உணர்வோசை

“தமிழ்நாடு நாள் ஜூலை 18 - வரலாற்றுத் தத்துவம் வலியுறுத்தும் உண்மை” : பேராசிரியர் ராஜன் குறை கட்டுரை!

‘திராவிட தமிழர்’ என்ற வரலாற்று தன்னுணர்வே தமிழக மக்களாட்சி அரசியலின் அடிநாதம்.

“தமிழ்நாடு நாள் ஜூலை 18 - வரலாற்றுத் தத்துவம் வலியுறுத்தும் உண்மை” : பேராசிரியர் ராஜன் குறை கட்டுரை!
Kannan Satya
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஒரு மக்கள் தொகுதி தங்கள் உரிமைகள் குறித்த தன்னுணர்வினை வெளிப்படுத்துவதே அதன் வரலாற்று உணர்வாகும். மக்கள் தங்களை ஒரு தொகுதியாக உணர்வது என்பதே மக்கள் என்று கூட்டு அடையாளத்திற்கு, குழும அடையாளத்திற்கு அடிப்படை. ‘திராவிட தமிழர்’ என்ற வரலாற்று தன்னுணர்வே தமிழக மக்களாட்சி அரசியலின் அடிநாதம். அதுவே திராவிட அரசியல் சித்தாந்தம். அந்த தன்னுணர்வு கொண்ட மக்கள் தங்கள் சட்டமன்றத்தில் அரசை தமிழ்நாடு அரசு என்றும், அதன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியை தமிழ்நாடு என்றும் பெயரிட்டுக்கொண்ட நாள் 1967 ஜூலை 18. அதுவே திராவிட தமிழரின் வரலாற்று தன்னுணர்வு சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவேற்றம் பெற்ற நாளாகும்.

திராவிட அரசியல் சித்தாந்தத்தைக் குறிக்க ஆங்கிலத்தில் Dravidianism என்ற சொல்லை ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். நானும், அசோகா பல்கலைக்கழகத்தில் போதித்து வரும் ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன் அவர்களும் தொகுத்த Seminar என்ற ஆங்கில சஞ்சிகையின் ஆகஸ்ட் 2018 இதழுக்கு Dravidianism என்றே பெயரிட்டோம். திராவிடம் என்ற சொல் திராவிட பண்பாட்டு அடையாளம், தமிழுணர்வு ஆகிய இரண்டும் இணைந்தது. அதனால் தமிழகத்தில் உருவான தன்னுணர்வு கொண்ட மக்கள் தொகுதியை திராவிட தமிழர் என்று அறிவதே பொருத்தமானது. திராவிட பண்பாட்டு அடையாளத்தின் முக்கியத்துவம் என்பது அது ஆரிய பண்பாடான பார்ப்பனீய ஜாதீய பண்பாட்டை மறுதலிப்பதுதான். ஜாதி படிநிலை எதிர்ப்பின், சமூக நீதி அரசியலின் முக்கியத்துவமே திராவிட தமிழ் அடையாளத்தின் உயிர் மூச்சு என்பதால் திராவிடவியம் என்பதே சுருக்கமாக நமது அரசியல் சித்தாந்தம் எனக் கொள்ளலாம். பண்பாடு, மொழி, நிலப்பகுதி ஆகிய மூன்றில் ஆரிய பண்பாட்டை மறுதலிக்கும் திராவிட பண்பாட்டு அடையாளமே முதன்மையாக விளங்குகிறது. அது தமிழ்நாட்டில் தமிழுணர்வைத் தனக்கு ஆதாரமாகக் கொள்கிறது. ஆனால் பார்ப்பனீய, ஜாதீய எதிர்ப்பின் சொல்லான திராவிடம் என்ற சொல்லை தமிழுடன் எப்போதும் இணைத்துக்கொள்கிறது. இதை விரிவாகப் புரிந்துகொள்வது அவசியம்.

இந்திய தேசியமும், திராவிட நாடு கோரிக்கையும்

பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய கீழைத்தேய ஆய்வாளர்கள் சமஸ்கிருத மொழியை இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் தொன்மை மொழியாகக் கண்டார்கள். அதை ஆரியப் பண்பாட்டின் அடிப்படை என்றார்கள். இந்திய நிலப்பகுதியின் பண்பாட்டை வடிவமைத்தது அதுதான்; ஆரியர்களின் வருகைக்கு முன்பு இங்கு பண்படாத ஆதிவாசிகளே இருந்தார்கள் என்று நினைத்தார்கள். அதனால் சமஸ்கிருத மொழியின் தர்ம சாஸ்திரங்களே இந்துக்களின் சட்டத்திட்டங்கள் என்று முடிவு செய்து காலனீய கால நீதிமன்றங்களில் அவற்றின் அடிப்படையிலே இந்துக்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தீர்ப்புகளை எழுதினார்கள். உடன்கட்டை ஏறுதல் போன்ற பழக்கங்களுக்கு எதிராக சீர்திருத்தவாதிகள் தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையிலேயே வாதிட்டார்கள். அதாவது அந்த வழக்கத்துக்கு தர்ம சாஸ்திரங்களில் ஆதாரம் இல்லை என்று கூறினார்கள். இப்படியாக சமஸ்கிருத தர்ம சாஸ்திரங்கள், வர்ண ஜாதி அமைப்பு ஆகியவை காலனீய காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு வலுவடைந்தது எனலாம். பெரும்பாலும் பார்ப்பனர்களே சட்டம் பயின்றதால் தர்ம சாஸ்திர அளவுகோல்கள் சட்டங்களாகவே மாறின.

இந்த வரலாற்றுப் போக்குக்கு இடையில்தான் திராவிட மொழிக்குடும்பத்தின் தொன்மை பத்தொன்பதாம் நூற்றாண்டில் எல்லிஸ், கால்டுவெல் போன்ற ஆங்கிலேயே ஆய்வாளர்களால் நிறுவப்பட்டது. திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியாக தமிழ் திராவிடச் சான்றின் அடிப்படையாக விளங்கியது. திராவிடர்கள் என்பவர்கள் ஆரியர்கள் வருகைக்கு முன் இந்தியாவில் வசித்தவர்கள், தங்களுக்கென தொன்மையான பண்பாட்டைக் கொண்டவர்கள் என்பது புதிய கோட்பாடாக உருவாகியது. இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழாய்வுகள் தொன்மையான நகர நாகரிகத்தின் சான்றுகளை வெளிப்படுத்தியபோது அது கால்நடை மேய்ப்பினை வாழ்க்கை முறையாகக் கொண்டிருந்த ஆரியர்களின் வருகைக்கு முந்தியது என்பதும், அது திராவிட பண்பாடாக இருக்கலாம் என்றும் தொல்பொருள் ஆய்வாளர் ஜான் மார்ஷலின் முடிவுகள் கூறின. அன்றிலிருந்தே பல இந்தியத் தொல்லியல் ஆய்வாளர்கள் இந்தக் கருத்துக்கு அனுசரணையாக எழுதி வருகிறார்கள்.

இதன் மூலம் ஆரிய, பார்ப்பனீய, ஜாதீய பண்பாட்டுக்கு மறுதலையான பண்பாடாக திராவிட பண்பாட்டைக் கருதலாம் என்பதும், தமிழ் சங்க இலக்கியங்களில் காட்டப்படும் வாழ்க்கை முறையில் ஆரிய பண்பாட்டின் தடங்கள் இல்லை என்பதும் பரவலாக ஏற்கப்பட்டது. மனோன்மணீயம் சுந்தரனார் உள்ளிட்ட சைவ அறிஞர்கள் இதை வலியுறுத்தி தமிழ் சைவம் சமஸ்கிருத இந்து மதத்திலிருந்து வேறுபட்டது என்றார்கள். ஜாதிப் படிநிலை எதிர்ப்பை தன் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையாகக் கொண்ட பெரியார், ஜாதி அமைப்பை முற்றிலும் தகர்க்க இறை மறுப்பை அவசியம் எனக்கொண்டார். அதுவே பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும் வலிமை தரும் என்று கருதினார். இதனால் சைவ சித்தாந்தத்துக்கும், திராவிட சித்தாந்தத்துக்கும் இணக்கமும் இருந்தது, முரண்களும் இருந்தன.

