அரசியல்

“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நாங்குநேரியில் பல திட்டங்களை முடக்கியது அதிமுக அரசு” - காங். குற்றச்சாட்டு!

தோல்வி பயத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மீது முதலமைச்சர் எடப்பாடியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகத் தெரிவித்துள்ளார் கே.எஸ்.அழகிரி.

“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நாங்குநேரியில் பல திட்டங்களை முடக்கியது அதிமுக அரசு” - காங். குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க திட்டங்களை கிடப்பில் போட்டு மக்களை வதைத்தது அ.தி.மு.க அரசு எனக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு பாடம் புகட்டுகிற மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, தோல்வி பயத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மீது முதலமைச்சர் எடப்பாடியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். மக்களுக்கு தேவையான பல திட்டங்களை நிறைவேற்றியதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அரசியல் உள்நோக்கத்தோடு அ.தி.மு.க. ஆட்சியில் பாதியிலே நிறுத்தப்பட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது. இத்திட்டத்தை நிறைவேற்றினால் கலைஞர் ஆட்சிக்கு நற்பெயர் ஏற்பட்டு விடும் என்ற ஒரே காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திட்டங்கள் நிறுத்தப்பட்டன.

“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நாங்குநேரியில் பல திட்டங்களை முடக்கியது அதிமுக அரசு” - காங். குற்றச்சாட்டு!

கலைஞர் முதலமைச்சராக இருந்த போது 10, ஏப்ரல் 2008ம் ஆண்டில் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டானில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதற்கு மத்திய அரசு ஜூலை 2008ல் ஒப்புதல் வழங்கி, சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான அறிவிப்பை மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சகம் 18.11.2008ல் வெளியிட்டது.

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க ரூபாய் 14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த மண்டலத்தில் மின்விளக்கு தயாரிப்பு, மின்னணு தொலைத் தொடர்பு உற்பத்தித் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், மருந்துகள் தயாரிப்பு, இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் தயாரிப்பு, காற்றாலை உதிரி பாகங்கள் தயாரிப்பு என பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதற்காக நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்தொழிற்சாலைகள் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டது. 250 ஏக்கரில் மருந்து உற்பத்தி பூங்கா தொடங்க அனுமதி தரப்பட்டது. இதில் 50 சிறு, பெரிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு 2100 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு, மறைமுகமாக 6,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருந்தது. இதன்மூலம் ரூபாய் 500 கோடி மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டது.

“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நாங்குநேரியில் பல திட்டங்களை முடக்கியது அதிமுக அரசு” - காங். குற்றச்சாட்டு!

கங்கைகொண்டானில் தொடங்கப்படவிருந்த தகவல் தொழில்நுட்பப் பூங்கா எல்காட் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக ரூபாய் 55.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 120 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு தொழில் நிறுவனத்திற்கும் 50 ஆயிரம் சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த தொழில்நுட்ப பூங்காவை 20 பிப்ரவரி 2011 அன்று அன்றைய முதல்வர் கலைஞர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த தொழில்நுட்ப பூங்காவில் 400 மில்லியன் டயர்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, இன்டேன் சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை உருவாக்க திட்டமிடப்பட்டது. இதன்மூலம் ஒருநாளைக்கு 36 ஆயிரம் சிலிண்டர்களில் எரிவாயு நிரப்ப முடிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்படவிருந்த கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் மகத்தான பங்கை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் பயன் பெறத்தக்க வகையில் நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலமும், கங்கைகொண்டானில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவும் ஏற்படுத்தி, பொருளாதார வளர்ச்சியையும், வேலை வாய்ப்பையும் பெருக்குவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் 2011 இல் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் கிடப்பில் போடப்பட்டன. இதற்குப் பிறகு இதுவரை எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.

இந்த திட்டங்கள் நிறைவேறினால் கலைஞர் ஆட்சிக்கு அந்தப் பகுதி மக்களிடையே நற்பெயர் ஏற்பட்டு விடும் என்ற தவறான எண்ணத்தின் காரணமாக இத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. இந்த திட்டங்கள் நிறைவேறியிருந்தால் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு தொழில் வளர்ச்சியிலும், வேலை வாய்ப்பிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் மிகப்பெரிய அளவில் பயன்களை தரக்கூடிய வாய்ப்பை உருவாக்கியிருக்கும்.

“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நாங்குநேரியில் பல திட்டங்களை முடக்கியது அதிமுக அரசு” - காங். குற்றச்சாட்டு!

ஆனால், அ.தி.மு.க.விற்கே உரிய அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இத்தகைய திட்டங்கள் செயலிழக்கப்பட்டு, கடுமையான பாதிப்பை அந்தப் பகுதி மக்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றன. இதற்காக பலமுறை சட்டமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் அன்றைய முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து இத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

எனவே, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் செயல்பட்ட அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு சரியான பாடம் புகட்டுகிற வகையில் உரிய தீர்ப்பை வழங்க, காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அவர்களை வெற்றி பெறச் செய்கிற வகையில் அமோக ஆதரவினை வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார் கே.எஸ்.அழகிரி.

banner

Related Stories

Related Stories