அரசியல்

மோடி இனியும் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்ககூடாது - திருமாவளவன் எம்.பி.

பா.ஜ.க ஆட்சியில் தலித் மக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது என்று வி.சிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

மோடி இனியும் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்ககூடாது - திருமாவளவன் எம்.பி.
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மற்றும் பொதுச் செயலாளர் எம்.பி ரவிக்குமார் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.  அப்போது அவர்கள் பேசுகையில், “தி.மு.க கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மக்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து குரலெழுப்புவோம். மோடி அரசு கொண்டுவரும் அவசரச் சட்டத்தை மக்களவைக்குக் கொண்டுவரவேண்டும் என முன்பே வலியுறுத்தினோம். அதனை தற்பொழுது நாடாளுமன்றத்தில் இருந்து வலியுறுத்துவோம்” என்று தெரிவித்தனர்.

மேலும், “பெரும்பான்மை இல்லாத சூழலில் தி.மு.க கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களினால் எதையும் செய்ய முடியாது எனப் பலர் கருதுகின்றனர். அமைச்சரவையில் இடம் பெறாமல் எதிர்க்கட்சியாக இருந்தும் மக்களுக்கு சேவை செய்யமுடியும். எதிர்க்கட்சி எம்.பி.,க்கள்தான் ஒரு திட்டத்தின் தன்மைக்கு குறித்து ஆழமாக, வழுவாகக் கருத்து தெரிவிக்க முடியும். குறைபாடுகளை சுட்டிக்காட்டும் பலமும் உள்ளது.

பா.ஜ.க ஆட்சியின் போது தலித் மக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மீது அதிக அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அதனை முறியடிக்க எதிர்க்கட்சி வரிசையிருந்து நாங்கள் செயல்படுவோம். மேலும் தமிழகத்தில் தி.மு.க கூட்டணி பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வெற்றியடையச் செய்துள்ளனர். அதற்காக எங்களது முழு முயற்சியுடன் மக்களுக்கான பணிகளைச் செய்வோம் என உறுதியளித்தார்.

கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் மோடி அரசு சிறுபான்மையினர் சமூகத்திற்கு எதிராகவே இருந்துள்ளது. பணமதிப்பிழப்பு மூலமாக வணிகர்கள், விவசாயிகள் என பெரும் துயரம் அடைந்துள்ளனர். இருந்தபோதிலும் மக்கள் மீண்டும் மோடியைப் பிரதமராகத் தேர்வு செய்துள்ளனர். அதனால் மோடி இனியும் தான்தோன்றித்தனமான எந்த முடிவையும் எடுக்காமல், எதேச்சதிகாரப் போக்கினை கடைப்பிடிக்கக்கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும், விவசாய மக்களுக்கும் உரியப் பாதுகாப்பு மற்றும் அவர்கள் வாழ்வுரிமை பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories