உணர்வோசை

“இந்திய துணைக்கண்ட வரலாற்றின் போக்கை தீர்மானிக்கும் சிந்து நாகரிகம்” : சிறப்புக் கட்டுரை!

கங்கைச் சமவெளி வேத நாகரிகத்துக்கு முன் இருந்த திராவிட மொழிக் குடும்ப நாகரிகங்கள் யாவும் மதச்சார்பற்ற, சாதியற்ற, முற்போக்கு நாகரிகங்களாக திகழ்ந்திருக்கின்றன.

“இந்திய துணைக்கண்ட வரலாற்றின் போக்கை தீர்மானிக்கும் சிந்து நாகரிகம்” :  சிறப்புக் கட்டுரை!
 • Twitter
 • Facebook
 • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Illustrated London News என்கிற ஆங்கிலேய பத்திரிகையில் 1924ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி ஒரு செய்தி வெளியானது.

‘பல்லாண்டு காலமாக புதையுண்டு கிடக்கும் ஒரு பெரும் நாகரிகத்தை வெளிக்கொணரும் வாய்ப்பு எப்போதாவதுதான் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு கிடைப்பதுண்டு. அப்படியொரு கண்டுபிடிப்பின் தொடக்கத்தை சிந்து சமவெளியில் நாம் அடைந்திருப்பதாக தோன்றுகிறது’ முதன்முதலாக திராவிட மொழி நாகரிகத்தின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்தது.

“இந்திய துணைக்கண்ட வரலாற்றின் போக்கை தீர்மானிக்கும் சிந்து நாகரிகம்” :  சிறப்புக் கட்டுரை!

சிந்து நாகரிக பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இந்த தினத்தில் உங்களுக்காக.

ஓர் இருபது வருடங்களுக்கு முன் முக்கியமான விவாதம் ஒன்று அறிவுசார் தளத்தில் நிகழ்ந்தது.

உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்று சிந்துவெளி நாகரிகம். கிட்டத்தட்ட 8000 வருடங்களுக்கு முன்னும் நீண்டு செல்கிற சிந்து சமவெளி நாகரிகம் கண் முன்னே விரியும் அதிசயம். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே எடைக்கற்களை கொண்டு வணிகம் செய்து, சுட்ட செங்கற்களை கொண்டு கட்டடங்கள் கட்டி, குளியலுக்கென பெரும் குளத்தை கட்டடத்துக்குள் உருவாக்கி, நகரத்தின் வீடுகளில் இருந்து கழிவு நீர் கால்வாய்கள் வழியாக வெளியேறும் வழியை கண்டுபிடித்து இயங்கிய ஒரு சமூகம் இருந்ததெனில் நம்ப முடிகிறதா?

“இந்திய துணைக்கண்ட வரலாற்றின் போக்கை தீர்மானிக்கும் சிந்து நாகரிகம்” :  சிறப்புக் கட்டுரை!

சிந்து சமவெளி நாகரிகம் எனக் குறிப்பிடப்படும் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ பகுதிகளில் அகழாய்வு செய்யப்பட்டிருக்கும் பகுதிகள் சொல்லும் வாழ்க்கைகள்தான் இவை. இன்றைய நம் வாழ்க்கைகளிலிருந்து அதிக வேறுபாடு கொண்டிராத வாழ்க்கை!

ஆனால் ஒரே ஒரு சிக்கல்! அங்கு பேசப்பட்ட மொழி என்னவென தெரியவில்லை.

அங்கிருக்கும் வடிவங்கள், முத்திரைகள் முதலியவற்றை பல அறிஞர்கள் ஆராய்ந்தனர். அங்கிருந்த வாழ்க்கைமுறை பெரும்பாலும் தமிழரின் வாழ்வியலோடு ஒத்துப் போவதாகதான் சர்வதேச அறிவுலகம் கூறியது. அச்சமயத்தில்தான் திடீர் திருப்பம்.

சிந்துவெளி முத்திரைகளின் அர்த்தத்தை கண்டுபிடித்து விட்டதாக 1999ம் ஆண்டில் இருவர் அறிவித்தனர். என்.எஸ்.ராஜாராம் மற்றும் நட்வர் ஜா. சிந்துவெளி முத்திரைகளுக்கு அர்த்தம் சொல்வது முதன்முறை அல்ல. அதற்கு முன்னும் நடந்திருக்கிறது. ஆனால் அவர்கள் இருவரும் சொன்ன விஷயங்கள் அதிகமாக விவாதிக்கப்பட்டதற்கு காரணம் அவை கொண்டிருந்த சர்ச்சை.

“இந்திய துணைக்கண்ட வரலாற்றின் போக்கை தீர்மானிக்கும் சிந்து நாகரிகம்” :  சிறப்புக் கட்டுரை!

கிட்டத்தட்ட 2000 ஹரப்ப முத்திரைகளுக்கான அர்த்தத்தை தங்களின் புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாக அறிவித்தார் ராஜாராம். புத்தகத்தின் பெயர் The Deciphered Indus Script. முத்திரைகளின் அர்த்தத்தை மட்டுமின்றி சிந்துவெளி நாகரிகத்தின் எழுத்துகளை படிக்கும் முறை தெரிந்துவிட்டதாகவும் அறிவித்தார் ராஜாராம். இன்னும் ஒரு படி மேலே சென்று சிந்துவெளி நாகரிகத்துக்கும் முந்தைய எழுத்துகளை கூட வாசிக்க முடியும் என்றார்.

புத்தகம் வெளியானது. நட்வர் ஜாவின் உழைப்புக்காக ராஜாராம் அவரை பாராட்டி எழுதியிருந்தார். ‘உலகின் மிகச் சிறந்த வேத அறிஞர்’ என அவரை குறிப்பிட்டிருந்தார். அதையெல்லாம் கடந்து புத்தகத்துக்குள் செல்லும்போதுதான் முக்கியமான ஒரு விஷயம் இடித்தது. சிந்து நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரை என ஒரு படம் இடம்பெற்றிருந்தது. அந்த முத்திரையில் ஒரு குதிரை இருந்தது. அதுதான் அறிவுலகத்தில் சர்ச்சை தோன்ற அடிப்பப்டையாக இருந்தது.

சர்ச்சைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன.

சிந்து நாகரிகம் அகழாய்வு செய்யப்பட்ட காலத்திலிருந்து அங்கு எடுத்த எந்த முத்திரையிலும் குதிரை படம் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னொன்று, குதிரை என்பது ஆரியர்கள் கொண்டு வந்த விலங்கு. ஆரியர் வருவதற்கு முன் இந்திய நிலப் பகுதியில் குதிரை கிடையாது. ஆரியர் இந்தியப் பகுதிக்குள் வந்தது சிந்து நாகரிக காலத்துக்கும் பின்தான்.

“இந்திய துணைக்கண்ட வரலாற்றின் போக்கை தீர்மானிக்கும் சிந்து நாகரிகம்” :  சிறப்புக் கட்டுரை!

ராஜாராமின் புத்தகத்தின்படி சிந்துநாகரிகத்தில் குதிரை இருந்தது என்றால் சிந்து நாகரிகத்துக்கே ஆரியர்தான் காரணம் என்கிற வலதுசாரிகளின் கூச்சல் உண்மையாகிவிடும். எனவே அறிஞர்கள் ராஜாராமின் கூற்றை ஆராய களமிறங்கினர். பிறகு ஒரு பெரும் உண்மை வெளியானது.

ராஜாராம் பதிப்பித்திருந்த படத்தில் இருந்தது Mackay 453 என்கிற முத்திரை. முத்திரையில் இருந்தது காளையின் படம். முத்திரை பாதி உடைந்திருந்ததால் காளையின் கழுத்துப் பகுதி முத்திரையில் இல்லை. அதை கணிணியின் உதவி கொண்டு குதிரையாக மாற்றி வரைந்து அப்படத்தை புத்தகத்தில் ராஜாராம் பதிவேற்றியிருந்த கதை கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதும் ராஜாராம் விடவில்லை. குதிரைக்கான இனவிருத்தி உறுப்பு இருக்கும் இடத்தில்தான் படத்திலுள்ள விலங்குக்கும் இனவிருத்தி உறுப்பு இருக்கிறதென சாதித்தார். காளை மாட்டு படத்தில் இருந்த இனவிருத்தி உறுப்பு கணிணி கொண்டு அழிக்கப்பட்டு குதிரைக்கு இருப்பதை போல் சற்று முற்பகுதியில் இனவிருத்தி உறுப்பு வரையப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உலகிலேயே ஆகச்சிறந்த வரலாற்று புரட்டுகளில் ஒன்றாக இச்சம்பவம் மாறியது.

அச்சம்பவத்துக்கு முன்னமே கூட ராஜாராம் அறிவுலகத்தில் அறியப்பட்டிருந்தார். வலதுசாரி இந்துத்துவ ஆரிய அரசியலை முன்வைப்பதே அவரின் பிரதான நோக்கமாக இருந்தது. அதனாலேயே அறிவுலகத்தால் அவர் புறக்கணிக்கப்பட்டார்.

