அரசியல்

“செயற்கையான ஒரு கூட்டத்தைப் பார்த்து புகழ் மயக்கத்தில் புலம்பும் எடப்பாடி பழனிசாமி” - முரசொலி தலையங்கம்

முதல்வர் வேட்பாளராகத் தேர்தலில் நிற்க வேண்டும் என மக்கள் வற்புறுத்தி நிற்க வைத்து வெற்றி பெற்று வந்து முதல்வர் ஆனது போல் பேசுகிறார். இவர் சசிகலா காலில் விழுந்து முதல்வர் ஆனதை அடியோடு மறந்து விட்டார்.

“செயற்கையான ஒரு கூட்டத்தைப் பார்த்து புகழ் மயக்கத்தில் புலம்பும் எடப்பாடி பழனிசாமி” - முரசொலி தலையங்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக முதலமைச்சராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலையங்கம் வெளியிட்டுள்ளது முரசொலி.

அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:

“முதல்வர் எடப்பாடிக்குத் தேர்தல் நெருங்க நெருங்க உளறல் அதிகரித்து விட்டது. ஏதேதோ பேசுகிறார். புதிய விளக்கங்களைத் தருகிறார். நமது கழகத் தலைவருக்கு பட்டம் கொடுக்கிறார். தி.மு.க.வை சுயநலவாதிகள் கட்சி என்கிறார். 'தங்கள் குடும்பம்தான் வாழ வேண்டும் என்று எண்ணுகிற ஒரே கட்சி தி.மு.க.தான்' என்று சொல்கிறார். எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் வாரிசுகள் கிடையாது. நாம் தான் வாரிசு, மக்கள்தான் வாரிசு என்கிறார்.

நாம் அவருடைய பேச்சை ஏடுகளில் படித்தோம். தொலைக்காட்சிகளிலும் அவர் பேசும் காட்சியைப் பார்த்தோம். அவர் பேச்சைக் கேட்டதிலிருந்து நாம் அவருக்கு இரண்டு செய்திகளைச் சொல்ல விரும்புகிறோம். முதலாவதாக, எம்.ஜி.ஆருக்கும் - ஜெயலலிதாவுக்கும் வாரிசுகள் இல்லை என்பது உண்மை தான். ஆனால், எடப்பாடி சொல்வது போல அவர்களுக்கு வாரிசுகளாக மக்கள் எப்படி இருக்க முடியும் என்று நமக்குப் புரியவில்லை. காமராசருக்கு கூட வாரிசுகள் என்று யாரும் இல்லை. அவருடைய ஆட்சி, அறிவுத்திறன், சாதனைகளைத் தான் நாம் போற்றுகின்றோம். அவரை நினைவுகூர்ந்து பார்க்கின்றோம். பின்பற்றுகின்றோம். அவரைப் போல எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் கருத முடியுமா? அவரை ஒத்த செயல்பாடுகளை உடையவர்களாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும். இல்லையே. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஊழல்கள் செய்தார்கள். அதற்காக வழக்குகள் நடந்தன. அதில் ஒருவர் தண்டனைப் பெற்றார். இவர்கள் இருவருக்கும் நாட்டு மக்கள் எப்படி வாரிசுகளாக இருக்க முடியும்?

“செயற்கையான ஒரு கூட்டத்தைப் பார்த்து புகழ் மயக்கத்தில் புலம்பும் எடப்பாடி பழனிசாமி” - முரசொலி தலையங்கம்

ஆகவேதான் எடப்பாடி தாமாகவே முன்வந்து அவர்கள் இருவருக்கும் ‘நாம்தான் வாரிசு' என்று ஓர் உண்மையைச் சொல்லி இருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும், முதல்வர் உட்பட ஊழல்களில் திளைக்கும் அமைச்சர்கள்தான் உண்மையான வாரிசுகளாக இருக்க முடியும். ஏனெனில் அவர்கள் இருவரும் ஊழலில் பகிரங்கமாக ஈடுபட்ட வர்கள் என்று இன்றுகூட பழைய ஆவணங்களில், நாளேடுகளில் பார்க்க முடியும். ஆகவே, அ.இ.அ.தி.மு.க.வின் அமைச்சர்கள்தான் முதல்வர் உட்பட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வாரிசுகளாக இருக்க முடியுமே தவிர, நாட்டுமக்கள் ஒரு போதும் வாரிசுகளாகத் திகழ முடியாது.

இரண்டாவதாக, கழகத் தலைவர் ஸ்டாலின் எடப்பாடியை விமர்சிக்கிறார். அவர் எதிர்க்கட்சித் தலைவரின் பணியைத்தான் செய்கிறார். அதை முதல்வர் எடப்பாடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை . புலம்புகிறார். தி.மு.க.வை போய் சுயநலக் கட்சி என்கிறார். எம்.ஜி.ஆர். அந்தக் கட்சியில் இருபது ஆண்டுகள் இருந்து பெயர், புகழ், பணம் சம்பாதித்ததை வசதியாக எடப்பாடி மறந்து விட்டார். தி.மு.க. சுயநலக் கட்சியாக இருந்திருந்தால் அவர் வளர சுதந்திர மாக அக்கட்சி அனுமதித்து இருக்க முடியுமா? - என்பதை அவர் முதலில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

‘தங்கள் குடும்பம்தான், வாழ வேண்டும் என்று எண்ணுகிற ஒரே கட்சி தி.மு.க.' என்றால் எம்.ஜி.ஆர். தி.மு.க.வால் அபார வளர்ச்சி அடைந்திருப்பாரா என்பதை எடப்பாடி ஏடுகளைப் புரட்டிப் பார்த்து விட்டு பேச வேண்டும். ஆய்ந்தறிந்து பேச வேண்டும். மற்றவர்களைப் பார்த்து ‘குடும்பம் குடும்பம்' என்று பேசும் எடப்பாடி ஒரு குடும்பத்திலிருந்து உருவாகாமல் காட்டிலிருந்தா வந்தார்?

திட்டங்களைப் பற்றி நாட்டில் நிகழ்த்திய சாதனைகளைப் பற்றி எடப்பாடியார் அதிகம் பேசுகிறார். அ.இ.அ.தி.மு.க.வின் மொத்த ஆட்சிக் காலம் இப்போது உள்ளதையும் சேர்த்து 30 ஆண்டு காலம். தி.மு.க.வின் ஆட்சிக்காலம் 20 ஆண்டுகள்தான்! சாதனைகளைப் பட்டியல் போட்டுப் பாருங்கள். எந்தக் கட்சியின் சாதனைகள் கூடுதலாக இருக்கின்றன என்பது தெரியவரும். தி.மு.க.வை எந்தவிதத்திலும் குறை சொல்கிற அருகதையோ, தகுதியோ, எடப்பாடியாருக்கோ அவரது அமைச்சரவைக்கோ இல்லை. எடப்பாடியார் ஒன்றை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு தி.மு.க.வைச் சிறுமைப்படுத்திப் பேசினாலும், அதன் பெருமையை, பெரு மிதத்தை உங்களால் ஒருபோதும் சிதைத்து விட முடியாது. உங்கள் நிறுவனத் தலைவர் இருந்த கட்சி அது என்பதை உங்களால் மாற்றி விட முடியாது. அது வரலாறாகிவிட்ட ஒன்று.

“செயற்கையான ஒரு கூட்டத்தைப் பார்த்து புகழ் மயக்கத்தில் புலம்பும் எடப்பாடி பழனிசாமி” - முரசொலி தலையங்கம்

எடப்பாடியார் தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறார். செயற்கையான ஒரு கூட்டத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு ஒரு புகழ் மயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. புலம்பத் தொடங்கி விடுகிறார். தி.மு.க.வைத் தாக்குகிறார். அதனால் ஆன பயன் என்ன? - என்பதை எடப்பாடி எண்ணிப் பார்க்க மறுக்கிறார். அவர் எவ்வளவு வேடம் போட்டாலும் என்னவிதமாகப் பேசினாலும் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவதாக அறிவித்தாலும், அம்மா கிளினிக்குகளை ஒரு திட்டம் என்று தொடங்கினாலும் மக்கள் இந்த முறை மிக உறுதியான தீர்ப்பை அ.இ.அ.தி.மு.க.வுக்கு எதிராக அளிக்கக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எடப்பாடியின் புலம்பலில் ஒரு பெரிய நகைச்சுவை ததும்பி வழிகிறது. கடந்த 18ஆம் தேதி ஓமலூரில் எடப்பாடி பேசுகிறார்: “என்னைப் பொருத்த வரை உங்களுக்குப் பணி செய்கின்ற பொறுப்பைத் தான் எனக்குத் தந்து இருக்கிறீர்கள். நான் முதல்வர் என்ற எண்ணத்தில் இருந்ததே கிடையாது. இருக்கப் போவதும் இல்லை. நான் சிறு வயதில் பட்ட இன்னல்களை தமிழ கத்தின் ஏழைகள் எவரும் பெறக் கூடாது. அவர்களுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கவேண்டும். நீங்கள் கொடுத்த இந்தப் பணியை சிறப்பான முறையில் செய்து, நமது மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக செயல்படுவேன்"

இந்தப் பேச்சிலிருந்து என்ன தெரிகிறது? அவர் மக்களை ஏமாற்றுவது புரிகிறது. இவருக்கு மக்கள் முதல்வர் பொறுப்பைத் தந்தது போல் பேசுகிறார். இவர் முதல்வர் வேட்பாளராகத் தேர்தலில் நிற்க வேண்டும் என மக்கள் வற்புறுத்தி நிற்க வைத்து வெற்றி பெற்று வந்து முதல்வர் ஆனது போல் பேசுகிறார். இவர் சசிகலா காலில் விழுந்து முதல்வர் ஆனதை அடியோடு மறந்து விட்டார். அடுத்து, அவர் முதல்வர் என்ற எண்ணத்தில் இருந்தது கிடையாது என்று புத்தர் போல் பேசுகிறார்.

இந்த குறை மாதங்களுக்கு மீண்டும் பன்னீரை முதல்வராக ஆக்கிவிடுங்களேன். உங்களுக்குத்தான் முதல்வர் என்ற எண்ணமே கிடையாதே, பின் ஏன் அந்தப் பதவி? இப்படி அவர் பேசுவதெல்லாம் ஒரு ஏமாற்றே தவிர வேறொன்றும் இல்லை. எப்படியோ ஒரு உண்மையை அவர் சொல்லி இருக்கிறார். அதாவது முதல்வராக அவர் இனி இருக்கப் போவதுமில்லை என்று அவரே சொல்கிறார். எதிர்வரும் மே மாதத்தை இப்போதே கணித்து சொல்கிறார். இவர்களின் சாதனைகளுக்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா? அவர் நினைப்பில் எப்போதும் இருப்பது தி.மு.க. மட்டுமே. அதற்காகத்தான் அவர் பேசுகிறார், ஆனால் அவை புலம்பல்களாக வெளிப்படுகின்றன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories