படியெல்லாம் எழுதினால் என்னை தேச விரோதி என்பார்கள். முகநூலில் சூழ்ந்து கொண்டு கைக்கூலி என்பார்கள். ‘நீ என்ன வேலு நாச்சியார் வம்சமா? நீதான் அவருக்கு அத்தாரிட்டியா?’ என்றெல்லாம் கேலிக் குரலில் கீழ்த்தரம் செய்வார்கள்.

அதற்கெல்லாம் அஞ்சி ஒதுங்கிவிடுவேன் என்று மனப்பால் குடிப்பதைவிட, நான் யார் எனக் கேட்பதைவிட, என்ன சொல்ல வருகிறேன் என்பதைப் புரிந்துகொண்டால் அவர்களுக்குப் பலனிருக்கும்.

வேலு நாச்சியாரின் உண்மை வரலாற்றை தமிழ் - ஆங்கிலம் - ஹிந்தி - ஃபிரெஞ்சு என நான்கு மொழிகளில் மொழிபெயர்த்து அதை இந்தியாவின் முதல் பன்மொழிப் புத்தகமாக வெளியிடக் காத்திருக்கிறேன் என்பது இங்கே ஒன்றிய அரசோடு சம்பந்தப்பட்டிருக்கும் பலருக்கும் தெரியும். ஆயினும், அதுகுறித்து முனைப்பேதும் இல்லையே… ஏன்?

தமிழ்நாட்டின் மேன்மையை அந்த வெற்றி வரலாற்றை உயர்த்திப் பிடிப்பதில் அப்படி என்ன தயக்கம்? உங்கள் மேல் உங்கள் பெருமையின் மேல் அக்கறையில்லை என்று திருப்பிக்கொண்டு போனால் எங்கிருந்து வாழும் தேசியம்? சொல்லுங்கள், இன்னும் எத்தனை கீழடிகளைத்தான் சகித்துக்கொண்டிருக்க வேண்டும்?

ஒன்றியம் என்பதால்தானே இப்படி அண்டி நிற்க வேண்டியிருக்கிறது என்று தோன்றாமலா இருக்கும்? அப்படித் தோன்ற வைப்பது யார்? ஏன்? அதைத் தவிர்ப்பது எப்படி என்பதைத்தான் ஆராய வேண்டுமே தவிர, பெயருக்குப் பின்னால் இருக்கும் பரிபாடலை அல்ல.

இந்தப் பொன்னாட்டை நீங்கள் எப்படி அழைத்துக்கொள்ளச் சொன்னாலும் எங்களுக்குக் கவலையில்லை. உள்ளார்ந்த உணர்வுகள் நீர்த்துப் போகாத வரையில் இந்த மண்ணுக்கு இணை வேறில்லை என்பதே எமது துணிபு!

முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர்கூட தமிழ்நாட்டை, தமிழகம் என்று விளித்துப் பேசியிருக்கிறார். அறிக்கை விட்டிருக்கிறார். அவருக்கு மிஞ்சிய மொழி அறிவோ, மொழி உணர்வோ நமக்குள் இருந்துவிடப் போவதில்லை.

அவர், ‘தமிழ்நாடே…’ என்று அழைத்தபோதும் ‘தமிழகமே…’ என்று அழைத்தபோதும் இந்த மண் அவரை திரும்பித்தான் பார்த்திருக்கிறது. அவர் குரலுக்குச் செவிமடுக்கத்தான் செய்திருக்கிறது. காரணம், அவரது அழைப்புக்குள் இருந்த அந்த உண்மையும் உணர்வும்தான்!

அம்மை என்றழைத்தபோதும், தாயே என்றழைத்தபோதும் அபிராம பட்டருக்கு அருள் கிடைக்கத்தானே செய்தது? ‘எப்படி நான் அழைத்தால் என்ன; நீதாண்டி என் தாயீ…’ என்னும் பட்டரின் பக்தியை புரிந்துகொண்டதால்தானே கடையூருக்குத் திரு ஏறியது!

முதலில், தோளுக்கு மேல் வளர்ந்து - ஓயாமல் உழைத்துக்கொட்டும் பாசக்கார மகனுக்கு ஒரு தகப்பன் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து அரவணைக்கப் பாருங்கள்.

தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, பெற்ற விடுதலைக்கு அர்த்தம் சேருங்கள்.

கச்சேரி முழுவதும் காது குடைந்தவர், கிளம்பும்போது கீர்த்தனை ஞாபகம் வந்து விட்டது என்றால், இங்கே உட்கார்ந்து கேட்க யாரும் தயாராக இல்லை.

என்னதான் முண்டினாலும் சட்டப்படி இது ‘ஒன்றியம்’ தான்! ஆயினும், பரஸ்பர மரியாதையோடு உணர்வுபூர்வமாக முன்னெடுத்தால் அதை ‘இந்தியம்’ ஆக்கிவிடலாம் என்பதை மனதில் வைத்து மனமுவந்து செயலாற்ற வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் வேண்டுகோள்!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகவே கூடி வாழ விரும்பும் இனம் தமிழினம். அது, கடல்கடந்து வென்றதுண்டு. கலகம் என்பது அதற்குத் தெரியாத ஒன்று. தயவுசெய்து அதன் ஆன்மாவை உரசிப் பார்க்காமல் அன்பு செய்யுங்கள்!

‘உன்னைப் போலொரு பிள்ளை உண்டோ…’ என அதன் மேன்மைகளை அங்கீகரித்துப் பாருங்கள். விசுவாசத்தின் உச்சத்தை அது காட்டித் தரும்!

ஆம், உணர்வுபூர்வமானது தமிழ்நாடு!

அதன் உள்ளமும் - உள்ளிருந்து வழியும் பேரன்பும் அதன் பெயரைவிடப் பெரியது!

- வே.ஸ்ரீராம் சர்மா

வே.ஸ்ரீராம் சர்மா
வே.ஸ்ரீராம் சர்மா

கட்டுரையாளர் குறிப்பு: -

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

நன்றி :- மின்னம்பலம்.

banner

Related Stories

Related Stories