“இந்திய துணைக்கண்ட வரலாற்றின் போக்கை தீர்மானிக்கும் சிந்து நாகரிகம்” :  சிறப்புக் கட்டுரை!

சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இந்திய சமூகத்தை பற்றிய பார்வை உலகளவில் மாறியது. சிந்துவெளி மக்களே இந்திய துணைக் கண்டத்தின் பூர்வகுடிகள் என்கிற உண்மையை உலகம் உணர்ந்தது. வேதமும் அதை சுமந்து வந்த ஆரியரும் சிந்து காலத்துக்கும் மிகவும் பின்னரே இந்திய துணைக்கண்டத்துக்குள் நுழைந்து இங்கிருந்த பூர்வகுடி மக்களை ஒடுக்கி ஆளத் தொடங்கினர் என்கிற வரலாறுகளையும் உலகம் புரிந்து கொண்டது.

இந்த வரலாற்று உண்மையை புரட்டி போட்டு தலைகீழாக்க விரும்பினார் ராஜாராம். வேதகால ஆரியர்கள்தான் இந்தியாவின் பூர்வகுடிகள் என நிறுவ விரும்பினார். சிந்துவெளிக்கும் முன்பிருந்தே அங்கு ஆரியர்கள் இருந்து வருவதாகவும் அங்கு பேசப்பட்ட மொழி சமஸ்கிருதம் என்றும் புனைவுகளை உருவாக்கி வரலாறாக திரிக்க முற்பட்டார்.

சிந்து நாகரிகத்திலிருந்தும் இந்திய துணைக்கண்டத்திலிருந்து ஆரியரை தூர வைத்த ஒரே விஷயம், குதிரை! எனவே அதை சிந்து நாகரிகத்துக்குள் நுழைத்தார்.

ஆனால் ராஜாராமுக்கு ஏன் இந்த வேலை?

மிகவும் சுலபமான பதில், அவர் ஒரு பிராமணர். எனவே அவரின் வருணசாதி நலன்களுக்காக ஒரு பெரும் புரட்டை கூச்சமே இன்றி நிகழ்த்தியிந்தார்.

இன்னொரு விஷயமும் இருக்கிறது.

அறிவுலகம் புறக்கணித்திருந்த ராஜாராம் பொருட்படுத்தத்தக்க நபராக மாறியது 1999ம் ஆண்டில். எப்படி தெரியுமா? இந்திய துணைக் கண்டத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது 1998ம் ஆண்டில். வந்தவுடனே வரலாற்றை திரித்து ஆரியத்தை வளர்க்கும் வேலையை செய்யத் தொடங்கியது. ராஜாராம் பிரத்யட்சம் ஆனார்.

இன்றும் பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது. ஒரு மெகா சைஸ் ராஜாராமாக நடந்து கொண்டிருக்கிறது. எத்தனை அசிங்கப்பட்டாலும் தொடர்ச்சியாக மனம் தளராமல் திராவிட மொழிக் குடும்ப பூர்வ மக்களுக்கு எதிராக இயங்கிக் கொண்டிருக்கிறது.

“இந்திய துணைக்கண்ட வரலாற்றின் போக்கை தீர்மானிக்கும் சிந்து நாகரிகம்” :  சிறப்புக் கட்டுரை!
system1

சிந்து நாகரிகத்தை போல், வைகை நாகரிகம், பொருநை நாகரிகம் என பல ஆயுதங்களை இன்று வரலாறு நமக்கு கையளித்திருக்கிறது. கங்கைச் சமவெளி வேத நாகரிகத்துக்கு முன் இருந்த திராவிட மொழிக் குடும்ப நாகரிகங்கள் யாவும் மதச்சார்பற்ற, சாதியற்ற, முற்போக்கு நாகரிகங்களாக திகழ்ந்திருக்கின்றன. அந்த மரபே இன்றும் நாம் இந்துத்துவத்தையும் பா.ஜ.கவையும் ஏற்காமல் நிற்பதற்கான காரணமாகவும் இருக்கிறது.

1924-ல் சிந்து நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது. 1925-ல் ஆர்.எஸ்.எஸ் உருவாக்கப்பட்டது. இரண்டுமே இந்திய துணைக்கண்ட வரலாற்றின் போக்கை தீர்மானிக்கும் விஷயங்களாக மாறியிருக்கின்றன. எது எதிர்காலம் என்பதை சிந்து நாகரிக நூற்றாண்டு வருடத்தில் இந்திய துணைக்கண்டத்துக்கு காட்டுவோம்.

banner

Related Stories

Related Stories