அரசியல்

“ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடருவேன்” : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடி!

தேனி மக்களவைத் தொகுதியில் நிறைய தில்லுமுல்லுகள் நடந்தன; அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன எனத் தெரிவித்துள்ளார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

“ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடருவேன்” : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேனி மக்களவைத் தொகுதியில், தேர்தல் நடைபெறுவதற்கு முன்பும், வாக்குப்பதிவுக்குப் பிறகும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ காட்சிகளும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்குக் கொண்டுசெல்லப்படும் புகைப்படங்களும் வெளியாகின.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின்படி தேனியில் ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தற்போது, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார் ரவீந்திரநாத்தை எதிர்த்துப் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் பேசியதாவது : “தேனி தொகுதியில் பணம் மழையாகப் பொழியவில்லை; சுனாமியாகக் கொட்டியது. ஓ.பி.எஸ் மகன் வெற்றிபெற மோடி உதவியுள்ளார். ஓ.பன்னீர்செல்வமும் அவரது மகனும் வாரணாசிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்ததால் தான் ரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளார்.

தேனி மக்களவைத் தொகுதியில் நிறைய தில்லுமுல்லு நடந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. தேர்தல் ஆணையமும் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டது. வாக்கு எண்ணிக்கையின்போது பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் இல்லை. கேட்டால், அரக்கு கீழே விழுந்துவிட்டதாகக் கூறினர்.

என் தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி; அதிகாரம் மற்றும் பண பலத்தால்தான் நான் தோற்கடிக்கப்பட்டேன். எனக்கு வாக்களித்த தேனி தொகுதி மக்களுக்கும் உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றிகள்.

தேனி தொகுதியின் விவிபாட் வாக்குகளை முழுமையாக எண்ணவேண்டும். ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன்” எனத் தெரிவித்துள்ளார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.

banner

Related Stories

Related Stories