உணர்வோசை

“சங்கரலிங்கனாருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய அண்ணா” : தி.மு.கழகமும் மொழிவாரி மாகாணமும் Part 2

வடக்கு எல்லைப் போராக இருந்தாலும், தெற்கு எல்லைப் போராக இருந்தாலும் தி.மு.கழகம் முழுமையாக ஈடுபட்டது.

“சங்கரலிங்கனாருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய அண்ணா” : தி.மு.கழகமும் மொழிவாரி மாகாணமும் Part 2
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

தென் எல்லையில் தி.மு.க!

ஜூலை 23 தென் எல்லை போராட்டத்தில் கலந்துகொள்ள அண்ணாவும் மதியழகனும் நாகர்கோவில் வந்தார்கள். நாகர்கோவில் நீதிமன்றம் முன் நடந்த மறியலில் 600 பேர் கைது செய்யப்பட்டார்கள். நாகர்கோவில் நகர தி.மு.க செயலாளர் வி.எம்.ஜான் இப்போராட்டம் தொடர்பாக அனைத்து முடிவுகளும் எடுக்க அதிகாரம் கொடுத்தார் அண்ணா. அவர் வெளியிட்ட அறிக்கை தென் எல்லைப் பிரச்னையினை முழுமையாக விளக்குவதாக அமைந்திருந்தது. நாகர்கோவில் வந்த அண்ணா, திருவிதாங்கூர் போராட்டத் தலைவர்கள் அனைவரையும் சந்தித்தார். இதுதொடர்பாக நடந்த பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் மதியழகன் கலந்து கொண்டு பேசினார்.

நாகர்கோவில், செங்கோட்டை ஆகிய ஊர்களில் மறியல் போராட்டம் தி.மு.க சார்பில் 6.8.1954 அன்று நடந்தது. தமிழ் வாழ்க, நாஞ்சில் நாடு தமிழருக்கே, மத்திய அரசே நியாயம் வழங்கு என்று இவர்கள் முழக்கமிட்டனர். பத்துப் பத்து பேராக கைதானார்கள். நாகர்கோவிலில் 79 பேரும், செங்கோட்டையில் 31 பேரும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைதாகி சிறையில் இருந்தார்கள். மொத்தம் 919 பேர் சிறை வைக்கப்பட்டார்கள்.

இதன் தொடர்ச்சியாக தென் திருவிதாங்கூரில் நடந்த அனைத்து போராட்டங்களிலும் தி.மு.கவினர் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 11 அன்று நடந்த மாபெரும் போராட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை 11 பேரை சுட்டுக் கொன்றது. ஆகஸ்ட் 15 அன்று தி.மு.கவினர் நடத்திய போராட்டம் காரணமாக குழித்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தி.மு.க செயலாளர் ஜான் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்கு நடந்தது.

ஆகஸ்ட் 11 துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அக்டோபர் 22 ஆம் நாள் பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதில் தி.மு.க பங்கெடுத்தது.


தமிழர் பகுதி பறிபோனதற்கு எதிர்ப்பு!


மொழிவாரி சீரமைப்புக்குழு தனது அறிக்கையை 30.9.1955 அன்று ஒன்றிய அரசிடம் வழங்கியது. இதன்படி திருவிதாங்கூரில் இருந்த ஐந்து தாலுகாக்கள் தமிழகத்துடன் இணைக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இதுகுறித்த விரிவான அறிக்கையை கழகப் பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் 17.10.1955 அன்று வெளியிட்டார். மிக நீண்ட அந்த அறிக்கையில், மக்களின் ஆவலை இந்தக் குழு முழுமையாக நிறைவேற்றவில்லை, பல இடங்களில் முரண்பாடாக இருக்கிறது, மொழிவழி பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மற்ற பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள், திருவிதாங்கூரில் பெரும்பான்மை தமிழர் வாழும் ஒன்பது தாலுகாக்களில் ஐந்தை தான் தமிழகத்துடன் இணைத்துள்ளார்கள், தேவிகுளம் - பீர்மேடு - நெய்யாற்றங்கரை- சித்தூர் ஆகியவை எதற்காக தமிழகத்துடன் இணைக்கப்பட வில்லை?, தட்சிணப் பிரதேசம் அமைப்பதை இக்குழு ஏற்காதது வரவேற்புக்குரியது, தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதியை சென்னை மாநிலம் என்று அழைப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள், தமிழ்நாடு என்று தான் அழைக்கப்பட வேண்டும், மாநில அரசு பதவிகளில் பாதி அளவு வெளிமாநிலத்தவர்க்கு ஒதுக்க வேண்டும் என்பதை ஏற்க மாட்டோம், உயர்நீதிமன்ற நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கு வெளிமாநிலத்தவராக இருக்க வேண்டும் என்பதை ஏற்க மாட்டோம், மாநில அரசுப்பதவிகள் அனைத்தும் அந்த மாநிலத்தவர்க்கு மட்டும் தான், ஒன்றிய அரசு அலுவல்கள் மாநிலங்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், தென்னகத்தில் இந்திப்பல்கலைக் கழகம் அமைக்கக் கூடாது - என்று நாவலரின் விரிவான அறிக்கை கூறுகிறது.


''மொழிவழி மாநில அமைப்பையும், சுதந்திர ஜனநாயகத் திராவிடக் கூட்டாட்சியின் தோற்றத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் கோரிக்கை நிறைவேறும் வரை வலியுறுத்தி வரும்" என்றும் அறிவித்தார்.

“சங்கரலிங்கனாருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய அண்ணா” : தி.மு.கழகமும் மொழிவாரி மாகாணமும் Part 2
Admin

தட்சிணப் பூதம்!

1955 செப்டம்பர் மாதம் தட்சிணப்பிரதேசம் என்ற பூதம் கிளம்பியது. இந்தியாவை நான்காகப் பிரிப்பது என்றும் அதில் தென் மாநிலங்கள் மொத்தமாக தட்சிணப்பிரதேசம் ஆகும் என்றும் சொல்லப்பட்டது. இதனை திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்த்தது. தட்சிணப்பிரதேசம் திட்டத்தை முழுமையாக நிராகரிப்பதாக அண்ணா சொன்னார். 'நீங்கள் கேட்ட திராவிட நாடு தானே இது?' என்று சிலர் கிண்டல் அடித்தார்கள். நான் கேட்டது சுதந்திர நாடே தவிர, அடிமை மாநிலத்தின் சேர்க்கை அல்ல என்று அண்ணா விளக்கம் அளித்தார். தமிழக சட்டமன்றத்திலும் தி.மு.க உறுப்பினர்கள் இதனை கடுமையாக எதிர்த்து பேசினார்கள். 29.1.1956 அன்று சிதம்பரத்தில் கூடிய பொதுக்குழுவில் மொழிவாரி மாகாணப் பிரிவினையில் தமிழருக்கு ஏற்பட்ட அநீதி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈ.வெ.கி.சம்பத், சத்தியவாணி முத்து, அலமேலு அப்பாத்துரை ஆகிய மூவரும் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். பசல் அலி குழுவின் முடிவை இப்பொதுக்குழு கண்டித்தது. இந்த விவகாரத்தில் நேரு குழு எடுத்த முடிவு தன்னிச்சையானது என்று குற்றம் சாட்டப்பட்டது.

தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, கொச்சி - சித்தூர், பாலக்காடு ஆகிய தாலுகாக்களிலும், வடக்கே சித்தூர் மாவட்டத்திலும் உள்ள தமிழர் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானம் வலியுறுத்தியது. பிப்ரவரி 20 அன்று நடக்க இருக்கும் பொதுவேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தட்சிணப்பிரதேசம் திட்டத்தை எதிர்த்து என்.வி.நடராசன், எஸ்.முத்து,பாலகுருசாமி ஆகியோர் தீர்மானம் கொண்டு வந்தார்கள். இது தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம் 6.2.1956 அன்று சென்னையில் நடந்தது. இதில் கழகப் பொதுச்செயலாளர் அண்ணா கலந்து கொண்டார்.

பிப்ரவரி 20 ஆம் நாள் நடக்க இருக்கும் பொதுவேலை நிறுத்தத்துக்கான கூட்டம் இது. ''சுதந்திரத்துக்குப் பின் நடந்த மிகப்பெரிய பொதுவேலை நிறுத்தம் இதுதான்" என்று எழுதுகிறார் ம.பொ.சி. அதன்பிறகு நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், சென்னை ராஜ்யத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தும், கேரள மாநிலத்துடன் சேர்க்கப்பட்ட எல்லைத் தமிழ்ப்பகுதிகளை தமிழ்நாட்டுடன் சேர்த்தும், மாநிலப் புது அமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்று சட்டசபை உறுப்பினர்களையும் அரசையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தி.மு.க பங்கெடுத்தது. இத்தீர்மானத்தை அன்றைய ஒன்றிய அரசு மதிக்கவில்லை.


மொழிவாரி மாகாணம் அமைக்கப்பட்ட பிறகும்

1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாகாணம் அமைக்கப்பட்டது. 4.11.1956 கோகலே அரங்கில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கூடி, இந்தத் திட்டத்தில் உள்ள குறைகளை விவரித்தன. கண்டித்து தீர்மானம் போட்டார்கள். நவம்பர் 11ஆம் நாளை தமிழக அமைப்பு நாள் என நாடு முழுவதும் கொண்டாட அண்ணா அறிவிப்பு செய்தார். தமிழகம் முழு உருவம் பெறவில்லை, பெற வேண்டும் என்றார் அண்ணா. 1956 மே மாதம் திருச்சியில் கூடிய தி.மு.க இரண்டாவது மாநில மாநாட்டுத் தீர்மானங்களும் இதனை வலியுறுத்தியது. தமிழர் பகுதிகள் ஆந்திராவுக்கும் கேரளாவுக்கும் போனதை கண்டித்தது. இது ஜனநாயகத்துக்கு புறம்பான முடிவு என்றது. சென்னை மாநில அரசு காட்டிக் கொடுக்கும் போக்கை கடைப்பிடித்தது என்று கண்டித்தது. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பதாததையும் கண்டித்தது. இந்த தீர்மானத்தை பேராசிரியர் க.அன்பழகன், புதுவை சிவப்பிரகாசம், கலையழகன், சுப்பையா,வாணிதாசன் ஆகியோர் கொண்டுவந்தார்கள்.


16.11.1957 நடந்த தி.மு.க பொதுக்குழுவில் சென்னை வரும் பிரதமர் நேருவுக்கு கருப்புக் கொடி காட்ட மீண்டும் முடிவெடுக்கப்பட்டது. ஜனவரி 6 - 1958 சென்னை வர இருந்தார் பிரதமர் நேரு. 3 ஆம் தேதியே அண்ணா கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் தி.மு.க தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனாலும் பிரதமர் சென்ற பாதையில் கருப்புக் கொடி பறந்தது. அண்ணாசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியானார்கள்.

1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், தமிழ்நாடு என்ற தனித்தலைப்பில் தி.மு.க நிலைப்பாடு சொல்லப்பட்டது. ''தேவிகுளம், பீர்மேடு, திருத்தணி போன்ற தமிழ்ப்பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்படுவதற்கும், சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயரிடப்படுவதற்கும் முயற்சிக்கப்படும். இருமொழி, மும்மொழி, மாநில அமைப்பு ஏற்பாட்டினை எதிர்த்துப் போராடும்" என்று சொல்லப்பட்டது.

“சங்கரலிங்கனாருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய அண்ணா” : தி.மு.கழகமும் மொழிவாரி மாகாணமும் Part 2
Admin


இப்படி வடக்கு எல்லைப் போராக இருந்தாலும், தெற்கு எல்லைப் போராக இருந்தாலும் தி.மு.கழகம் முழுமையாக ஈடுபட்டது. மொழிவாரி மாகாணம் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் தமிழர் வாழும் அனைத்துப் பகுதிகளும் நமக்குக் கிடைக்கவில்லை. 'தமிழ்நாடு' என்ற பெயரும் கிடைக்கவில்லை!


அனைவரும் நினைப்பதைப் போல 1956 நவம்பர் 1ஆம் நாளோடு பிரச்னை முடியவுமில்லை. தமிழர்கள் பகுதிகள் பகுதிகள் இணைப்பு குறித்த சர்ச்சைகளுக்குத் தீர்வு காண படாஸ்கர் தலைமையிலான ஆணையம் அதன் பிறகு தான் அமைக்கப்பட்டது. ஓசூர், ஆந்திராவுக்கு கிடையாது என்று 1957 ஆம் ஆண்டு தான் அறிவிக்கப்பட்டது. பொன்னேரியை ஒட்டிய கிராமங்கள் ஆந்திராவுக்கு போவது குறித்த பிரச்னைகள் 1959 ஆம் ஆண்டு நடந்தன. 1960 ஏப்ரல் மாதம் தான் இறுதிமுடிவுக்கு வந்தது. அப்போதும் 'தமிழ்நாடு' என்ற பெயர் வைக்கப்படவில்லை!


அந்த இலக்கை அடைய பேரறிஞர் அண்ணா முதல்வராக வேண்டி இருந்தது.18.7.1967 அன்று தமிழக வரலாற்றில் பொன்னான நாள். தாய்த்தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' என்று தனயன் பெயர் சூட்டிய நாள்!

'தமிழ்நாடு என்று பெயர் சூட்டுங்கள்' என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருந்தார் தியாகி சங்கரலிங்கனார். அவரை மரணப் படுக்கையில் பார்த்தார் அண்ணா. அந்த தியாகிக்குக் கொடுத்த வாக்குறுதியை 12 ஆண்டுகள் கழித்து நிறைவேற்றினார் அண்ணா!

வாழ்க தமிழ்நாடு! வாழ்க அண்ணா!

Related Stories

Related Stories