அரசியல்

”கடவுளின் பெயரால்” மரபை “உளமார உறுதியேற்கிறேன்” என மாற்றியதற்குப் பின்னான ஜனநாயகப் போராட்டம்!

கடவுளின் பெயரால் உறுதி ஏற்க மறுப்பது அல்லது நிராகரிப்பது, அதற்கு மாற்றாக, ‘உளமார’ உறுதி ஏற்பது என்பது எளிதாகக் கிடைத்த வாய்ப்பு அல்ல.

”கடவுளின் பெயரால்” மரபை “உளமார உறுதியேற்கிறேன்” என மாற்றியதற்குப் பின்னான ஜனநாயகப் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி உள்ளாட்சியில் வெற்றி வாகை சூடியது. தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அதன்படி, பார்வதி எனும் பெண், ஊராட்சி வார்டு உறுப்பினராகப் பதவியேற்றபோது 'கலைஞர் அறிய, உளமார’ எனச் சொல்லிப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சிகொள்ளச் செய்துள்ளது.

இந்நிலையில், உளமார உறுதி கூறும் மரபு தொடங்கிய வரலாறு குறித்து சமூக வலைதள பக்கத்தில் எழுதியுள்ளார் பத்திரிகையாளர் கோவி.லெனின். அவரது பதிவு பின்வருமாறு :

பதவியேற்பை நடத்தி வைத்த அலுவலர், “கடவுள் அறிய..” என்ற போது அதனை வெட்கம் கலந்த புன்னகையுடன் நிராகரித்து, ‘கலைஞர் அறிய’ என அழுத்தமாகக் கூறி, அதன் பிறகு, “உளமார உறுதி கூறுகிறேன்” எனப் பொறுப்பேற்றிருக்கிறார் ஊராட்சி உறுப்பினர் பார்வதி.

கடவுளின் பெயரால் உறுதி ஏற்க மறுப்பது அல்லது நிராகரிப்பது, அதற்கு மாற்றாக, ‘உளமார’ உறுதி ஏற்பது என்பது எளிதாகக் கிடைத்த வாய்ப்பு அல்ல. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒரு தனி மனிதனின் மிகப்பெரிய ஜனநாயகப் போராட்டம், சிறைவாசம் ஆகியவற்றுக்குப் பிறகு கிடைத்த, மகத்தான உரிமை. அந்த ஒற்றை மனிதர், பிராட்லா.

நார்த்தாம்ப்டனிலிருந்து பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு 1880ல் லிபரல் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார் இறை மறுப்பாளரான பிராட்லா. மதச்சார்பின்மை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர். அதற்கான அமைப்பையும் நடத்தியவர். நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கும்போது, ‘உண்மையான நம்பிக்கையுள்ள கிறிஸ்தவனாக கடவுளின் பெயரால் உறுதியேற்கிறேன்” எனச் சொல்வதற்கு பிராட்லா மறுப்புத் தெரிவித்தார்.

“கடவுள் மீது உறுதியெடுக்கச் சொல்கிறீர்கள். இதில் ஆரம்பச் சிக்கல் என்னவென்றால் கடவுள் என்ற வார்த்தையை விளக்குவதுதான். சரியாக விளக்கமுடியாத நிலையில், இந்த உறுதிமொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லின் அடிப்படையில், கடவுளை ஏற்கிறோமா மறுக்கிறோமா என்பதும் சமமாக விளக்க முடியாததாகும். என்னைப் பொறுத்தவரை, கடவுள் என்பது எவ்வித அர்த்தமும் இல்லாமல் தனித்து நிற்கும் ஒரு சொல். கடவுள் என்பது விளக்க முடியாததாக இருக்கும்வரையில், நான் கடவுளை மறுப்பதாகவும் கொள்ள முடியாது” என்றார் பிராட்லா.

charles bradlaugh
charles bradlaugh

அவர், கடவுள் பெயரால் உறுதியேற்க மறுத்ததால், அவரை அதிகாரப்பூர்வ உறுப்பினராக நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்க முடியவில்லை. மசோதாக்கள் மீதான அவரது வாக்குரிமையும் நிராகரிக்கப்பட்டன. சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறைவாசமும் அனுபவித்தார். ஆனாலும், தன் நிலையில் உறுதியாக இருந்த பிராட்லா, மாற்று வகையில் உறுதிமொழி ஏற்க வழிசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இதனையடுத்து, 1880ல் ஒரு தேர்வு கமிட்டி அமைக்கப்பட்டது. பின்னர், இரண்டாவது தேர்வு கமிட்டியும் அமைக்கப்பட்டது. கடவுளை மறுத்து உறுதிமொழி ஏற்பதா என பெரும்பாலான உறுப்பினர்கள் பிராட்லாவுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். பிராட்லாவின் போராட்டம் தொடர்ந்தது. அரை மாமாங்க காலப் போராட்டத்திற்குப் பிறகு, 1886ல் கடவுளின் மீது ஆணையாக என்பதற்குப் பதிலாக, உளமார (மனசாட்சியின்படி) உறுதிகூறி பதவிப் பிரமாணம் எடுப்பதற்கு பிராட்லா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மட்டுமல்ல, உரிய சட்டத்திருத்தத்தின் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடவுள் பெயராலோ, உளமாரவோ உறுதியேற்க அனுமதி வழங்கப்பட்டது.

உறுதி குலையாத அறவழிப் போராட்டத்தின் வழியாகப் பெற்றதுதான், ‘உளமார’ உறுதியேற்கும் வாய்ப்பாகும். பிரிட்டன் நாடாளுமன்றத்தைப் பெருமளவில் தழுவி, சட்டம் இயற்றப்பட்ட இந்திய நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் இதே நடைமுறையைக் கடைப்பிடிக்கின்றன. அதில், தமிழ்நாடு இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியானதாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1967ல் பதவியேற்ற அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. அரசில் அத்தனை பேரும் ‘உளமார’ (மனசாட்சியின்படி) உதவியேற்றனர். கடவுள் பெயரால் உறுதி ஏற்பதைத் தவிர்த்தனர். 1969, 1971 என இருமுறை பதவியேற்ற கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசிலும் அனைவரும் இதையே கடைப்பிடித்தனர். எம்.ஜி.ஆர் தலைமையில் 1977, 1980, 1984 என மூன்று முறை அ.தி.மு.க அரசு அமைந்தபோதும் இதே நடைமுறையே கடைப்பிடிக்கப்பட்டது. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு எம்.ஜி.ஆர் சென்று வந்தாலும், ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் தங்களின் ஆன்மிக ஈடுபாட்டை வெளிப்படுத்திக் கொண்டபோதும், ஆட்சி என்பது அண்ணா உருவாக்கிய வழியில் பதவியேற்க வேண்டும் என்பதைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்தனர். 1989, 1996, 2006 தி.மு.க ஆட்சியிலும் கலைஞரிலிருந்து அனைவரும் உளமார உறுதியேற்றனர்.

”கடவுளின் பெயரால்” மரபை “உளமார உறுதியேற்கிறேன்” என மாற்றியதற்குப் பின்னான ஜனநாயகப் போராட்டம்!

இந்த நடைமுறைக்கு இடையூறு செய்தவர், தமிழக அரசியலின் ஆகப்பெரிய கேடான ஜெயலலிதாதான். 1991ல் முதன்முதலாக அவர் முதல்வர் பொறுப்பை ஏற்றபோது, உளமார என்பதைத் தவிர்த்து, கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றார். ஆட்டுமந்தையில் முதல் ஆடு தாவினால், அத்தனை ஆடுகளும் ஏனென்று அறியாமலேயே தாவும். அதேபோல ஜெயலலிதா வழியிலேயே, கடவுளின் பெயரால் மற்ற அமைச்சர்களும் பதவியேற்க வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டது. மந்தையிலிருந்து பிரிந்த ஆடுகளாக திராவிட இயக்க மூத்த தலைவர்களான நாவலர் நெடுஞ்செழியனும், கே.ஏ.கிருஷ்ணசாமியும் உளச்சான்றின்படி உறுதியேற்றனர்.

2001ல் ஜெ இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தபோது நாவலர் உயிருடன் இல்லை, கே.ஏ.கே தேர்தல் களத்திற்கே வரவில்லை. அதனால் 2001, 2011, 2016 என ஜெ ஆட்சி அமைந்த போதெல்லாம் கடவுள் பெயரால் மட்டுமே உறுதிமொழி எடுக்கப்பட்டது. உளச்சான்றின்படி உறுதியேற்கலாம் என்பதை ஓ.பி.எஸ், எடப்பாடி போன்ற தற்காலிகப் பிரபலங்களும் அறிந்ததில்லை.

கடவுளின் பெயராலோ, உளச்சான்றின்படியோ இரண்டில் ஒன்றை ஒருவர் தேர்ந்தெடுத்து உறுதி மொழி ஏற்கலாம். இதனைக் கடந்து வேறு பெயர்களைச் சொன்னால், அந்த பதவிறேப்பு செல்லுமா என்பது கேள்விக்குறியாகிவிடும். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் எம்.பிக்கள் முறைப்படியாக பதவியேற்பு உறுதிமொழி ஏற்ற பிறகு தமிழ் வாழ்க, தமிழ்நாடு வாழ்க, திராவிடம் வாழ்க, பெரியார்-அண்ணா-கலைஞர் வாழ்க என்று சொன்னவை எதுவும் அவைக் குறிப்பில் பதிவாகாது எனத் தெரிவிக்கப்பட்டது. அவை உண்மை உணர்வு வெளிப்படுத்தும் சொற்கள்.

பொதுவாக, பதவியேற்பு உறுதிமொழி படிவத்தில், கடவுள் அறிய அல்லது உளமார என்பதை, கடவுளறிய/உளமார என அச்சிட்டிருப்பார்கள். பார்வதிக்கான பதவியேற்பு நிகழ்வை நடத்தியவர் இரண்டையும் சேர்த்துப் படிக்க, பார்வதியோ கடவுளின் இடத்தில் கலைஞரை வைத்து, திராவிட இயக்கத்தின் வழியில் உளமார உறுதியேற்று இருக்கிறார். சட்டம் வழங்கியுள்ள வாய்ப்பினை அவர் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார். பெண்களுக்கான சொத்துரிமை, இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, சுய உதவிக் குழு, திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி என அனைத்தும் தந்த கலைஞரை கடவுளாக கிராமத்துப் பெண்ணான பார்வதி நினைத்திருக்கலாம்.

இரும்புப் பெண்மணி என உரு (துரு)வேற்றப்பட்டவரால் தகர்க்கப்பட்ட திராவிட இயக்க நடைமுறை, ஓர் எளிய பெண்மணியால் மீட்கப்பட்டிருக்கிறது.

- கோவி.லெனின், பத்திரிகையாளர்

banner

Related Stories

Related Stories