உணர்வோசை

தாமதமானால் நாம் யார் மீது கோபப்படுவது.. Ola, Zomato நிறுவனங்களும் நமக்கான உளவியல் புரிதலும்!

இப்பூவுலகில் ஒரு சகமனிதனுக்கான இடத்தை, ஒரு இணையச் செயலியில் நாம் இடும் வரையறுக்கப்பட்ட நட்சத்திர பிம்பங்கள் தீர்மானிக்கிறது என்கிற உண்மை வெளிப்படுத்தும் கொடூரத்தை எப்படி எதிர்கொள்வது?

தாமதமானால் நாம் யார் மீது கோபப்படுவது..  Ola, Zomato நிறுவனங்களும் நமக்கான உளவியல் புரிதலும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Ola, Zomato போன்ற இணையச் செயலிகள் அச்சேவை புரியும் நபர்களுக்கும் நமக்கும் என்ன வகையான உறவையும் உளவியல் புரிதலையும் உருவாக்குகிறது என யோசித்திருக்கிறீர்களா?

APP (மொபைல் செயலி) Life அல்லது இணைய வழிச் சேவைகள் புதுவகையான உளவியலை உருவாக்கும் ஆபத்தையும் அடைந்திருக்கின்றன.

எனக்கு தேவையான உணவை நான் ஆர்டர் செய்கிறேன். மொபைல் செயலியில் அரை மணி நேரம் காட்டுகிறது. நான் ஆவலுடன் உணவுக்காகக் காத்திருக்கிறேன். விருப்பத்துடன் ஆர்டர் செய்த உணவின் ருசி, நேரமாக நேரமாக பசியை அதிகரிக்கிறது. பத்து நிமிடம் கழிந்து மீண்டும் செயலியை எடுத்துப் பார்க்கிறேன். மறுபடி அரை மணி நேரம்தான் காட்டுகிறது. மொபைல் செயலியைப் பார்க்கிறேன்.

தாமதமானால் நாம் யார் மீது கோபப்படுவது..  Ola, Zomato நிறுவனங்களும் நமக்கான உளவியல் புரிதலும்!

உணவக உரிமையாளரின் புகைப்படமும் இல்லை. இணையச் செயலிக்கான அலுவலரின் படமும் இல்லை. உணவைக் கொண்டு வந்து சேர்ப்பிக்கும் ஊழியரின் படம் மட்டும்தான் பொம்மையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு இருசக்கர வாகனத்தில் செயலியின் வரைபடத்தில் அவர் பொம்மையாக நகருகிறார்.

செயலியில் இரு சக்கர வாகனம் மெதுவாக நகர நகர எனக்குக் கோபம் வருகிறது. யார் மீதான கோபமாக அது இருக்கும்? அந்த ஊழியரின் மீதான கோபமாகவே இருக்கும்.

அதிகபட்சமாக நான் அந்த ஊழியரையும் உணவகம் நடத்துபவரையும்தான் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியும். இணைய வழிச் சேவையை இணைய வழி உரையாடலில் மட்டும்தான் தொடர்பு கொள்ள முடியும்.

தாமதமானால் நாம் யார் மீது கோபப்படுவது..  Ola, Zomato நிறுவனங்களும் நமக்கான உளவியல் புரிதலும்!

உணவகம் மூடப்பட்டு விட்டத் தகவலையோ ஊழியரின் இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனத் தகவலையோ செயலி செயல்படாத தகவலையோ கூட நான் ஊழியரை தொடர்பு கொண்டுதான் பெற முடியும். எனவே உணவு தாமதமாகும் என் கோபத்துக்கு இயல்பாகவே அந்த ஊழியர்தான் இலக்காவார்.

சொமேட்டா, ஓலா போன்ற இணையவழி நிறுவனங்களை நாம் சட்டையைப் பிடித்துக் கூட கேட்க முடியாது. மொத்தக் கோபமும் உணவு கொண்டு வருபவர் மீதும் வாகனம் ஓட்டுபவர் மீதும்தான் கொட்டுவோம். சேவையை அளிப்பவர் சரியான நேரத்தில் வர வேண்டும் என மனிதர்களை ரோபாட்களாக பாவிக்கும் மனோபாவம் வெற்றிகரமாக நமக்குள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு சகமனிதனை சேவகனாக அல்லது வேலைக்காரனாக பாவிக்கும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

பணம் கொடுக்கும் எனக்கு சேவை சரியாக சேர வேண்டும் என்கிற முதலாளியின் மனநிலை மூளைக்குள் புகுத்தப்பட்டிருக்கிறது.

தாமதமானால் நாம் யார் மீது கோபப்படுவது..  Ola, Zomato நிறுவனங்களும் நமக்கான உளவியல் புரிதலும்!

எனவே நான் என்னளவில் வேலையில்லாமல் இருந்தாலும் உணவு ஆர்டர் செய்கையில் முதலாளியாகி விடுகிறேன். ஒரு மனிதனை உயிராகக் கருதாமல் உழைக்கும் கருவியாக மட்டுமே கருதி ஒடுக்கிச் சுரண்டும் ஒரு முதலாளியின் மனநிலையை அடைகிறேன். ஒரு முதலாளி தொழிலாளர் மீது கட்டவிழ்க்கும் தன்னுடைய ஒடுக்குமுறையை படிநிலைப்படுத்தி ஒரு சாமானியனுக்கும் இன்றையச் சூழலில் வழங்கியிருக்கிறான்.

கண்ணுக்குத் தெரியும் சக மனிதனை சேவையாக மட்டுமே பார்க்கும் நம் முதலாளித்துவச் சிந்தைகளின் வழியாக கண்ணுக்குத் தெரியாத ஏதோவொரு முதலாளி கொழுத்துக் கொண்டிருக்கிறான்.

உணவு கொண்டு வரும் ஊழியர் வழி தெரியாமல் வேறு பாதைகளில் சுற்றிக் கொண்டிருப்பார். அல்லது பல முறை தொடர்பு கொண்டு வழி கேட்டுக் கொண்டிருப்பார். அல்லது தாமதமாக வருவார். கோபத்துடன் கதவை திறக்கும்போதெல்லாம் அங்கு ஒரு நாற்பது வயதுக்காரரோ ஊரிலிருந்து பிழைக்க வந்த ஓர் இளைஞரோ நொண்டி நொண்டி படியேறி வந்திருக்கும் ஒரு மாற்றுத்திறனாளியோ ஒரு முதியவரோ ஓர் இஸ்லாமியரோ நிற்கையில் தொண்டை அடைத்துக் கொள்ளும்.

அங்கு நிற்பது செல்பேசியில் நாம் அழுத்தும் பொத்தான் அல்ல, உயிரும் உணர்வும் கொண்ட ஒரு மனிதன் என்கிற உண்மை சடாரென நமக்கு உறைக்கும்.

தாமதமானால் நாம் யார் மீது கோபப்படுவது..  Ola, Zomato நிறுவனங்களும் நமக்கான உளவியல் புரிதலும்!

வியர்க்க விறுவிறுக்க மூச்சு வாங்கி தாமதமாக வந்த அச்சத்துடன், யாரென்றே தெரியாத என்னிடம் திட்டு வாங்கி விடக் கூடாது என்ற பதற்றத்தில் ஒரு செயற்கையான புன்னகையுடன் உணவைக் கொடுத்துவிட்டு, ‘சார்… ஃபைவ் ஸ்டார் போட்டுடுங்க சார்’ என அந்த மனிதன் சொல்லும்போது மனிதத்துக்கு தேவையான அடிப்படையான ஏதோ ஒன்று நொறுங்கி வீழும்.

இப்பூவுலகில் ஒரு சகமனிதனுக்கான இடத்தை, ஒரு இணையச் செயலியில் நாம் இடும் வரையறுக்கப்பட்ட நட்சத்திர பிம்பங்கள் தீர்மானிக்கிறது என்கிற உண்மை வெளிப்படுத்தும் கொடூரத்தை எப்படி எதிர்கொள்வது?

banner

Related Stories

Related Stories