உணர்வோசை

உச்ச அதிகாரம் பெற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்பதற்கு வழியே இல்லையா? - RTR என்பது என்ன?

ஜனாதிபதிகளும் குற்றம் செய்தால் விலக்கப்படும் வாய்ப்பு இருப்பதை சட்டம் உறுதிப்படுத்துகிறது.

உச்ச அதிகாரம் பெற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்பதற்கு வழியே இல்லையா? - RTR என்பது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

அமெரிக்க நாட்டை ஆளுபவர்கள் பயப்படும் ஒரு வார்த்தை இருக்கிறது. அந்த வார்த்தை, Impeachment. குற்றவிசாரணை என புரிந்து கொள்ளலாம். நாட்டின் உச்ச அதிகாரத்தில் இருப்பவரின் நடவடிக்கைகளில் முறைகேடு இருந்தாலும் முறைகேடு இருப்பதாக சந்தேகம் எழுந்தாலும் அவரை குற்றவிசாரணைக்கு அழைக்க முடியும். பொதுவாக அரசுப் பதவிகளில் இருக்கும் எவரையும் இத்தகைய குற்றவிசாரணைகள் செய்ய முடியுமென்றாலும் அமெரிக்க அதிபருக்கு விசாரணை வரும் போதுதான் இம்முறைக்கு சிறப்பு கவனம் கிடைக்கிறது.

அமெரிக்க அதிபரின் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டால் பாராளுமன்ற அவை குற்றவிசாரணை மேற்கொள்ளும். ஆனாலும் நேரடியாக குற்றவிசாரணைக்கு வந்துவிட முடியாது. பல கட்டங்கள் இருக்கின்றன.

எதிர்க்கட்சியில் இருந்து முதலில் அதிபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படும். குற்றச்சாட்டின் தன்மைக்கு ஏற்ப விசாரணை பற்றிய முடிவு எட்டப்படும். பின் மக்களவை விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கும். இந்த விசாரணைகளும் ரகசியமாக அல்லாமல் அனைவரும் கலந்து கொள்ளும் விதத்திலேயே நடத்தப்படும். குற்றச்சாட்டின் ஒவ்வொரு பகுதியும் சொல்லப்பட்டு, அவை உறுப்பினர்கள் அதை விவாதிப்பார்கள். விவாதம் முடிந்த பிறகு ஓட்டெடுப்பு நடத்தப்படும். ஒவ்வொரு பகுதியும் பிறகு அவை உறுப்பினர் ஒப்புதலுக்கு விடப்படும். வாக்கெடுப்பு நடத்தப்படும். பெரும்பான்மை வெற்றி பெறும் ஒவ்வொரு பகுதியும் அதிபரின் விசாரணைக்கான ஒப்புதலாக கொள்ளப்படும். பிறகு மக்களவை நேரடியாக அமர்ந்து அதிபரை விசாரிக்கத் தொடங்கும். முறையான நீதிமன்ற விசாரணை போல் மொத்த முறையும் இருக்கும். விசாரணை முடிந்த பிறகு, ஜனாதிபதியை பதவியிலிருந்து விலக்குவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

ஒருவேளை பெரும்பான்மை வாக்குகள் ஜனாதிபதிக்கு எதிராக இருந்தால், அவரின் பதவி பறிபோகும்.

இது எந்தளவுக்கு சாத்தியம்?

நியாயமான கேள்விதான். அமெரிக்காவில் பிற பல நாடுகளிலும் ஜனாதிபதியை குற்றவிசாரணை செய்து பதவியிலிருந்து அகற்றும் முறை சட்டரீதியாகவே இருக்கிறது. அரசியல் சட்டமே அதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த முறையின் கீழ் ஜனாதிபதிகளும் குற்றம் செய்தால் விலக்கப்படும் வாய்ப்பு அமெரிக்காவில் இருப்பதை சட்டம் உறுதிப்படுத்துகிறது. அத்தகைய நிர்பந்தத்தை தேவைப்படுகையில் பயன்படுத்த மக்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

உச்ச அதிகாரம் பெற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்பதற்கு வழியே இல்லையா? - RTR என்பது என்ன?

இந்தியாவில் இப்படி ஒரு சாத்தியம் இருக்கிறதா?

இருக்கிறது. எப்படி தெரியுமா?

இந்த நாட்டிலும் ஜனாதிபதியை குற்றவிசாரணைக்கும் உட்படுத்த முடியும். Impeachment முறை இங்கும் இருக்கிறது. ஆனால் ஜனாதிபதிக்குதான் இருக்கிறது. இந்திய நாட்டில் அதிகாரங்களை குவித்து வைத்துக் கொண்டு மத்தியில் ஆளுவது பிரதமர்தான் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் பிரதமரின் பதவிக்கு இத்தகைய முறை பயன்படாது. பிரதமர் பதவியைப் பொறுத்தவரை வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் பிரச்சினைகளை முன் வைக்கும். பேசுவதற்கு நேரம் கேட்கும். பிரதமர் மீதான குற்றச்சாட்டை வாசிக்கும். ஆனால் அந்த குற்றச்சாட்டு மீதான விசாரணை கூட அல்ல, எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு கூட அவகாசம் கிடைக்காது. ஏனெனில் எதிர்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை பேச அனுமதி பெற வேண்டும். ஆளுங்கட்சியின் ஆதரவில் பதவியேறும் சபாநாயகர் நிச்சயமாக ஆளுங்கட்சிக்கு எதிரான விவாதத்துக்கு அனுமதி தர மாட்டார். ஒருவேளை தரப்பட்டாலும் குற்றச்சாட்டின் மீதான விவாதத்தை அவையின் ஒப்புதலுக்கு விடுவார். வாக்கெடுப்பு நடத்தப்படும். அவையின் பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்றிருக்கும் ஆளுங்கட்சி அதன் தலைமை அமைச்சரான பிரதமர் மீதான குற்றச்சாட்டு பற்றிய விவாதத்தை அனுமதித்து ஓட்டு போடுமா?

நிச்சயம் போடாது.

ஆகவே ஒரு சாதாரண விவாதம் கூட நிகழ்த்தப்படாது. அந்த தைரியத்தில்தான் எத்தனை குற்றச்சாட்டுகள் வந்தாலும் மத்திய அதிகாரத்தில் இருப்பவர்கள் அஞ்சுவதில்லை.

இதைத் தவிர உச்ச அதிகாரம் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்பதற்கு வேறு வழி இல்லையா?

இருக்கிறது. ஆங்கிலத்தில் Right to recall என சொல்லப்படுகிறது. திரும்பி அழைப்பதற்கான உரிமை என மொழிபெயர்க்கலாம்.

இந்திய நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் ஒவ்வொருக்கும் ஐந்து வருடங்கள் பணிக்காலம். ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்டவரின் செயல்பாட்டில் மக்களுக்கு அதிருப்தி இருந்தால், அவரை தற்போதைய தேர்தல் முறையில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஐந்து வருட காலம் முடிவதற்கு முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தால் எப்படி இருக்கும்? அந்த உரிமையைதான் Right to recall என்கிறார்கள்.

இந்தியாவில்தான் இந்த உரிமை இல்லையே தவிர அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இத்தகைய உரிமை மக்களுக்கு இருக்கிறது. எந்தவொரு தொகுதியிலும் மீண்டும் ஒரு தேர்தல் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் பதவியில் தொடரலாமா, தொடரக்கூடாதா என மக்களை கேட்டு தேர்தல்கள் நடத்த முடியும். உள்ளாட்சி மட்டங்களில் இந்தியாவின் சில பகுதிகளில் இந்த திரும்பப் பெறும் உரிமை இருக்கிறது.

இப்போது நமக்கு இருப்பது மறைமுக ஜனநாயகம்தான், நாம் தேர்ந்தெடுக்கும் நபர்கள், பிரதமரும் அரசும் முன்னெடுக்கும் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நாம் தேர்ந்தெடுப்பவர்கள்தான் நமக்கான பிரதிநிதி. நாம் வாழும் பகுதியை நாசமாக்கும் ஒரு திட்டம் வருகையில், அதை நமக்கான பிரதிநிதி நம் மனநிலையை பிரதிபலித்து எதிர்க்க வேண்டும். ஆனால் ஐந்து வருடத்துக்கு நம்மை வந்து சந்திக்க வேண்டிய சூழலே இல்லையென்பதால், நம் பிரதிநிதி ஆளும் அதிகாரத்துக்கு ஒத்துழைக்கும் வாய்ப்பே அதிகம். ஒருவேளை எதிர்த்தாலும் பெரும்பான்மை உறுப்பினரின் ஆதரவில் திட்டம் நிறைவேற்றப்படும் வாய்ப்பு இருக்கிறது.

இத்தகைய ‘மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் அதிகாரம்’ கொண்டு வரப்பட வேண்டுமென பல காலமாக கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் இதுவரை பொருட்படுத்தப்படவே இல்லை.

banner

Related Stories

Related Stories