அரசியல்

“ஜெயலலிதா மரணத்தில் மர்மம் போல எடப்பாடியின் சுற்றுப்பயணத்திலும் மர்மம் வேண்டாம்”: முத்தரசன் வலியுறுத்தல்!

ஜெயலலிதா மரணத்தில் மர்மமாக இருந்ததைப் போல எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தையும் மூடி மறைத்துவிடக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

“ஜெயலலிதா மரணத்தில் மர்மம் போல எடப்பாடியின் சுற்றுப்பயணத்திலும் மர்மம் வேண்டாம்”: முத்தரசன் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தமிழக அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடுகளில் பெற்றதாகக் கூறப்படும் முதலீடுகளே இன்னும் கிடைக்காத நிலையில், தற்போதைய சுற்றுப்பயணத்தில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

இந்ந்நிலையில், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் எடப்பாடி பழனிசாமியை வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு கூறியுள்ளனர். ஜெயலலிதா மரணத்தில் மர்மமாக இருந்ததைப் போல சுற்றுப்பயணத்தையும் மூடி மறைத்துவிடக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடையே பேசிய முத்தரசன், “மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு 177 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்தது. அதேபோன்று இப்போதும் தண்ணீர் வீணாகி வருகிறது. இதைத் தவிர்க்க அரசு தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். அதைச் செய்யாமல் முதல்வர் இஸ்ரேல் பயணம் செல்வது தேவையற்றது.

அரசுமுறைப் பயணமாகத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்குச் சென்றார் என்றால், எதற்காக அவர் பயணித்தார், யார் யாரைச் சந்தித்தார், எத்தகைய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன, எவ்வளவு காலத்துக்குள் அவை நிறைவேறும் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டியது அவசியம்.

இதைத் தெரிவிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அறிக்கை கொடுக்காமல் இருந்ததைப் போல இதையும் மூடி மறைத்து விடக் கூடாது. எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories