அரசியல்

இந்தி திணிப்பு “தாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட யுத்த பிரகடனம்” : பினராயி ஆவேசம்!

மொழியின் பெயரால் நாட்டில் கலவரத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தி திணிப்பு “தாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட யுத்த பிரகடனம்” : பினராயி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அரங்கில் இந்தியாவில் அடையாளப்படுத்த முடியும் என்று அமித்ஷா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அமித்ஷாவின் கருத்திற்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், அமித்ஷாவிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த நாளில் ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை தான் அமித்ஷா வெளிப்படுத்தி இருக்கிறார். அமித்ஷாவின் இந்த கருத்து பெரும் போராட்டத்திற்கு வழிவகுக்க போகிறது.

அதுமட்டுமின்றி, மொழியின் பெயரால் நாட்டில் கலவரத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி செய்கிறது. இந்தி மொழியால் தான் ஒற்றுமையை உருவாக்க முடியும் என்ற அமித்ஷாவின் கருத்து அபத்தமானது. மொழிக்கு எதிரான அவர்களின் நடவடிக்கையை பார்க்கும் போது, தாயைப் போல் சொந்த மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட யுத்த பிரகடனம் இது என்றே தெரிகிறது” என்றார்.

மேலும், “எந்த இந்திய குடிமகனும் இந்தி பேசாததால், தான் இந்தியர் இல்லை என்று உணர வேண்டிய அவசியமில்லை. இந்தியா என்பது மொழிகளை அங்கீகரிக்கும் தேசத்தின் ஒரு வடிவம். சங்க பரிவார் இந்த நடவடிக்கைகளை கைவிடவேண்டும். நாடு மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் மற்ற முக்கிய பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பும் முயற்சிதான் இது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories