அரசியல்

“நீட் தேர்வை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒத்திவைக்க கோருவது கண்துடைப்பு நாடகம்” - சி.பி.ஐ சாடல்!

கொடிய கொரானாவின் தீவிர பரவலால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் மத்திய அரசு பார்க்க மறுக்கிறது.

“நீட் தேர்வை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒத்திவைக்க கோருவது கண்துடைப்பு நாடகம்” - சி.பி.ஐ சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் வேளையில் நீட் தேர்வை நடத்தக்கூடாது எனவும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசும் வழக்கு போட வேண்டும். நீட் நுழைவுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்திட வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என மாணவர்கள் பெற்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் மாணவர்கள் உரிமையை நிலைநாட்டும் முறையிலும் பா.ஜ.க. தவிர்த்து மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்துவது மட்டுமின்றி தனித்தும், கூட்டாகவும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்ட காரணத்தால் அனிதா தொடங்கி பல மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது ஆறாத் துயரமாகும். இந்நிலையில் இவ்வாண்டு வரும் 13-ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

“நீட் தேர்வை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒத்திவைக்க கோருவது கண்துடைப்பு நாடகம்” - சி.பி.ஐ சாடல்!

தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தும் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில், கொடிய கொரானாவின் தீவிர பரவலால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் மத்திய அரசு பார்க்க மறுக்கிறது.

பல்வேறு மாநிலங்களும் நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருவதையும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த இயலாமல் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளதையும் கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.

இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்து அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டுமென மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருக்கு, தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதியிருப்பது கண்துடைப்பு நாடகம் ஆகும்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்ததை மாநில அமைச்சர் மறந்துவிடக் கூடாது.

நாடு முழுதுவம் உள்ள நெருக்கடி நிலைகளை உணர்ந்த மேற்கு வங்கம், மராட்டியம், ராஜஸ்தான், ஜார்கண்ட், பஞ்சாப், சத்திஸ்கர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என வழக்குத் தொடர முடிவு செய்துள்ளன.

தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றத்தை நாடி நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அடிப்படையில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற வழிவகை செய்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மாநில முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories