அரசியல்

“பா.ஜ.கவினர் பங்குபெறும் விவாதங்களில் காங். கூட்டணியினர் பங்கேற்க மாட்டார்கள்” : காங். அதிரடி அறிவிப்பு!

குறிப்பிட்ட தொலைக்காட்சியில் பா.ஜ.கவினர் பங்கேற்கும் விவாதங்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எவரும் பங்கேற்ற மாட்டார்கள் என காங்கிரஸ் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ராகுல் காந்தி செயல்பட்டது குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கருத்து கேட்கப்பட்டபோது, அவரது பதில் பலரையும் முகம்சுளிக்கச் செய்தது. நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு அரசியல் அரங்கிலும், சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு உருவானது.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றை நடத்தியது. அதில் பல்வேறு கட்சியினரும் கலந்துகொண்டனர். அதில் காங்கிரஸ் சார்பில் கரூர் எம்.பி ஜோதிமணியும், பா.ஜ.க சார்பில் மாநிலக் குழு செயலாளர் கரு.நாகராஜனும் பங்கேற்றனர்.

விவாதத்தின்போது கரு.நாகராஜன், எம்.பி ஜோதிமணியை ஒருமையில் குறிப்பிட்டு கீழ்த்தரமான விதத்தில் விமர்சித்தார். இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, உடனடியாக விவாதத்திலிருந்து வெளியேறினார் ஜோதிமணி எம்.பி.

இவ்விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி, கரு.நாகராஜனுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. கரூர் எம்.பி ஜோதிமணிக்கு ஆதரவாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். #I_standwith_Jothimani என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகத்துறை தலைவர் கோபண்ணா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை தமிழக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அனைத்தின் ஒப்புதலுடன் விடுக்கப்படும் கூட்டறிக்கையாக வெளியாகியுள்ளது.

அதில், “நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற கரூர் எம்.பி ஜோதிமணியை இழிவாகப் பேசிய கரு.நாகராஜனை வன்மையாகக் கண்டிக்கிறோம். தனிப்பட்ட முறையில் எம்.பி ஜோதிமணியை தரக்குறைவாக கரு.நாகராஜன் பேசுவதற்கு நெறியாளர் அனுமதித்தது மிகுந்த வேதனைக்குரியது.

வரம்புமீறி நாகரீகமற்ற முறையில் பேசிய கரு.நாகராஜனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையில் இருந்து நெறியாளர் முற்றிலும் தவறிவிட்டார். கரு.நாகராஜனை கண்டிக்கும் வகையில் அந்தத் தொலைக்காட்சி செயல்படவில்லை. எனவே அத்தொலைக்காட்சியில் பா.ஜ.க-வினர் பங்கேற்கும் விவாதங்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எவரும் பங்கேற்ற மாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories