அரசியல்

"ஒளி மங்கியதில்லை உதயசூரியன்! - அருந்ததியர் வாழ்வில் ஒளியேற்றிய தி.மு.க!” : பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

“எத்தனை மேகங்கள் சூழ்ந்தாலும், உதயசூரியனின் காலை விடியலைத் தடுத்துவிட முடியாது” எனக் குறிப்பிட்டு இன்றைய முரசொலி நாளிதழில் கட்டுரை தீட்டியுள்ளார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்.

"ஒளி மங்கியதில்லை உதயசூரியன்! - அருந்ததியர் வாழ்வில் ஒளியேற்றிய தி.மு.க!” : பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஒளி மங்கியதில்லை உதயசூரியன்!

அன்று நான் அறிவாலயத்தில், தலைவர் கலைஞர் அவர்களின் எதிரில் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தேன். அருந்ததியர் சமூகத்திற்காக ஓர் அமைப்பினை நடத்தி வரும் தோழர் ஜக்கையன் அவர்களும், அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் சிலரும், முதலமைச்சராக அன்று இருந்த தலைவர் அவர்களைப் பார்க்க வந்திருந்தனர்.

"அய்யா, அருந்ததியினர் சமுகத்திற்கு நீங்கள் கொடுத்த உள் ஒதுக்கீடு, இந்த ஓர் ஆண்டில், எங்கள் சமூகத்துப் பிள்ளைகள் பலர் படித்து மேலே வருவதற்குப் பெரும் உதவியைச் செய்துள்ளது" என்று சொல்லி தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். அவர்கள் கூற்றில் உண்மையும், உருக்கமும் இருந்தன.

ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான், "அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மூட்டைகளில் அடி மூட்டையான அருந்ததியர் வாழ்வில் பல முன்னேற்றங்கள் ஏற்படுவதற்குத் திராவிட இயக்கமும், தலைவர் கலைஞரும் காரணம்" என்று பல மேடைகளிலும், நேரிலும் கூற நான் கேட்டிருக்கிறேன்.

இன்றும் அருந்ததியர் சமூக முன்னேற்றத்திற்காக அமைப்புகளை நடத்திவரும் நண்பர்கள், தமிழ்ப் புலிகள் இயக்கத் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடத் தமிழர் கட்சித் தலைவர் வெண்மணி ஆகியோரும் இதே கருத்தினைக் கொண்டவர்கள்.

என்றோ வெளிவந்த "மதுரைவீரன்" திரைப்பட மாயையில் சிக்கித் திசை மாறிய அந்த உழைக்கும் மக்கள் பலரும் இன்று உண்மை அறிந்து, தி.மு.கவின் ஆதரவாளர்களாக உள்ளனர். இதனைக் காணப் பொறாத நெஞ்சினர் சிலர், தி.மு.க தலித் மக்களுக்கு எதிரான கட்சி என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

"ஒளி மங்கியதில்லை உதயசூரியன்! - அருந்ததியர் வாழ்வில் ஒளியேற்றிய தி.மு.க!” : பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

ஒடுக்கப்பட்ட அச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைச் சட்டமன்ற அவைத் தலைவர் ஆக்கிவிடுவதன் மூலமோ, அச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தங்கள் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆக்கிவிடுவதன் மூலமோ, அம்மக்களின் வாழ்வில் ஒட்டுமொத்த ஒளியை ஏற்றி விட முடியாது. எப்போதும் விதிவிலக்குகள் விதி ஆவதில்லை.

திராவிட இயக்கம், தன் அடி நாள் தொட்டே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடி வருகின்ற இயக்கம். தந்தை பெரியார் காங்கிரசை விட்டுப் பிரிந்து, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்தபோதே வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார். அதில் மீண்டும் மீண்டும் சிறை சென்றார்.

"ஈழவர்கள் என்ற பிற்படுத்தப்பட்ட சாதியினருக்காக வைக்கத்தில் நடந்த போராட்டத்தை, ஏதோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கான போராட்டம் என்பது போல் பெரியார் பக்தர்கள் சித்தரிக்கின்றனர்" என்று எழுதி உண்மையை மறைக்கப் பல முயற்சிகள் நடந்தன. ஆனால் அது ஈழவர், தீயர், புலையர் எனப் பல்வேறு சாதியினரின் உரிமை காக்க நடந்த போராட்டம் என்பதை வரலாறு எடுத்துரைக்கின்றது.

அப்போராட்டம் தாழ்த்தப்பட்டோருக்கானது என்பதனை அண்ணல் அம்பேத்கர் அவர்களே குறிப்பிட்டுள்ளார். தனஞ்சய் கீர் எழுதியுள்ள அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூலில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது.

"தீண்டத்தகாத மக்களின் போராட்டம் தொடர்பாக ஈடு இணையற்றதொரு நிகழ்ச்சி, 1925 இல் நடைபெற்றது. திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில், வைக்கத்தில் சில தெருக்களில், தீண்டக்கூடாத மக்கள் நுழையக்கூடாது என்று தடுக்கப்பட்டிருந்தனர். இந்தத் தெருக்களில் நடப்பதற்கான உரிமையை நிலைநாட்டிடப் பார்பபனரல்லாதாரின் தலைவரான ராமசாமி நாயக்கர் தலைமையில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. அந்த அறப்போராட்டம் விளைவித்த சிந்தனைத் தாக்கமும், தன்னுரிமை உணர்ச்சிப் பெருக்கமும் பரவலாக மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தின" என்கிறார் அண்ணல் அம்பேத்கர் (பக்.66).

"ஒளி மங்கியதில்லை உதயசூரியன்! - அருந்ததியர் வாழ்வில் ஒளியேற்றிய தி.மு.க!” : பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

அண்ணல் நடத்திய "மூக் நாயக்" (ஊமைகளின் தலைவன்) என்னும் ஏட்டிலும் இக்குறிப்பு இடம்பெற்றுள்ளது. அதனை மராத்தி மொழியிலிருந்து தமிழில் தலித் முரசு ஏட்டின் ஆசிரியர் புனித பாண்டியன் வெளியிட்டுள்ளார்.

1938 ஆம் ஆண்டு, நீடாமங்கலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தாழ்த்தப்பட்ட தோழர்கள் தாக்கப்பட்டபோது, அவர்ளுக்காகச் சுயமரியாதை இயக்கம் எப்படிப் போராடியது என்பதனை ஒரு நூலாகவே, பேராசிரியர் நீலகண்டன் எழுதி வெளியிட்டுள்ளார். கோயில் நுழைவு உரிமைப் போராட்டங்கள் உள்ளிட்ட பல போராட்டங்களை நம்மால் சுட்ட முடியும். விரிவஞ்சி அனைத்தையும் எழுத இயலவில்லை. 2006-2011 இல், கழக ஆட்சி நடைபெற்றபோது, சமூக நீதிக்காக நாம் செய்த செயல்களில் ஒன்றே ஒன்றை இங்கு குறிப்பிடலாம்.

இந்நிகழ்வு குறித்து, நீதியரசர் கே.சந்துரு அவர்கள், "அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்" என்னும் நூலில் விரிவாக எழுதியுள்ளார். அவ்வழக்கையும், அதற்குப் பிறகு முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் ஆற்றிய பணியையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

சத்துணவு மையத்திற்குப் பணியாளர்களை அமர்த்தும்போது, அவருடைய இருப்பிடம் ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் என்று ஒரு விதி, வழிகாட்டு நெறிமுறையில் இருந்தது. ஊருக்குப் புறத்தேதான் இன்றும் சேரிகள் உள்ளன என்பதால், இந்த விதியின் காரணமாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் வேலையில் சேர முடிவதில்லை. நெல்லை மாவட்டம், முத்துசாமிபுரம், யாதவர் தொடக்கப் பள்ளியில், இதனைக் காரணம் காட்டி, ஆறுமுகத்தாய் என்னும் தலித் பெண்மணியை அந்தப் பள்ளி நிர்வாகம், சத்துணவுக் கூட உதவியாளராகச் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டது.

இந்த வழக்கில், சட்டத்திற்குப் புறம்பான இந்த விதியை நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து நீதிபதி சந்துரு தீர்ப்பளித்தார். இதனையொட்டி என்ன நடந்தது என்பதனை நீதிபதியின் சொற்களிலேயே நாம் படிக்கலாம்.

"அன்றைய முதல்வர் கலைஞர், உடனே இத்தீர்ப்பை அமுல்படுத்தி, 6.7.2010 அன்று, அரசாணை ஒன்றை (எண் 142) சமூக நலத்துறை சார்பாக வெளியிட்டார். அவ்வுத்திரவின் மூலம் கிட்டத்தட்ட 25000 தலித் பெண்களுக்கு இடஒதுக்கீடு மூலம், சத்துணவுப் பணிகளுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது" (பக்.59)

இதனை விட வேறு என்ன சான்று வேண்டும்? இன்னும் எடுத்துரைக்க எவ்வளவோ உள்ளன.

"ஒளி மங்கியதில்லை உதயசூரியன்! - அருந்ததியர் வாழ்வில் ஒளியேற்றிய தி.மு.க!” : பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

மூன்று மாதங்களுக்கு முன்னால் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய, பிறகு வருத்தமும் தெரிவித்த சில சொற்களுக்காக அவரைக் கைது செய்கின்றது அரசு. கொரோனா காலத்தில் தி.மு.கழகம் மக்களுக்குச் செய்துவரும் தொண்டினைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு, கைது நடவடிக்கையின் மூலம் மக்களைத் திசை திருப்பப் பார்க்கின்றது.

மத்தியில் இருக்கும் அரசோ, தி.மு.கவின் பொறுப்பாளர் ஒருவரைத் தன் கட்சிக்கு இழுத்துவிட்டால், தி.மு.கவே ஒளிமங்கி ஒதுங்கிவிடும் என்று கற்பனையில் மிதக்கிறது. எத்தனை மேகங்கள் சூழ்ந்தாலும், உதயசூரியனின் காலை விடியலைத் தடுத்துவிட முடியாது என்பதனைப் பலமுறை காலம் சொல்லியிருக்கிறது. ஆனாலும் நம் எதிரிகள் பாடம் கற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

- சுப. வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)

முரசொலி 25-5-2020

banner

Related Stories

Related Stories