உணர்வோசை

செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்பது நல்ல குணமா?.. கெட்ட பண்பா?

நீங்கள் மன்னிப்பு வேண்டுகையில் நீங்கள் செய்த தவறுதான் நோக்கப்படும். அந்த தவற்றை பற்றிய உங்களது தற்போதைய நிலை என்ன என்பது உற்று கவனிக்கப்படும்.

செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்பது நல்ல குணமா?.. கெட்ட பண்பா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

மன்னிப்பு வேண்டலை பொறுத்துதான் மன்னித்தல் என்பதும். மாறி வரும் சமூக பொருளாதார சூழலில், விழுமியங்களை, அவை வழங்கப்பட்ட அர்த்தங்களுடன் மீண்டும் விளங்கி கொள்ளுதல் அவசியம் ஆகிறது!

தவறு என்பது ஒரு செயல். செயல் நிகழ்ந்தவுடன் அதற்கான விளைவு அடுத்தவரிடம் உருவாகும். கோபமோ பேசுவதை நிறுத்துவதோ உறவை முடித்துக்கொள்வதோ என அந்த விளைவு இருக்கலாம். பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏற்படுத்தாமலும் போகலாம். அப்படி பாதிப்பு ஏற்படுத்தினால் அதை சமன் செய்வதற்குத்தான் மன்னிப்பு வேண்டல் நிலை.

நீங்கள் மன்னிப்பு வேண்டுகையில் நீங்கள் செய்த தவறுதான் நோக்கப்படும். அந்த தவற்றை பற்றிய உங்களது தற்போதைய நிலை என்ன என்பது உற்று கவனிக்கப்படும். அந்த தவறுக்கான சூழலை அப்படியே பிடித்துக்கொண்டு, மன்னிப்பை மட்டும் வேண்டினால் அது கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதில்லை. இனி அப்படியான தவறு ஏற்படாத சூழலை ஏற்றுக்கொண்ட பின் கேட்கையில் மட்டும்தான் மன்னிப்பு கிடைக்கும்.

செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்பது நல்ல குணமா?.. கெட்ட பண்பா?

இன்றைய சூழலில் மன்னிப்பு கேட்பதை ஒரு குணமாகவே பலர் உணர்வதில்லை. அப்படி கேட்டாலும் அது கடமைக்கே என்றுதான் இருக்கிறது. அதுவும் தவறு செய்தவர்கள் உங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள். ஒன்று, இரண்டு என. அப்போது அவர்களை நீங்கள் மன்னிக்கவில்லை எனில் அவ்வளவுதான். அதற்கு பின் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு அவ்வளவுதான் நீங்கள்.

மன்னிப்பு வேண்டுவர் பக்கத்திலும் தவறு இருக்கலாம். அது ஈகோ என்றே கொண்டாலும், அந்த ஈகோவை சுட்டிக்காட்டும் உரையாடலையே முதல் தவறை செய்தவர்தான் தொடங்க முடியும். ஏனெனில் அவருக்கு அந்த உறவு தேவைப்படுவது உண்மை எனில், burden of proof போல burden of convincing அவரைத்தான் சேரும்.

மற்றொரு வகை உண்டு. மன்னிப்பு கேட்க எத்தனிக்க கூட மாட்டார்கள். மாறாக மன்னிக்க வேண்டியவர்தான் தவறு செய்தார் என பிரச்சாரம் செய்வர். அவர்மீது அபாண்ட குற்றச்சாட்டுகள் சுமத்துவர். அதில் கோபம் கொண்டு, மன்னிக்க வேண்டியவர் கிளம்பி வந்து சண்டை போடுகையில், உட்கார வைத்து, பேசி மிரட்டி, நிலைமையை சரியாக்கலாம் என யோசித்திருப்பர். முதல் தவறிலேயே கோபம் கொண்டு விலகியவர், தொடர் தவறுகளால் ஒரேயடியாகத்தான் விலகுவார்.

செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்பது நல்ல குணமா?.. கெட்ட பண்பா?

இன்றைய அவசரப்போக்கு சமூகத்தில் மன்னிப்பு என்பது ஒரு பண்டம். உணர்வுகளே பண்டங்களாகி போன சமூகம்தானே. அந்த பண்டம் கிடைப்பதற்கு நேரம் ஆனால், அடுத்த கடைக்கு சென்று விடுகிறோம். அங்கு மன்னிப்பு விற்கப்படவில்லை எனில், விற்கப்படும் பண்டத்தை வாங்கிக் கொள்கிறோம். எல்லா கடைகளிலும் விற்கிற பண்டங்களை வாங்கிவிட்டு, வாங்க சென்ற பண்டத்தை வாங்காமலே வீடு திரும்புகிறோம்.

மன்னிப்பு வேண்டல் என்பது ஒரு அகநோக்கு நிலை. Introspective. உங்களையே நீங்கள் ஆராய்ந்து கொள்வீர்கள். நீங்கள் ஏன் தவறு செய்தீர்கள் என யோசிப்பீர்கள். அந்த தவறை நோக்கி உங்களை இட்டு சென்ற வாழ்க்கையை மறுபரிசீலனை செய்வீர்கள். அதுதான் மனிதத்துக்கு தேவை. நுகர்வதற்கு மன்னிப்பு ஒன்றும் பண்டம் அல்ல. அது ஒரு வரம். அந்த வரத்துக்கான தவமே மன்னிப்பு வேண்டல்.

செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்பது நல்ல குணமா?.. கெட்ட பண்பா?

கதை ஒன்று உண்டு. புத்தர் ஒரு கயிற்றை எடுத்து அதில் பல முடிச்சுகள் போடுகிறார். சீடர்களிடம் கொடுத்து முடிச்சுகளை எல்லாம் அவிழ்க்க சொல்கிறார். அனைவரும் முயலுகின்றனர். ஒன்றிரண்டு முடிச்சுகள் மாத்திரம் அவிழ்கின்றன. அனைத்தையும் அவிழ்க்க முடியவில்லை. முடிச்சுகளை அவிழ்க்க அதிகம் முயல முயல புது முடிச்சுகள்தான் விழுகின்றன. சீடர்கள் அனைவரும் சோர்வடைந்து விடுகின்றனர். அவர்களை பார்த்து புத்தர் சொல்கிறார்: "முதல் முடிச்சை தேடி, அது எப்படி விழுந்திருக்கிறது என கண்டறிந்து அவிழ்த்தால் மட்டும்தான், அதன் மேல் போடப்பட்டிருக்கும் மற்ற முடிச்சுகளை அவிழ்க்க முடியும்"

உறவுகளுக்குள் ஏற்படும் முடிச்சை அவிழ்ப்பதற்கான வழிதான் மன்னிப்பு வேண்டல். அதையே சரியாக செய்யவில்லையெனில், முடிச்சுகள் மென்மேலும் விழுந்து கொண்டுதான் இருக்கும். சரி செய்யாமல் வேண்டப்படும் மன்னிப்பு, குடிகாரன் கேட்கும் மன்னிப்புக்கு ஒப்பானது. மன்னிப்பவன் மாமனிதனாக இருக்கலாம். ஆனால் மன்னிப்பு கேட்பவன் முதலில் மனிதனாக இருக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories