அரசியல்

“வாக்கெடுப்பு நடத்தும்வரை வெளியே செல்லமாட்டோம்” : விடிய விடிய சட்டசபையிலேயே இருந்த பா.ஜ.க எம்.எல்.ஏக்கள்!

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் விடிய விடிய சட்டப்பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

“வாக்கெடுப்பு நடத்தும்வரை வெளியே செல்லமாட்டோம்” : விடிய விடிய சட்டசபையிலேயே இருந்த பா.ஜ.க எம்.எல்.ஏக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கர்நாடகத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகளால் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என்றும், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சபாநாயகர் அறிவித்தபடி, கர்நாடக சட்டசபை நேற்று (ஜூலை 18) கூடியது. ஆளும் கூட்டணியான காங்கிரஸ்-ம.ஜ.த உறுப்பினரகள் - எதிர்க்கட்சியான பா.ஜ.க உறுப்பினர்களிடையே கடுமையான விவாதமும் கூச்சல் குழப்பமும் ஏற்பட்டதால் முதல்வர் குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

கடும் கூச்சல் குழப்பத்தால் நேற்று ஒரே நாளில் மூன்று முறை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட போதிலும் பா.ஜ.க உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேற மறுத்துவிட்டனர்.

“வாக்கெடுப்பு நடத்தும்வரை வெளியே செல்லமாட்டோம்” : விடிய விடிய சட்டசபையிலேயே இருந்த பா.ஜ.க எம்.எல்.ஏக்கள்!

“நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி பா.ஜ.க உறுப்பினர்கள் சட்டசபை கூட்ட அரங்கத்திற்குள்ளேயே இரவு முழுவதும் இருப்பார்கள்” என பா.ஜ.க தலைவர் எடியூரப்பா அறிவித்தார். அதன்படி அக்கட்சி உறுப்பினர்கள் கூட்ட அரங்கத்திலேயே படுத்துத் தூங்கினர்.

அரங்கத்திற்குள் தூங்கி இரவைக் கழித்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இன்று காலை எழுந்து, சட்டசபை வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டனர். பின்னர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளுக்கு தயாராகி வருகின்றனர். இன்று (ஜூலை 19) காலை 11 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது.

இன்று நண்பகல் 1:30 மணிக்குள், சட்டசபையில் கூட்டணி அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வர் குமாரசாமிக்கு, கவர்னர் கடிதம் அனுப்பினார். இதனால், குமாரசாமி அரசு ஆட்சியில் நீடிக்குமா என்பது இன்று பிற்பகலுக்குள் தெரிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories