அரசியல்

ஒரு இடத்தில் கூட வெல்லாமல் மறைமுகமாக தமிழகத்தை ஆளும் பாஜக.. மோடி அரசு கவிழ்த்த மாநில அரசுகளின் பட்டியல்!

2014 முதல் 2021 வரை ஆறரை ஆண்டுகளில் பா.ஜ.க. கவிழ்த்த மாநில அரசுகளின் பட்டியல்.

ஒரு இடத்தில் கூட வெல்லாமல் மறைமுகமாக தமிழகத்தை ஆளும் பாஜக.. மோடி அரசு கவிழ்த்த மாநில அரசுகளின் பட்டியல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்தியில் பா.ஜ.க. தலைமையில் 2014ம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் ஏறியதில் இருந்து மாநிலங்களில் ஆட்சியை பிடித்து பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றிட வேண்டும் என்ற குறிக்கோளோடு ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சி அதற்கு சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

அவ்வகையில் மத்திய அரசில் பதவியேற்று ஆறரை ஆண்டுகள் கூட முடிவுறாத நிலையில் மாநிலங்களில் உள்ள 10 ஆட்சிகளை பா.ஜ.க. கவிழ்த்திருக்கிறது. ஜனநாயக முறைப்படி மக்கள் மனங்களை வென்று காங்கிரஸ் கூட்டணி அரசுகள் மாநிலங்களில் ஆட்சியமைத்தது. அதனை குதிரை பேரம் மூலம் குறுக்கு வழியில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி ஆட்சியை அபகரித்துள்ளது பா.ஜ.க.

பா.ஜ.க. கவிழ்த்த மாநில அரசுகளின் பட்டியல்:

2016 - அருணாச்சல பிரதேசம்

ஆட்சிக் கவிழ்ப்பு சாதனையை முதல் முறையாக 2016ம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் இருந்து தொடங்கியிருக்கிறது பா.ஜ.க. 2014ல் வெறும் 11 எம்.எல்.ஏக்களை கொண்டிருந்த பா.ஜ.க. 2016ம் ஆண்டில் காங்கிரஸின் 40 எம்.எல்.ஏக்களை வளைத்து ‘மக்கள் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்க வைத்து அதனுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி ஆளுங்கட்சியானது.

2017 - கோவா

தனிப்பெரும்பான்மையுடன் 17 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க விடாமல் குதிரை பேரம் நடத்தி காங்கிரஸ் உறுப்பினர்களை வளைத்ததோடு, பிற கட்சி எம்.எல்.ஏக்களுடன் கூட்டணி வைத்து வெறும் 13 இடங்களில் வென்ற பா.ஜ.க. ஆட்சியை அபகரித்தது

2017 - மணிப்பூர்

60 சட்டப்பேரவை தொதிகளுக்கு கடந்த 2017ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களில் வென்று பெரும்பான்மையை பெற்றது. ஆனால், 21 எம்.எல்.ஏக்களையே கொண்டிருந்த பாஜக தலா நான்கு தொகுதிகளில் வென்ற நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சியுடனும், தலா ஒரு தொகுதியில் வென்ற லோக் ஜனசக்தி, சுயேட்சையுடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது.

2018 - மேகாலயா

21 தொகுதிகளை வென்ற காங்கிரஸை வீழ்த்த 2 தொகுதிகளை வென்ற பா.ஜ.க. தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட இதர மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியை வளைத்து போட்டது.

2019 - கர்நாடகா

2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 104 இடங்களை பா.ஜ.க. வென்றிருந்தாலும் பெரும்பான்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே பதவி விலகியது. அதன் பிறகு 80 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் 37 தொகுதிகளை வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஓராண்டு ஆட்சி நடத்தியது. ஆனால் காங்கிரஸின் 16 எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் பேசி வாங்கிய பா.ஜ.க. காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணியை கவிழ்த்து ஆட்சியில் ஏறியது.

2019 - சிக்கிம்

2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் பிராந்திய கட்சிகளான சிக்கின் கிராந்திகாரி மோர்ச்சா 17ம், சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களிலும் வென்றது. ஒரு தொகுதியில் கூட வெல்லாத பாரதிய ஜனதா கிராந்தகாரி மோர்ச்சாவுடன் இணைந்து ஆட்சியை பிடித்தது.

மேலும் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 10 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டதோடு அதன் பிறகு நடந்த 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் 2 இடங்களை வென்றது. தொடக்கத்தில் ஒரு எம்.எல்.ஏக்கூட சிக்கிம் சட்டமன்றத்தில் இல்லாமல் பாஜகவுக்கு தற்போது 12 எம்.எல்.ஏக்கள் உள்ளது.

2017 - பீகார்

2015ல் நடந்த தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளமும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து மெகா கூட்டணி வைத்து 80, 71 முறையே இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் லாலு - நிதிஷ் கூட்டணியை உடைத்து நிதிஷ் குமாரை புதிய கட்சி தொடங்க வைத்து அதனுடன் இணைந்து பா.ஜ.க. ஆட்சிக்கட்டிலில் ஏறியது.

ஒரு இடத்தில் கூட வெல்லாமல் மறைமுகமாக தமிழகத்தை ஆளும் பாஜக.. மோடி அரசு கவிழ்த்த மாநில அரசுகளின் பட்டியல்!

2018 - ஜம்மு காஷ்மிர் (குடியரசுத் தலைவர் ஆட்சி)

2015ல் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களிலும் வென்றன. பி.டி.பியுடன் இணைந்து பா.ஜ.க. கூட்டணி அமைத்தது. 2016ல் முஃப்தி முகமது சயீத் இறந்த பிறகு அவரது மகள் மெகபூபா முஃப்தி 2016 ஏப்ரலில் முதல்வராக பதவியேற்றார். ஆனால் பாஜகவுடன் முரண்பட்டதால் 2018ல் கூட்டணி முறிந்தது, இதனையடுத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை நிறுவி ஜம்மு காஷ்மிரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது பா.ஜ.க.

2020 - மத்திய பிரதேசம்

2018ல் 114 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி 121 எம்.எல்.ஏக்களுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் காங்கிரஸ் கமல்நாத் பதவியேற்ற 2 ஆண்டுகளில் சூழ்ச்சி செய்து காங்கிரஸின் ஜோதிராதித்ய சிந்தியா உட்பட 29 பேரை வளைத்ததால் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது.

2021 - புதுச்சேரி

2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 15 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் திமுக ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. சரியாக 4 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆட்சியில் காங்கிரஸ் திமுக கூட்டணி நீடித்த நிலையில், 2 அமைச்சர்கள் மற்றும் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்த பாஜக 3 நியமன எம்.எல்.ஏக்களை வைத்து நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்து ஜனநாயக படுகொலை செய்தது.

இப்படி இருக்கையில், பாஜகவின் சித்து விளையாட்டுகள் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பலிக்காமல் போனது.

2019 - மகாராஷ்டிரா

2019ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 105 பாஜகவும், காங்கிரஸ் 44, சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. பாஜகவின் கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியது. இதனால் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இருப்பினும் 54 இடங்களில் வென்ற தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரை வளைக்க முயற்சித்து தோற்றதால் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியமைத்து வருகிறது.

2020 - ராஜஸ்தான்

ராஜஸ்தானில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த வசுந்தரா ராஜேவின் பாஜக அரசு 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வீழ்ந்தது. 101 இடங்களில் வென்ற காங்கிரஸிடம் 72 இடங்களை வென்ற பாஜக தோற்றது. இதனையடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், ராஜஸ்தானின் துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டை வைத்து வழக்கம் போல் காய் நகர்த்தியது பா.ஜ.க. அதன்படி 18 எம்.எல்.ஏக்களுடம் தனியாக சச்சின் பைலட் பிரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் முயற்சியால் சச்சின் பைலட்டை வைத்து நடத்திய பாஜகவின் சூது தோல்வியை தழுவியது.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட பிரமாதமாக தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னணியில் இருந்து சட்டமன்றத்தில் ஒரு இடத்தை கூட வெல்லாத பாஜக ஆட்சியமைத்து வருகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவற்றின் சோதனைகளுக்கு அடிபணிந்து தலையாட்டும் பொம்மை போன்று அதிமுக அரசு இருந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories