அரசியல்

விவசாயிகள் போராட்டம்: ஒரு புறம் ரவுடிகள்; மறுபுறம் போலிஸ்.. அராஜகத்தை கட்டவிழ்த்த அதிமுக - பாஜக அரசுகள்!

தளர்ந்தது போல் தெரிந்த போராட்டம் மீண்டும் முழு உத்வேகத்தை எட்டிப் பிடித்தது. இதனால் அதிகரிக்கப்பட்ட போலிஸாரின் எண்ணிக்கை குறைத்துக் கொள்ளப்பட்டது.

விவசாயிகள் போராட்டம்: ஒரு புறம் ரவுடிகள்; மறுபுறம் போலிஸ்.. அராஜகத்தை கட்டவிழ்த்த அதிமுக - பாஜக அரசுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் எல்லைப்பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை கலைப்பதற்காக குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது மத்திய மோடி அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டது தொடர்பாக நக்கீரன் சிறப்பு கட்டுரையை தீட்டியுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

குடியரசு தினத்தில் செங்கோட்டையில் விவசாயிகள் கொடியேற்றிய சம்பவத்தை "மன் கி பாத்" நிகழ்ச்சி வரை கொண்டு சென்று விட்டார் பிரதமர் மோடி. விவசாய சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட 44 பேர் மீது டெல்லி போலிஸார் தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 372 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக போலிஸ் அறிவித்துள்ளது.‘பாரதிய கிசான் மஸ்தூர் சங்கர்ஷ்' உள்ளிட்ட 3 விவசாய அமைப்புகள் விலகிக்கொள்ள, விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தது. இதை வாய்ப்பாகக் கொண்டு போலிஸ் தன் கெடுபிடிகளை அதிகரித்தது.

போராட்ட இடத்துக்கு வரும் தண்ணீர் லாரிகளைத் தடுப்பது, மின் விநியோக நிறுத்தம் போன்ற குறுக்குவழிகளில் இறங்கியது. மேலும் உத்தரப்பிரதேச எல்லையான காஜிப்பூர் மாவட்ட நிர்வாகம், 24 மணி நேரத்துக்குள் போராட்ட இடத்தைக் காலி செய்யவேண்டுமென எச்சரிக்கை விடுத்தது. போராட்டக்காரர்களைச் சுற்றி போலிஸார் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ராகேஷ் திகெய்ட், உணர்ச்சிகரமான உரையொன்றை நிகழ்த்தி, விவசாய சங்கத் தலைவர்கள் தங்களது விவசாயிகளுக்கு உதவ போராட்டக் களத்தை நோக்கி வரும்படி அழைப்பு விடுக்கவே உத்தரப் பிரதேசத்தின் பல பாகங்களிலிருந்தும் விவசாயிகள் டெல்லி எல்லை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.

தளர்ந்தது போல் தெரிந்த போராட்டம் மீண்டும் முழு உத்வேகத்தை எட்டிப் பிடித்தது. இதனால் அதிகரிக்கப்பட்ட போலிஸாரின் எண்ணிக்கை குறைத்துக் கொள்ளப்பட்டது. மாறாக, டெல்லியின் சிங்கு எல்லையில் ஜனவரி 29-ஆம் தேதி தங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், அதனால் போராட்டக்காரர்கள் தங்கள் இடத்தைக் காலி செய்ய வேண்டுமெனக் கோரி 200-க்கு மேற்பட்ட நபர்கள் போராட்டக்காரர்களின் இடத்துக்குள் நுழைந்தனர். விவசாயிகளை கலைந்து செல்லும்படிக் கூறி குரலெழுப்பினர். இரு தரப்புக்குமான வாக்குவாதம் கல்வீச்சாக மாறியதையடுத்து, உற்சாகமடைந்த போலிஸார், தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டுவீச்சு என மும்முரமாகினர்.

இதனால் உள்ளூர்க்காரர்கள் மற்றும் போலிஸாரின் இருதரப்பு தாக்குதலுக்கும் விவசாயிகள் ஆளாகினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளோ, "எங்களைத் தாக்கியவர்கள் ஜெய் ஸ்ரீராம், காலிஸ்தான் தீவிரவாதிகள் என பலவிதமாக கோஷம் எழுப்பினர். அவர்கள் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கிறோம். மிரட்டியோ, அடித்தோ எங்களை இங்கிருந்து துரத்தி விடமுடியாது" என்றனர். பாரதிய கிசான் யூனியனின் தலைவரான ஜோகிந்தர்சிங், ‘அரசாங்கம் மட்டமான யோசனைகளைக் கையாள்வதாக' காட்டமாக விமர்சித்துள்ளார்.

போராட்டத்தில் விவசாயி ஒருவரின் கழுத்தில் காவலர் ஒருவர் பூட்ஸ் காலால் மிதித்தது, அமெரிக்க கறுப்பின இளைஞரான ஜார்ஜ் ப்ளாய்டை நினைவுபடுத்தியதாக சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. "சிங்கு எல்லை அத்துமீறல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நொய்டா போலிஸ், பெங்களூரு மற்றும் மத்தியப்பிரதேச போலிஸார், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், மிருணாள் பாண்டே உள்ளிட்ட பலர் மீது தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளைப் பதிந்துள்ளனர். இதற்கு‘எடிட்டர்ஸ் கில்டு' உள்ளிட்ட பல பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஜனவரி 29-ஆம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை, காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், திரிணமுல் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள்புறக்கணித்தன. ஐனாதிபதி உரையாற்றத் தொடங்குவதற்கு முன், எதிர்க்கட்சிகளிடமிருந்து ‘ஜெய் ஜவான், ஜெய் கிஷான்' கோஷங்கள் எழுந்தன. வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் பதாகை ஏந்தி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

டெல்லியில் போராட்டம் நடக்கிறது. அதைக் கலைக்க ஆளும் பா.ஐ.க. அரசு என்னென்னவோ செய்கிறது. தமிழக அரசுக்கு என்ன ஆச்சு என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், "குடியரசு தினத்தன்று தமிழகமெங்கும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்ராக்டர் பேரணி நடத்தினர். டெல்டா மாவட்டங்களில் போராட்டங்களைத் தடுக்கவும், ஒடுக்கவும் முயன்றனர். அதன் எதிரொலியாக திருவாரூரில் போராட்டத்தில் பங்குபெற்ற விவசாயிகளின் வீடுகளின் மீது கடந்த சில தினங்களாக இரவில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுகின்றன. காவல்துறையில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை" என்றார்.

ஜனவரி 31 அன்று தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி பங்கேற்க தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், விவசாய சங்கங்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடைபெற்றது. போலிஸின் அத்துமீறல்களை முத்தரசன் உள்ளிட்டோர் எடுத்துரைத்தனர். இதற்கு போலிஸ் தரப்பிலிருந்து மறுப்பறிக்கை வர டிராக்டர்களைத் தடுக்கும் போலிஸின் மூர்க்கத்தனத்தை வீடியோவாக வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டு பதிலடி தந்தனர் விவசாயிகள். விவசாயிகள் மீதான காயங்களுக்கு பட்ஜெட் மூலம் களிம்பு தடவப் பார்க்கிறது மோடி அரசு. எடப்பாடிக்கோ கவர்னர் உரை.

நன்றி: நக்கீரன்

banner

Related Stories

Related Stories