அரசியல்

#CAA : 11 மணிக்கு ட்வீட், அமித்ஷா பயம்? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இரட்டை நாக்குப் பேச்சு ரஜினி !?

#CAA : 11 மணிக்கு ட்வீட், அமித்ஷா பயம்? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இரட்டை நாக்குப் பேச்சு ரஜினி !?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க நிறைவேற்றிய குடியுரிமை சட்டம் 2019-ஐ எதிர்த்து நாடு முழுவதும் எட்டாவது நாளாக மாணவர்களும், பொதுமக்களும் போராடி வருகின்றனர். பற்றி எரியும் இந்த விவகாரம் தொடங்கி ஒரு வாரம் கழித்து நேற்று இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் இன்னும் கட்சி தொடங்காத நடிகர் ரஜினிகாந்த்.

”நாம யாரு வம்பு தும்புக்கும் போறதில்லப்பா..!” என்பது போல 5 வரியில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் இந்த நாட்டுக்கு என்ன கருத்து கூற விரும்புகிறார் என்பதைக் கொஞ்சம் ஆராய்வோம்.

“எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது”
ரஜினிகாந்த்
ரஜினி ட்வீட்
ரஜினி ட்வீட்

ரஜினியின் இந்தப் பதிவை முதலில் படிக்கும்போது இதில், இவர் எதை பிரச்சினை என்கிறார்? எதை வன்முறை என்கிறார்? எதை ஆதரிக்கிறார் எதை எதிர்க்கிறார்? எதற்கு வருந்துகிறார்? என்கிற கேள்விகள் உங்களுக்குள் நிச்சயம் ஏற்படும். இந்த கேள்விகளை வைத்துக்கொண்டு அவரது பதிவில் இருந்து பொருள் தோண்டி கண்டுபிடிக்க முடியுமா என்று பார்ப்போம்.

”பிரச்சினை” - என்ன பிரச்சினை? இப்போது இருக்கிற அரசியல் சூழலை வைத்து பார்க்கும்போது, குடியுரிமைச் சட்டம் 2019 தான் எதிர்ப்பு என்று எடுத்துக் கொள்வோம். சரி, குடியுரிமை சட்டம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் ஏன் ரஜினிக்கு தயக்கம்.

’குடியுரிமை இப்போது சட்டப் பிரச்சினை’ என்று கூறிவிட்டால், அது ஒரு பிரச்னையா என்று அமித் ஷா தன் மீது கோபம் கொள்வாரோ என்ற பயமா?. இல்லை, ’குடியுரிமை சட்டப் பிரச்சினை’ என்பதை சேர்த்துவிட்டு, வன்முறை தீர்வாகாது என்று சொல்வதனால், தான் பா.ஜ.க ஆதரவானவன் என்பதை வெளிப்படையாக மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்ற பயமா சூப்பர்ஸ்டார்?

#CAA : 11 மணிக்கு ட்வீட், அமித்ஷா பயம்? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இரட்டை நாக்குப் பேச்சு ரஜினி !?

ஏன் இவ்வளவு பயம்? நான் என்ன நிலைப்பாடு எடுக்கிறேன் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவே இவ்வளவு பயம் கொள்ளும் ரஜினிகாந்த் தான், அரசியல் கட்சி தொடங்கி அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்துவாரா என்று மக்கள் மனதில் கேள்விகள் ஓட ஆரம்பித்து இருக்கும்.

தமிழகத்தின் மற்ற கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்துவிட்டனர். இவ்வளவு ஏன், சக நடிகர், நண்பர், அரசியல் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூட தன் நிலைப்பாட்டை அறிவித்துவிட்டார். தன் நிலைப்பாட்டிலேயே இவ்வளவு தெளிவில்லாமல் இருக்கும் ஒருவர் எப்படி ஒரு நல்ல தலைவராக இருக்கமுடியும்?

#CAA : 11 மணிக்கு ட்வீட், அமித்ஷா பயம்? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இரட்டை நாக்குப் பேச்சு ரஜினி !?

”வன்முறை” - ஜாமியா பல்கலைக்கழகத்தில் அமைதியாக போராடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது வன்முறையை நடத்தியது காவல்துறை.

பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து மாணவர்களைத் தாக்கியதோடு, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளது போலிஸ்.இப்படி அத்தனை வன்முறைகளையும் அரச இயந்திரங்கள் தங்கள் மீது பிரயோகிக்கும் நிலையில், தடிகளை ஏந்திய காவல்துறையின் கையில் பூ கொடுத்த இளைஞர்கள் பற்றி ரஜினி அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது நடப்பது மக்களின் எழுச்சி. இது வன்முறையல்ல; உரிமைக்கான போராட்டம்!. முதலில் அதை உணர்ந்து கொள்ளுங்கள் ரஜினிகாந்த் !

தன் நிலைப்பாட்டை துணிவோடு தெரிவிக்க அச்சப்படும் ரஜினிகாந்த், உரிமைக்கான போராட்டத்தை வன்முறை என்று கூறும் ரஜினிகாந்த் தான் அரசியலில் அதிசயம் நிகழ்த்தப்போவதாக பேசிக் கொண்டிருக்கிறார். தான் பெரும் வரலாற்றை தீட்டிக் கொண்டிருப்பதாக ரஜினி நினைக்கிறார், ஆனால் அந்த வரலாறு, தன் ரசிகர்களின் நம்பிக்கையை உடைத்தெறிந்த ஒரு ஹீரோ ‘ஜீரோ’வான வரலாறாகவே இருக்கப்போகிறது.

#CAA : 11 மணிக்கு ட்வீட், அமித்ஷா பயம்? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இரட்டை நாக்குப் பேச்சு ரஜினி !?

ரஜினியின் இந்த ஈயம் பூசி - பூசாத மாதிரியான பேச்செல்லாம் இன்று நேற்று கதையல்ல; தன் படங்களுக்கு விளம்பரம் தேவையான போதும், ரசிகர்களை உசுப்பிவிடவும் அடிக்கடி பயன்படுத்தும் மந்திரம்தான். ஆனால், இந்த முறை இது மற்ற பிரச்னைகளைப் போல அல்ல, தன் சொந்த தேசத்து மக்களையே அகதிகளாக்கும் முயற்சி என்பதை ரஜினிக்கு யார்தான் சொல்லப்போகிறார்கள் ?

தன் நிலைப்பாட்டை அறிவித்து, தமிழகத்தின் அனைத்து அரசியல், அரசியல் சாரா அமைப்புகள், இயக்கங்கள், பொதுமக்கள், மாணவர்கள் என இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஓரணியில் திரண்டு நிற்கும்போது, அ.தி.மு.க - பா.ம.க மட்டும் முடிந்த வரையில், பா.ஜ.க அரசுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. அதன் பலனாக அவை இரண்டும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டும் போயின.

அதேபோல் இப்போது ரஜினியும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறார். அவரை இதுநாள் வரையில், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அவரது ரசிகர்களே ரஜினியின் இந்தப் பேச்சால் நொந்துபோய் இருக்கிறார்கள். சினிமாவில் மட்டும் தன் நண்பர் அன்வருக்காக போராடிய ரஜினி, உண்மையில் உரிமைக்கான போராட்டத்தைப் பார்த்து வன்முறை என்று சொல்லி இருப்பது நகை முரண்.

#CAA : 11 மணிக்கு ட்வீட், அமித்ஷா பயம்? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இரட்டை நாக்குப் பேச்சு ரஜினி !?

இத்தனைக்கும் தனது பா.ஜ.க ஆதரவு ட்வீட்டை இரவு 11 மணிக்கு மேல் வெளியிட்டிருக்கிறார் ரஜினி. ஏன் அதை வெளிப்படையாக சொல்வதற்குக் கூட இத்தனை பயம் ரஜினிக்கு ? பா.ஜ.க.,வுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும், மக்களிடையே நல்ல இமேஜையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற ரஜினியின் இந்த மனப் போராட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு ?

இப்படியான இரட்டை நாக்குப் பேச்சுகளைப் பேசிவிட்டு மக்களிடம் போனதால்தான், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது அவரைப்பார்த்து இளைஞர் ஒருவர், ‘ஆமா... நீங்க யாரு...?’ என்கிற கேள்வியையும், அதற்கு ’நான்தான்பா ரஜினி....!’ என்கிற பதிலையும் சொல்ல நேர்ந்தது. அந்தக் கேள்வி ரஜினியை நோக்கிய ஒட்டுமொத்த தமிழகத்தின் கேள்வியே. இது எதையும் மக்கள் எளிதில் மறக்கமாட்டார்கள் மிஸ்டர் ரஜினி!

தன் ஒரு துளி வியர்வைக்கு, ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்து உயர்த்திவிட்ட மக்களுக்காக எப்போது குரல் கொடுக்கப்போகிறார் ரஜினி? என்கிற கேள்விகள் சாதாரண பொதுமக்கள் மட்டுமல்லாது, அவர்களது ரசிகர்களிடையேயும் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories