அரசியல்

“புதுவையில் பாஜக செய்திருப்பது 18 தொகுதிகளில் டெபாசிட் இழந்ததை விடவும் கேவலமானது” : K.S.அழகிரி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கடந்த நான்கே முக்கால் வருடம் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அதையும் மீறி மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் ஆட்சி நிகழ்த்தியிருக்கிறது.

“புதுவையில் பாஜக செய்திருப்பது 18 தொகுதிகளில் டெபாசிட் இழந்ததை விடவும் கேவலமானது” : K.S.அழகிரி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசியல் பேராண்மையோடு துணைநிலை ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கிய நாராயணசாமியின் நேர்மையை புதுச்சேரி மக்கள் பாராட்டுவார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது அறிக்கையில்

“புதுச்சேரி மாநில முதலமைச்சராக வி. நாராயணசாமி தேர்வு செய்யப்பட்ட அதே சமயத்தில் தான் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி அரசியல் உள்நோக்கத்தோடு நியமிக்கப்பட்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றது முதற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு செயல்படவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர் தான் கிரண்பேடி. துணைநிலை ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து ஒரு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அவரது மாளிகையின் நுழைவாயிலுக்கு வெளியே இரவு-பகல் என்று பாராமல் அங்கேயே உறங்கி தொடர் போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலை வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்க முடியாது. அத்தகைய கொடூரமான துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைகளை எதிர்த்து பதவிக் காலம் முழுவதும் போராடியவர் முதலமைச்சர் வி. நாராயணசாமி.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 15 இடங்களிலும், தி.மு.க. 3 இடங்களிலும் வெற்றி பெற்று ஒரு சுயேட்சை உறுப்பினரின் ஆதரவோடு மொத்தம் 19 உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அதேநேரத்தில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க., அனைத்திலும் டெபாசிட் தொகையை பறிகொடுக்கிற அவலநிலை இருந்ததை எவரும் மறந்திட இயலாது. புதுச்சேரி மாநில மக்களால் நிராகரிக்கப்பட்ட பா.ஜ.க.வை சார்ந்த மூவரை நியமன உறுப்பினர்களாக துணைநிலை ஆளுநர் நியமித்ததை விட ஜனநாயக விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. ஆளுநர் என்பவர் முதலமைச்சரின் ஆலோசனையின்படிதான் செயல்பட வேண்டுமே தவிர, பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்படக் கூடாது.

துணைநிலை ஆளுநரின் பல்வேறு தடைகளை மீறியும் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சியை கவிழ்ப்பதற்கு பா.ஜ.க. சதித் திட்டம் தீட்டியது. சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு 100 நாட்கள் மட்டுமே இருக்கிற நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் விலை பேசப்பட்டு கட்சியிலிருந்து விலகுகிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலும், நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பா.ஜ.க.வின் நியமன உறுப்பினர்கள் மூன்று பேருக்கும் வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இந்நிலையில் அரசியல் பேரான்மையோடு முதலமைச்சர் நாராயணசாமி சட்டசபையிலிருந்து நேரடியாக வெளியேறி துணைநிலை ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியிருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் நேர்மையை புதுச்சேரி மக்கள் நிச்சயம் பாராட்டுவார்கள்.

கடந்த காலங்களில் கர்நாடகா, மத்தியபிரதேசம், மணிப்பூர், கோவா என தொடர்ந்து பல மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை பா.ஜ.க. கவிழ்த்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால், புதுச்சேரி போன்ற ஒரு சிறிய மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதை சகித்துக் கொள்ள முடியாத நிலையை வைத்து பா.ஜ.க.வின் சர்வாதிகார அணுகுமுறையை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

நாராயணசாமி தலைமையிலான ஆட்சியை முடக்குவதற்கு கிரண்பேடி பயன்பட்டார். அரசியல் ரீதியாக ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை மேற்கொள்வதற்கு கிரண்பேடி பயன்பட மாட்டார் என்ற உள்நோக்கத்தில் அதை செய்வதற்கு தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதில் பா.ஜ.க. தற்காலிகமாக வெற்றி பெறலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கடந்த நான்கே முக்கால் வருடம் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அதையும் மீறி மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நிகழ்த்தியிருக்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு உள்ஒதுக்கீடு 7.5 சதவிகிதம் தான். ஆனால், புதுச்சேரியில் 10 சதவிகிதமாக பெற்றுத் தந்தவர் நாராயணசாமி. இலவச அரிசிக்கு கிரண்பேடி விதித்த தடையை மீறி நிறைவேற்றிய பெருமை இவருக்கு உண்டு. மேலும், 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி புதுச்சேரி அரசுக்கு 41 சதவிகித நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், 21 சதவிகித நிதி ஒதுக்கீடு மட்டுமே வழங்கி காங்கிரஸ் ஆட்சிக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதில் பா.ஜ.க. காட்டிய முனைப்பை புதுச்சேரி மக்கள் நன்கு அறிவார்கள்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி பதவியிலிருந்து விலகினாலும், மக்கள் மனதிலிருந்து எந்த சக்தியாலும் விலக்க முடியாது. சமீபத்தில் நடந்த 2019 மக்களவை தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வைத்தியலிங்கம் 1 லட்சத்து 97 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையும், நெல்லிதோப்பு சட்டமன்றத் தொகுதியில் நாராயணசாமி 70 சதவிகித வாக்குகள் பெற்றதையும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதையும் பார்க்கும் போது காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியின் மக்கள் செல்வாக்கை அறிந்து கொள்ள முடியும்.

எனவே, புதுச்சேரி மக்களால் நிராகரிக்கப்பட்ட பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை சாம, பேத, தான, தண்டங்களை கையாண்டு காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டிருக்கிறது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை புகட்டுகிற வகையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அங்கே அமையப் போவது உறுதி என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories