அரசியல்

“நோட்டாவை விட பெருவாரியான வாக்குகள்...” - கெத்தாக உணர்கிறார் எச்.ராஜா!

எச்.ராஜா, தற்போது படுதோல்வியைச் சந்தித்திருந்தாலும், நோட்டாவை விட அதிக வாக்குகளைப் பெற்றதை நிச்சயம் பெருமையாகவே கருதலாம்.

“நோட்டாவை விட பெருவாரியான வாக்குகள்...” - கெத்தாக உணர்கிறார் எச்.ராஜா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காலடியை எடுத்து வைக்க வெகுதீவிரமாக முயன்று வருகிறது. மத வெறுப்பு பிரசாரம், கலவரம் என எப்படியாவது சதி செய்து தமிழகத்தில் கணக்கைத் துவங்கிவிடலாம் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறது.

அதற்காகவே, தமிழக மக்களின் ‘கோ பேக் மோடி’ எதிர்ப்பையெல்லாம் பொருட்படுத்தாமல் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வருகை புரிந்தனர்.

நட்சத்திர அந்தஸ்து கொண்ட உறுப்பினர்களை கட்சியில் இணைப்பது, தாதாக்களை கட்சியில் சேர்ப்பது, மாற்றுக்கட்சி உறுப்பினர்களை சீட் ஆசை காட்டி கட்சியில் இணைப்பது என பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டாலும் தொடர்ந்து தோல்வியடைந்தே வருகிறது.

பா.ஜ.க வேட்பாளர்கள் பலரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை விட மிகக் குறைவான வாக்குகளைப் பெற்று படுதோல்வி கண்டு வருகிறார்கள்.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க-வின் குஷ்பூ எனப் பலரும் கடும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.கவின் பொன்.ராதாகிருஷ்ணன், காங் வேட்பாளர் விஜய் வசந்த்தை விட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

அதேபோல, காரைக்குடி பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடியை விட சுமார் இருபது ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை தமிழகத்தில் தனித்து நின்றால் நோட்டாவுக்கு கிடைக்கும் வாக்குகளை விட குறைவாக கிடைக்கும் என்பதை உணர்ந்ததாலேயே அ.தி.மு.க-வை கைக்குள் வைத்துக்கொண்டு அக்கட்சி மீதே சவாரி செய்து வருகிறது.

பொதுத் தேர்தல்களில்தான் பா.ஜ.கவுக்கு இந்த நிலையா என்றால், அதுதான் இல்லை. சாரணர் இயக்கத் தேர்தலில் கூட மூக்குடைபடுவதுதான் அக்கட்சியினருக்கு வாடிக்கை.

2017ம் ஆண்டு நடைபெற்ற சாரணர், சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.கவின் எச்.ராஜா வெறும் 52 வாக்குகள் மட்டுமே பெற்று 180 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இப்படியான படுபயங்கரமான தோல்வி வரலாறுகளைக் கொண்ட எச்.ராஜா, தற்போது படுதோல்வியைச் சந்தித்திருந்தாலும், நோட்டாவை விட அதிக வாக்குகளைப் பெற்றதை நிச்சயம் பெருமையாகவே கருதிக் கொள்ளலாம்.

banner

Related Stories

Related Stories