“தமிழ்நாடு நாள் ஜூலை 18 - வரலாற்றுத் தத்துவம் வலியுறுத்தும் உண்மை” : பேராசிரியர் ராஜன் குறை கட்டுரை!

இந்திய தேசிய விடுதலையை முன்னெடுத்த காங்கிரஸ் இயக்கம் மொத்த இந்தியர்களையும் ஒரே மக்கள் தொகுதியாக வரையறுக்க விரும்பியது, இதன் விளைவாக இந்துஸ்தானி மொழியிலிருந்து உருது நீக்கம் செய்யப்பட்டு பார்ப்பனீய சக்திகளால் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தி மொழியை தேசிய மொழியாக முன்னெடுக்க விரும்பியது. இரட்டையாட்சி முறையில் மெட்ராஸ் பிரெசிடென்ஸியில் பதவியேற்ற ராஜாஜி தலைமையிலான அரசு இந்தி மொழியை தமிழகப் பள்ளிகளில் கட்டாய பாடமாக்கியபோது சைவ அறிஞர்கள், நீதிக்கட்சியினர், சுயமரியாதை இயக்கத்தவர் அனைவரும் ஒன்று திரண்டு இந்தி திணிப்பை எதிர்த்து போராடினர்.

இந்தி மொழி திணிப்பு என்பது வடவர் ஆதிக்கத்தையும், பார்ப்பனீய மேலாண்மையையும் திணிப்பதுதான் என்பதும் தெளிவாகியது. இந்த நிலையில் தமிழ்நாடு தமிழருக்கே என்றும், திராவிட நாடு திராவிடருக்கே என்றும் இரண்டு முழக்கங்கள் எழுந்தாலும், அறிஞர் அண்ணா திராவிட நாடு என்ற பெயரில் பத்திரிகை கண்டதுடன், திராவிட நாடு கோரிக்கையையே வலியுறுத்தினார். இதன் அடிப்படை காரணம் ஆரிய பண்பாட்டு மறுப்பு, எதிர்ப்பு என்பதை தன்னுடைய ஆரிய மாயை என்ற மிக முக்கியமான கொள்கை விளக்க நூலில் எழுதினார். சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற நாடகத்திலும் சாமானிய மக்களுக்கும் புரியும் வண்ணம் தெளிவாக்கினார்.

ஆரிய மாயை நூலில் தென்னிந்திய நிலப்பகுதி வெகுகாலமாகவே வட இந்திய சாம்ராஜ்யங்களுக்கு வெளியே இருந்ததையும், தனியான புவியியல் கூறுகளும், வரலாறும் கொண்டிருந்ததையும் விளக்கும் அண்ணா, நான்கு திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் தொகுதிகளின் கூட்டாட்சி குடியரசாகவே திராவிட நாடு என்ற கோரிக்கையை வடிவமைத்தார். பெரியாரின் ஏடான குடியரசையும், அண்ணாவின் ஏடான திராவிட நாடு என்பதையும் இணைத்துப் பார்த்தால் இதைப் புரிந்துகொள்ளலாம்.

இந்திய தேசிய அரசா, கூட்டாட்சி குடியரசா?

காலனீய ஆட்சி முடிவுக்கு வந்து இந்தியா சுதந்திரம் பெறும் நேரத்தில் திராவிட நாடு கோரிக்கையை வென்றெடுக்க இயலவில்லை என்றாலும், முஸ்லிம்கள் மத ரீதியான தனி நாட்டை வலியுறுத்தி பாகிஸ்தானை உருவாக்கிக்கொண்டார்கள். ஆனால், இந்தியாவிலிருந்த எல்லா முஸ்லிம்களும் பாகிஸ்தான் செல்வது சாத்தியமற்றது என்பதால் இந்தியா மதச்சார்பற்ற குடியரசாகவே இருக்க முடிவு செய்தது. காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்கள் மத நல்லிணக்கம், மதச்சார்பற்ற அரசு ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதில் வெற்றி கண்டார்கள். இது ஒரு புறமிருக்க, அரசியல் நிர்ணய சட்டம் உருவாகும்போது தனித்துவமிக்க பண்பாட்டு வரலாறு கொண்ட இந்தியப் பிரதேசங்களை எப்படி ஒன்றுபடுத்துவது என்ற கேள்வி எழத்தான் செய்தது. எனவே இந்திய தேசம் ஒன்று என்றாலும், அது பல்வேறு மாநில அரசுகளின் கூட்டாட்சி குடியரசாகவே இருக்க முடியும் என்று முடிவானது.

அதனால்தான் ஆங்கிலத்தில் இந்தியா ஒரு நேஷன், ஒரு குடியரசு எனப்பட்டாலும், ஸ்டேட் என்பது மாநிலங்களையே குறிக்கிறது. இந்திய அரசு என்பது மாநில அரசுகளின் (States) ஒன்றிய அரசாங்கமே (Union Government). இப்படி சட்டப்படி இந்தியா கூட்டாட்சி குடியரசாக இருந்தாலும் அதிகாரங்கள் கணிசமாக ஒன்றிய அரசாங்கத்திடமே குவிக்கப்பட்டன. அதனால் அந்தந்த மாநில மொழிகளிலேயே மக்களாட்சி என்பது வேர் விட்டாலும், அரசதிகாரம் என்பது ஒன்றிய அரசிடம் குவியும் முரண்பாடு உருவானது. இன்றைய இந்திய அரசியலின் முக்கிய முரண்பாடாக ஒன்றிய அரசாங்கம் – மாநில அரசு அதிகாரப் பகிர்வு விளங்கி வருகிறது.

அண்ணாவைப் பொறுத்தவரை திராவிட நாடு என்பதும் கூட்டாட்சி குடியரசுதான், இந்தியா என்பதும் கூட்டாட்சி குடியரசுதான் என்பதால் முக்கியமான அரசியல் கேள்வி மாநிலத்தின் சுயாட்சி உரிமைகள் என்ன என்பதாகவே இருந்தது. அவர் பலமுறை அமெரிக்க அரசியல்வாதி வெண்டல் வில்கி முன்வைத்த உலகளாவிய கூட்டாட்சி குடியரசைக் குறிப்பிடுகிறார். தமிழ்நாடு ஆசிய அளவிலான கூட்டாட்சியிலோ, உலக அளவிலான கூட்டாட்சியிலோ கூட இணையலாம்; ஆனால் சுயாட்சி உரிமைகள் கணிசமானவையாக வரையறுக்கப்பட வேண்டும் என்பதையே கூறுகிறார். அதனால்தான் திராவிட நாடு என்ற தனித்த கூட்டாட்சி குடியரசுக்கான கோரிக்கையை கைவிட்டாலும், மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கத்தை திராவிட முன்னேற்றக் கழகம் உயிர்மூச்சாக கொண்டுள்ளது. அதற்கு செயல்வடிவம் கொடுக்க அரும்பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர் கலைஞர். எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவின் இந்திய தேசிய ஆதரவு எதிர்ப்புரட்சி அரசியலால் அந்த முயற்சிகள் தேக்கமடைந்தாலும், இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் உயிர் பெற்றெழுந்து தீவிரமடைந்துள்ளன.

இறையாண்மையும், சுயாட்சியும்

இறையாண்மை என்பது பழைய மன்னர் காலத்து அரசியல் கோட்பாடாகும். அடிப்படையில் இது அதிகாரக் குவிப்பின் வடிவம். இறைமை என்பதும், இறையாண்மை என்பதும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எப்படி பாமர மக்களிடையே இறை நம்பிக்கையை அகற்றுவது கடினமோ, அதேபோலத்தான் இறையாண்மை பற்றை அகற்றுவதும் கடினம். அது நாயக வழிபாடாக, தலைமை வழிபாடாக, பொது மேடைகளில் தலைவர் காலில் விழுவதாக, தொண்ணூறு அடி கட் அவுட்டாகப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படத்தான் செய்யும். தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் போடுவது போல அபத்தங்கள் தொடரத்தான் செய்யும். மக்களாட்சியில் இவ்வாறு தொடரும் இறையாண்மையை வெகுஜன இறையாண்மை என்கிறோம்.

இறையாண்மையின் மற்றொரு வடிவம், தேசியவாத சொல்லாடலாகும். இது விடுதலை அரசியல் போல தோற்றம் கொண்டாலும், அதிகாரக் குவிப்பை நோக்கியே இட்டுச்செல்லும். அதிகாரக் குவிப்பு என்பது நவீன காலத்தில் முதலீட்டியக் குவிப்பாகவும் இருக்கும், தேசிய இறையாண்மை என்ற அரசியல் அதிகாரக் குவிப்பாகவும் இருக்கும். முதலீட்டுக்கும், தேசிய அரசுக்கும் உள்ள தொடர்பை உணர்ந்ததால்தான் கார்ல் மார்க்சும் சரி, மார்க்சீயவாதிகள் பலரும் சரி... சர்வ தேசிய, உலகளாவிய மானுட விடுதலையை (Human Emancipation) வலியுறுத்தினார்கள். உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பதுதான் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையின் முழக்கமாக இருந்தது. ஆனால் கம்யூனிஸ அரசுகள் தேசிய அரசுகளாகி, வல்லரசுகளாக உருவாகி நாளடைவில் முதலீட்டியத்துக்கும் கதவுகளைத் திறந்துவிட்டன. அதிகாரக் குவிப்பு, முதலீட்டியக் குவிப்பு இரண்டுமே நிகழும் தேசங்களாகவே ரஷ்யாவும், சீனாவும் இன்று விளங்குகின்றன.

இறையாண்மைக்கு மாற்று வடிவம் சுயாட்சி என்பதாகும். இது மக்கள் தொகுதிகளின் சுயாட்சி, சுயாட்சி பெற்ற தொகுதிகளின் கூட்டாட்சி என்று இயங்கும்போது அதிகாரப் பரவலை உள்ளூர் அளவிலிருந்து உலக அளவு வரை செயல்படுத்தக் கூடியது. அதனால் சோஷலிஸ நோக்கையும், சமூகநீதி சமத்துவத்தையும் சாத்தியமாக்க முனைவது. உலக முதலீட்டிய அமைப்பு கடும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து வருவதை ஆராயும் தாமஸ் பிக்கெட்டி சென்ற ஆண்டு எழுதிய Capital and Ideology நூலில் தேசிய அரசுகள்தான் பிரச்சினை, அவை சோஷலிஸ கூட்டாட்சிகளாக மாறினால்தான் முதலீட்டியத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறுவது கருதத்தக்கது.

“தமிழ்நாடு நாள் ஜூலை 18 - வரலாற்றுத் தத்துவம் வலியுறுத்தும் உண்மை” : பேராசிரியர் ராஜன் குறை கட்டுரை!

அண்ணாவின் தீர்க்க தரிசனம்

இன்றைக்கு பிக்கெட்டி கூறுவதை அன்றே உணர்ந்தவராகத்தான் அண்ணா நம் வாசிப்பில் வெளிப்படுகிறார். தேசிய இறையாண்மை என்பதற்கு பதில் சுயாட்சி உரிமைகள், கூட்டாட்சி வடிவங்கள் என்பதையே அவர் வலியுறுத்தியுள்ளார். அந்த சுயாட்சி உரிமையின் வெளிப்பாடுதான் ஒரு மாநில மக்கள் தங்கள் மாநிலத்தின் பெயரை தீர்மானித்துக் கொள்வதாகும். அதனால் தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ஆம் தேதியே தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட முடியும்.

அ.இ.அ.தி.மு.க பெயரில் அண்ணாவையும், திராவிடத்தையும் வைத்திருந்தாலும் அகில இந்திய சார்புள்ள எதிர்ப்புரட்சி இயக்கம். அதனால்தான் இந்திய அரசு தன் நிர்வாக வசதிக்காக மொழிவாரி மாநிலங்களை உருவாக்கிய தினத்தை தமிழ்நாடு நாளாக அறிவித்தது. நவம்பர் 1ஆம் தேதி என்பது திராவிட கூட்டாட்சி குடியரசை இந்திய ஒன்றியம் தன்வயப்படுத்திக்கொண்ட நாள் என்று வேண்டுமானால் கூறலாம். அதில் திராவிட இயக்கம் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது என்பதே கேள்வி.

தமிழகத்தின் வடபகுதியில் திருத்தணியிலும், தென்பகுதியில் குமரி மாவட்டத்திலும் வசித்தவர்கள் திராவிட தமிழ் மக்கள் தொகுதியில் இணைவதற்காக போராடி வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதுதான். அதற்காக அன்றைய தினத்தில் அந்த பகுதிகளின் தமிழக இணைப்பு போராட்ட தியாகிகளை நினைவுகூர்வது பொருத்தமானது. குறிப்பாக அந்தப் போராட்டம் நடந்த பகுதிகளில் அவர்களது ஈகை நினைவுகூரப்படுவதும், கொண்டாடப்படுவதும் அவசியம். அந்தப் போராட்டங்களை, எல்லை போராட்டங்களாகப் பார்க்க வேண்டியதில்லை. எல்லைகள் என்பவை தேசியவாத நோக்கில் வரையப்படுபவையாக அர்த்தப்படுவதை தவிர்க்க வேண்டும். நிலப்பரப்பு தேசியவாதம் (Territorial Nationalism) என்பதும் எந்த நாளும் எந்த அரசுக்கும் நிம்மதியையோ, திருப்தியையோ தராத பிரச்சினையாகும். உலகெங்கும் ஏராளமான ராணுவச்செலவு மானாவாரியாக போடப்பட்ட எல்லைக்கோடுகளைக் காப்பதற்காக செய்யப்படுகிறது. ஏராளமான உயிர்கள் பலியாகின்றன. இதெல்லாமே இறையாண்மை என்ற பிற்போக்கு நோக்கின் எச்சங்கள்தான்.

திராவிட மொழி பேசும் மக்கள் தொகுதிகளிடையே இன்னமும் ஆரிய எதிர்ப்புக்கான, வடவர் ஆதிக்க எதிர்ப்புக்கான சாத்தியங்கள் உள்ளன. கேரளாவின் முக்கிய திருநாளாகிய ஓணம் மாபலி என்ற அசுரனின் மறுவருகையைத்தான் கொண்டாடுகிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸில் பணியாற்றி ஓய்வுபெற்ற சக்திதரன் என்பவர் எழுதி, நவயானா பதிப்பகம் வெளியிட்டுள்ள Anti-Gods Own Country: A Short History of Brahminical Colonisation of Kerala என்ற நூலைப் படித்தால் இந்த உண்மை புரியும். இந்தியாவின் எதிர்காலத்திற்கு முக்கியம் திராவிடவியத்தை இந்திய அளவில் பார்ப்பனரல்லாதோரின் அரசியலாக மாற்றுவதும், சோஷலிஸ கூட்டாட்சி முறையை உருவாக்குவதும், சமூக நீதி, சமத்துவத்தை நோக்கி அரசியலை செலுத்துவதும்தான். அந்த வகையில் நாம் மாநில எல்லைகளை இந்திய அரசு வகுத்து திராவிட மக்களை பிரித்த நாளை கொண்டாடுவதை விட, திராவிட தமிழ் மக்களின் சுயாட்சி உரிமையை அறிவித்த சட்டமன்ற தீர்மானம் இயற்றப்பட்ட ஜூலை 18ஆம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதே வரலாற்று தத்துவம் வலியுறுத்தும் செயலாகும்.

- ராஜன் குறை கிருஷ்ணன் (பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், டெல்லி)

நன்றி: மின்னம்பலம்

banner

Related Stories

Related Stories