அரசியல்

3 ஆண்டுகளாகத் திட்டமிட்டு டி.கே.சிவகுமாரை பழிவாங்கிய பாஜக... இரவோடு இரவாகக் கைது - கர்நாடகத்தில் பதற்றம்!

கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர்.

3 ஆண்டுகளாகத் திட்டமிட்டு டி.கே.சிவகுமாரை பழிவாங்கிய பாஜக... இரவோடு இரவாகக் கைது - கர்நாடகத்தில் பதற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரை அமலாக்கத் துறை அதிகாரிகள், கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடத்திவந்த நிலையில் நேற்று இரவு அவரைக் கைது செய்தனர்.

கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகார் குறித்து அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. தங்களுக்கு எதிரானவர்களை சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் பழிவாங்கும் போக்கை பா.ஜ.க அரசு தொடர்ந்து கையாண்டு வருகிறது. இதற்குக் காரணமாக சில முன்கதைகள் உண்டு.

கடந்த 2017ம் ஆண்டு குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிட்ட அகமது படேலை தோற்கடிக்க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கத் திட்டமிட்டது பா.ஜ.க. காங்கிரஸின் அப்போதைய அமைச்சரும், தொழிலதிபருமான டி.கே.சிவகுமார் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 44 பேரை கர்நாடகாவுக்கு அழைத்து வந்து தனது பாதுகாப்பில் வைத்திருந்து பா.ஜ.க-வின் திட்டத்தை முறியடித்தார்.

அப்போதிருந்தே, டி.கே.சிவகுமார் மீதும், அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் குமார் மீதும் பா.ஜ.க அரசு கண் வைத்தது. பா.ஜ.க-வின் திட்டத்தை முறியடித்ததற்காக பழிவாங்கும் நோக்கில் பா.ஜ.க அரசு, சிவகுமார் மீது வருமான வரித்துறையை ஏவியது. சமீபத்தில், கர்நாடகத்தில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க முயற்சித்தபோதும், கடுமையாக அம்முயற்சியை எதிர்த்துப் போராடினார் டி.கே.சிவகுமார்.

3 ஆண்டுகளாகத் திட்டமிட்டு டி.கே.சிவகுமாரை பழிவாங்கிய பாஜக... இரவோடு இரவாகக் கைது - கர்நாடகத்தில் பதற்றம்!

இந்நிலையில், அவர் மீதான அமலாக்கத்துறையின் பிடி இறுக்கப்பட்டு, நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். தான் கைது செய்யப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிவகுமார், “பா.ஜ.க-வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் இதுவும் ஒன்று. எதைச் செய்ய வேண்டுமோ அதனைக் கச்சிதமாக நடத்தி முடித்திருக்கும் பா.ஜ.க-வுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

சிவகுமார் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலம் தழுவிய பந்த்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. சிவகுமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பஸ் எரிப்பு, பஸ் கண்ணாடி உடைப்பு போன்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

இதனால் நிலைமை சீராகும் வரை சில தடங்களில் பேருந்துகளை இயக்கவேண்டாம் என போலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். பெங்களூருவில் பந்த் ஏதும் நடைபெறவில்லை என்றாலும் பெங்களூரு - மைசூரு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories