அரசியல்

வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற தேர்தல் அதிகாரி சாஹூவை மாற்றுக! சிபிஐ(எம்) வலியுத்தல்...

வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற தேர்தல் அதிகாரி சாஹூவை மாற்றுக! சிபிஐ(எம்) வலியுத்தல்...
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக தேர்தல் ஆணையம் தினந்தோறும் மாறி மாறி பேசி வருகிறது. எனவே, இந்திய தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் அல்லது தேர்தல் சிறப்பு பார்வையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது: தமிழக தேர்தல் ஆணையம் ஒரு தில்லுமுல்லு ஆணையமாக காட்சியளிக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. அதன் நடவடிக்கைகளும் அவ்வாறே உள்ளன. குறிப்பாக, மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.கவினர் செய்யும் முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தால் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அறைக்கு அதிகாரிகள் சென்ற விவகாரத்தை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றதை தொடர்ந்தே மதுரை ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதிலிருந்தே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியும். முதலில் 10 வாக்குச் சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு என்றார்கள்.

பின்னர் 13 மக்களவைத் தொகுதிகளில் 46 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறினார்கள். இப்போது தேர்தல் ஆணையம் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் தினந்தோறும் மாறி மாறி பேசி வருகிறது. தேனி தொகுதியில் சில வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப் போகிறோம் என்பதற்காக 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வந்துள்ளது. இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு குழப்ப நிலையில் உள்ள தேர்தல் ஆணையத்தால் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையை எப்படி சுமூகமாக நடத்த முடியும்? எனவே, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் அல்லது தேர்தல் சிறப்பு பார்வை யாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

எத்தகைய முறைகேடுகள் நடைபெற்றாலும் 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்திக்கும். மற்றொரு புறத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள 3 அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எடப்பாடியின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக அ.தி.மு.க எத்தகைய நிலைபாட்டையும் எடுக்க தயங்காது என்பதை இது தெளிவாக்குகிறது.

மேலும், அவர் கூறுகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட மின்தடையால் 5 நோயாளிகள் இறந்துள்ளனர். இது அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. இறந்தவர்கள் மின்தடையால் இறக்கவில்லை. அவர்கள் ஏற்கெனவே கவலைக் கிடமான நிலையில் இருந்துதான் இறந்துள்ளார்கள் என மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறுவது பொருத்தமானதாக இல்லை. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories