அரசியல்

இந்தியில் யோகா பயிற்சி: “இது திணிப்பில்லாமல் வேறென்ன? ஜனநாயகத்துக்கு உகந்ததா?” - கி.வீரமணி சரமாரி கேள்வி!

தமிழகத்தைச் சேர்ந்த 37 பிரதிநிதிகளும், எங்களுக்கு இந்தி தெரியாது - ஆங்கிலத்தில் நடத்துங்கள் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அதனைப் புறக்கணித்து, தொடர்ந்து இந்தியிலேயே நடத்தியது கண்டிக்கத்தக்கது.

இந்தியில் யோகா பயிற்சி: “இது திணிப்பில்லாமல் வேறென்ன? ஜனநாயகத்துக்கு உகந்ததா?” - கி.வீரமணி சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய சுகாதாரத்துறையால் நடத்தப்பட்ட நேச்சுரோபதி யோகா பயிற்சிகள் அனைத்தும் இந்தியில் நடத்தப்பட்டது சரியானதுதானா என கேள்வி எழுப்பி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், குறிப்பிட்டுள்ளதன் விவரம்:

மத்திய சுகாதாரத் துறை ‘‘ஆயுஷ்’’ அமைச்சகத்துறை சார்பில் நேச்சுரோபதி மற்றும் யோகாபற்றிய பயிற்சிக்கான காணொலி நிகழ்ச்சியில் பயிற்சி பெறுவதற்காக கலந்துகொண்ட தமிழ்நாட்டு பிரதிநிதிகள் அனைவரும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அது என்னவென்றால், நிகழ்ச்சிகளில் கேள்வி - பதில் முதல் பலவும் பெரிதும் இந்தி மொழியிலேயே நடைபெற்றன.

தமிழர்களின் கோரிக்கை புறக்கணிப்பு!

பங்கேற்ற தமிழ்நாடு உறுப்பினர்களுக்குத் திகைப்புதான் ஏற்பட்டது. இந்த உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களுக்கு இந்தி மொழி தெரியாது; ஆங்கிலத்தில் விளக்குங்கள் என்று தொடர்ந்து கவலையுடன் எழுப்பிய கோரிக்கைகளைப் பயிற்சி வகுப்பு நடத்திய மத்திய அரசின் சுகாதாரத்துறைச் செயலாளரான வைத்தியா ராஜேஷ் கோட்டிசா என்பவர் லட்சியமே செய்யாமல், இந்தியில் விளக்கங்களைத் தொடர்ந்து தந்துள்ளார்!

இந்தியில் யோகா பயிற்சி: “இது திணிப்பில்லாமல் வேறென்ன? ஜனநாயகத்துக்கு உகந்ததா?” - கி.வீரமணி சரமாரி கேள்வி!

‘‘பயிற்சி வகுப்பைவிட்டு வெளியேறுங்கள்’’ ஆத்திரத்துடனும், ஆணவத்துடனும் பதில்!

அப்போது அந்த மத்திய அரசின் செயலாளரிடம், ‘‘ஆங்கிலத்திலும் விளக்குங்கள், எங்களுக்கு இந்தி தெரியாது’’ என்று தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் கூறுவதை அறவே லட்சியம் செய்யாமல், ‘நான் இந்தியில்தான் விளக்குவேன்; எனக்கு இங்கிலீஷில் விளக்கப் போதிய அளவில் வராது; ஆகவே, இங்கிலீஷ் விளக்கம்தான் தேவை என்று கேட்கும் பயிற்சியாளர்கள் இந்தக் காணொலி பயிற்சி வகுப்பை விட்டு வெளியேறலாம்‘ என்று ஆத்திரத்துடனும், ஆணவத்துடனும் பதிலளித்துள்ளார்! (இவரே ஆங்கிலத்தில் பேசிய பல காணொலி நிகழ்ச்சிகள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது). இது வீடியோ காட்சியில் பதிவு செய்யப்பட்டு, பரவியுள்ளது.

இதுகுறித்து இந்த வீடியோ - காணொலிப் பதிவு - திட்டமிட்டு புனையப்பட்டுள்ளது (Manipulated) என்று விளக்கம் கூறியுள்ளார் இந்த யூனியன் அமைச்சகச் செயலாளர்!

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேசிய அளவில் நடைபெற்ற இந்த பயிற்சிக்கு ஒருவரைத் தேர்வு செய்து அனுப்பியுள்ளது. இந்தியிலும், இங்கிலீஷிலும் கலந்து நடவடிக்கைகள் நடைபெறுவதால், நேரம் அதிகமாகி விடுகிறது என்று ஒரு ‘விசித்திர விளக்கம்‘ தரப்பட்டுள்ளது!

இந்தியிலே தொடர்ந்து விளக்கங்கள் தரப்பட்டுக் கொண்டிருந்ததால், தமிழ்நாட்டு உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களுக்குப் புரியும் வகையில் இங்கிலீஷில் விளக்குங்கள் என்று கேட்டும், அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை. அலட்சியமும், ஆணவமுமே பதிலாகக் கிடைத்த வேதனை மிகுந்த நிலை!

பயிற்சி முகாமின் நோக்கம் தோல்வி!

அப்பயிற்சி முகாம் ஏற்படுத்தியதன் நோக்கம் இதனால் தோல்வி அடைந்தது; இந்தி வெறிதான் வென்றது என்பதுதானே முடிவு.

ஒரு காணொலிப் பயிற்சி முகாமில், அதில் தமிழ்நாடு மற்றும் அகில இந்திய அளவில் வரும்போது, வெறும் இந்தி மொழி மட்டுமே என்றால், இது முழுக்க இந்தித் திணிப்பு அல்லாமல் வேறு என்ன?

மத்திய அரசின் துறைச் செயலாளராக உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ள ஒருவருக்கு இங்கிலீஷில் விளக்கத் தெரியாது; விளக்க வராது என்றால், அது உண்மையாக இருக்குமானால் - எப்படிப்பட்டவர் மத்திய அரசின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று நாட்டோர் கேட்கமாட்டார்களா? மத்திய அரசுக்கு இது பெருமை தருவதாக ஆகுமா?

பன்மொழி கலாச்சாரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் நிகழ்வுகள்

இந்தியாவின் பன்மொழி கலாசாரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் நிகழ்வுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டே உள்ளன!

ஆங்கில விளக்கத்தையாவது பயிற்சியாளர்களுக்குத் தனியே அளித்திருக்க முன்வந்திருக்க வேண்டாமா? ‘‘கேட்டால் கேளுங்கள்; இல்லையேல் வெளியேறுங்கள்’’ என்று ஒரு அரசின் பொறுப்புள்ள அதிகாரி ஆணவத்துடன் கூறலாமா?

நாளும் இந்தித் திணிப்பு, சமஸ்கிருத மயம் அரங்கேற்றப்பட்டு வருகின்றன!

இந்தி ஆதிக்க சாம்ராஜ்ஜியம் தனது ‘ரத, கஜ துரக, பதாதிகளுடன்’ நாளும் இந்தி திணிப்பு, சமஸ்கிருத மயம் அரங்கேற்றப்பட்டு வருகிற கொடுமைக்கு இந்த சம்பவமும் ஓர் எடுத்துக்காட்டு!

ஜனநாயகத்திற்கு உகந்ததுதானா?

மக்களாட்சியில் அரசமைப்புச் சட்டத்திலுள்ள 22 மொழியாளர்கள் இந்தி தவிர மற்றவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட ‘‘தண்டனையை’’ அனுபவிப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததுதானா? மக்களின் கேள்வி இது.

banner

Related Stories

Related Stories