
முரசொலி தலையங்கம்
19.01.2026
மண்டியிட்ட தர்மேந்திரனின் ஆணவம்!
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்னைக்கு வந்து வாய்க்கு வந்ததைப் பேசி இருக்கிறார். பா.ஜ.க. இப்போதும் திருந்தவில்லை, எப்போதும் திருந்தாது என்பதை எடுத்துரைத்துவிட்டுப் போயிருக்கிறார் தர்மேந்திர பிரதான்.
தமிழ் மொழி பாரம்பரியமும், தொன்மையும் மிக்க மொழி என்றும், பிரதமர் மோடி தமிழை உலக அரங்கில் எடுத்துச் சென்று வருகிறார் என்றும், உலக அரங்குகளில் திருக்குறளின் பெருமைகளை கொண்டு செல்கிறார் என்றும் சொல்லிக் கொள்கிறார் தர்மேந்திர பிரதான். மோடிக்கு பொய்த் தோரணம் கட்டி இருக்கிறார் பிரதான். பிரதமரானவர், அவரை அமைச்சர் ஆக்கியதற்கு இப்படிச் சொல்லத்தான் வேண்டும்.
”தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி வழிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மும்மொழிக்கொள்கை மூலம் மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள முடியும். பல மொழிகளை கற்கும்போது அவர்களுக்கு அது பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும்” என்று நல்லபிள்ளையைப் போலப் பேசி இருக்கிறார் தர்மேந்திரப் பிரதான்.
ஆங்கிலத்தை அகற்றுவதற்கான தந்திரமாகவே தாய்மொழியைச் சொல்கிறார்கள். ஆங்கிலத்தை அகற்றியதும் அந்த இடத்தில் இந்தியைக் கொண்டு வந்து உட்கார வைப்பதுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டம் ஆகும். 'சமஸ்கிருதம்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும், அதுவரை இந்தி இருக்கலாம்' என்று சொல்வதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மொழிக் கொள்கை ஆகும். தேசிய இனங்களின் அனைத்து மொழிகளையும் அழிக்கும் கொள்கைதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மொழிக் கொள்கை ஆகும். அதனை மறைக்க அவர்கள் போர்த்திக் கொள்ளும் போர்வைதான் தாய்மொழிக் கல்வி என்பது ஆகும். இதனைத் தனது உரையில் மறைக்கிறார், மழுப்புகிறார் பிரதான்.
கல்வியைப் பற்றி போதிக்கும் பெரிய தர்மவான் போல பேசும் இவர், தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தந்தாரா என்றால் இல்லை.
சென்னையில் இவர் பேசிக் கொண்டு இருந்த போது, அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.3,500 கோடி நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரிய வழக்கில் 4 வாரத்தில் ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் இறுதி வாய்ப்பு வழங்கி உத்தரவு போட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு வழங்க ரூ.3500 கோடி சமர சிக்ஷா திட்ட நிதியை உடனடியாக வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அதுல் சந்திருகர் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது 8 வாரத்தில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைச் சுட்டிக்காட்டினார். ஆனால் ஒன்றிய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.
”தமிழ்நாட்டு மக்களின் பெருமளவு வரியைப் பெறும் ஒன்றிய அரசு தமிழக மாணவர்களின் கல்வி நிதியை வழங்க மறுக்கிறது. இதுவரை 3500 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதனால் 45 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசுக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய நிதியை வழங்க உத்தரவிட வேண்டும்” என்று வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். அப்போது ஒன்றிய அரசு வழக்கறிஞர், ஒன்றிய அரசு பதிலளிக்க மேலும் 8 வாரம் அவகாசம் கோரினார். அதனைத் திட்டவட்டமாக நிராகரித்த நீதிபதிகள், இறுதி வாய்ப்பாக 4 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். “இதற்கு மேல் இந்த வழக்கில் அவகாசம் கேட்கக் கூடாது” என்று ஒன்றிய அரசுக்கு திட்டவட்டமாகத் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர். இதைப் பற்றி எல்லாம் தர்மேந்திர பிரதான் ஏதாவது வாயைத் திறந்துள்ளாரா என்றால் இல்லை. அதைப் பற்றிப் பேசவில்லை அவர்.
”தமிழக அரசு தனது அரசியல் நிலைப்பாட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்கக் கூடாது. தமிழகத்தில் அரசு மும்மொழிக் கொள்கையை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது. மும்மொழி கற்பதில் என்ன பிரச்சினை? மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் சமக்ர சிக்ஷா கல்வி நிதியைத் தர முடியும். மாணவர்களுடைய நலனை விட உங்களின் அரசியலுக்கு முக்கியத்துவம் தராதீர்கள்” என்று சொல்லி அரசியல் செய்து கொண்டு இருப்பவர் அவர்தான்.
தனது கட்சியின் அரசியல் கொள்கையை, தனது அரசாங்கத்தின் ஒரு திட்டத்துக்கான நிபந்தனையாக வைப்பது எதேச்சதிகாரம் அல்லவா? மும்மொழிக் கொள்கை என்பதே இந்தியைத் திணிக்கும் கொள்கைதான். மும்மொழித் திட்டத்தை ஏற்றுக் கொண்டால்தான் சமக்ர சிக்ஷா கல்வி நிதியைத் தர முடியும் என்று சொல்வது ஆணவத்தின் உச்சம் அல்லவா?
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அராஜகவாதிகள் என்றும் ஜனநாயகப் பண்பு இல்லாதவர்கள் என்றும் நாடாளுமன்றத்தில் கொக்கரித்தவர்தான் இந்த தர்மேந்திர பிரதான். யாரோ ஒரு சூப்பர் சி.எம். பேச்சைக் கேட்டுக் கொண்டு பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடவில்லை என்று பொறுப்பற்றுப் பேசியவர்தான் அவர். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்குரல் கொடுத்த பிறகுதான் மன்னிப்புக் கேட்டு மண்டியிட்டார். அப்போது மண்டியிட்டதும் நடிப்புதான் என்பதை அவரது சென்னை ஆணவ உரை சொல்கிறது.






