அரசியல்

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க.,வினர் மீது குண்டர் சட்டம் பாயாதது ஏன்? - டி.ஆர்.பாலு கேள்வி!

மதவெறிப் பேச்சுக்களை வழக்கமாக தொடர்ந்து வெளியிட்டு வரும் பா.ஜ.க வில் உள்ள கல்யாணராமன் போன்றவர்களை கண்டு தமிழக காவல்துறையும் அஞ்சுகிறது என டி.ஆர்.பாலு எம்.பி., குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க.,வினர் மீது குண்டர் சட்டம் பாயாதது ஏன்? - டி.ஆர்.பாலு கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நபிகள் நாயகம் பற்றி அவதூறு பரப்பி - மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க.வினரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என தி.மு.கழகப் பொருளாளரும் தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, எம்.பி., அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசி- தமிழகத்தில் உள்ள மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்பது ஒன்றையே இலக்காகக் கொண்டு பா.ஜ.க.வில் உள்ள மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் போன்றவர்கள் பேசி வருவதும்- அவர்களுக்கு அனைத்துவித ஊக்கமும் அளித்து பா.ஜ.க. தலைமை காப்பாற்றி வருவதும் கடும் கண்டனத்திற்குரியது.

இது போன்ற நபர்களை தன் மனம் போன போக்கில் பேச விட்டு- பிறகு கண்டனங்கள் எழுந்த பிறகு கண் துடைப்புக்காக கைது செய்கிறது அதிமுக அரசு. ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து கருத்துச் சொன்னால் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது, ஒரு துண்டு பிரசுரம் வழங்கிய மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது என்றெல்லாம் பா.ஜ.க.வின் மனம் குளிர காவல்துறையை பயன்படுத்தும் அதிமுக அரசுக்கு மதவெறிப் பேச்சுக்களை வழக்கமாக தொடர்ந்து வெளியிட்டு வரும் பா.ஜ.க வில் உள்ள கல்யாணராமன் போன்றவர்களையோ - சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்களையோ கண்டு தமிழக காவல்துறையும் அஞ்சுகிறது. அதிமுக அரசும் அப்படிப் பேசும்- அல்லது கருத்துத் தெரிவிக்கும் பா.ஜ.க.வினரை எதுவும் செய்து விடாதீர்கள் என்று கைகட்டி எட்டி நிற்கிறது.

திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு! பா.ஜ.க.வினர் மீது ஏதாவது பொதுவான கருத்தை கூறி விட்டாலே கைது- சிறையிலடைப்பு. தேசியக் கொடியை அவமதித்தாலும் அவர்களுக்கு காவல்துறையே மனமுவந்து மன்னிப்பு வழங்கும்! உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொச்சைப்படுத்தி பேசினாலும்- உயர்நீதிமன்றத்தின் மீதே அவதூறு பரப்பினாலும்- அது பா.ஜ.க.வினர் என்றாலோ- அல்லது பா.ஜ.க. ஆதரவு பெற்றவர்கள் என்றாலோ அதிமுக அரசு அஞ்சி நடுங்கி ஒதுங்கி நிற்கிறது. அதிமுக அரசின் கையாலாகத தனத்தைப் பயன்படுத்தி- மதநல்லிணக்கத்திற்கு எதிராக- நபிகள் நாயகம் பற்றி பேசிவருவதை அதிமுக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேட்டுப்பாளையத்தில் அவதூறாகப் பேசிய கல்யாணராமனை தாமதமாக கைது செய்தது மட்டும் போதாது- அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories