உணர்வோசை

கீழடியும் திராவிட நாகரிகமும்..! : அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டதற்கு ஏன் இத்தனை வரவேற்பு?

இந்திய துணைக்கண்டத்தின் பூர்வகுடிகளான நாம் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் நேரங்களில் எல்லாம் மண்ணுக்குள்ளிருந்து வரலாறு முளைத்து வந்து நமக்கு ஆயுதங்களை வழங்கும்.

கீழடியும் திராவிட நாகரிகமும்..! : அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டதற்கு ஏன் இத்தனை வரவேற்பு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

தமிழ்நாட்டிலிருந்து இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு எழுதப்பட வேண்டும் என்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குரல் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கும் சூழலில், இன்று இன்னொரு முக்கியமான செய்தி தொல்லியல் ஆய்வுத்துறையை சார்ந்து வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

தென்னிந்திய கோவில் ஆய்வுத்துறையில் தொல்லியல் கண்காணிப்பாளர் பணி செய்யவென அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டிருக்கும் செய்திதான் அது.

யார் இந்த அமர்நாத் ராமகிருஷ்ணன்? அவர் சென்னைக்கு மாற்றப்பட்டதற்கு ஏன் வரவேற்பு அளிக்கப்படுகிறது?

எந்த நாட்டுக்கும் வாய்க்காத ஒரு சுவாரஸ்யம் இந்திய துணைக்கண்டத்துக்கு உண்டு. இங்கு மட்டும்தான் வரலாறு அறியவே ஒரு பெரும் அரசியலை நிகழ்த்த வேண்டிய சூழல் நிலவுகிறது.

இந்திய துணைக் கண்டத்தின் வரலாறை இரண்டு முக்கியமான நாகரிகங்களின் மோதலாக புரிந்து கொள்ளலாம்.

திராவிட நாகரிகம், ஆரிய நாகரிகம்! - சூட்சுமம் என்னவென்றால் இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியலையே கூட இந்த இரண்டு நாகரிகங்களின் மோதலாக உருவகித்துக் கொள்ளவும் முடியும் என்பதுதான்.

இந்திய துணைக் கண்டத்தின் முதல் நாகரிகம் கங்கைச் சமவெளி நாகரிகமாகவும் வேதங்களின் நாகரிகமாகவும்தான் பல காலமாக நமக்கும் உலகுக்கும் சொல்லப்பட்டு வந்தது. வேத நாகரிகத்தின் பீடாதிபதிகளாக ஆரியர்களும் ஆரியரின் மரபை போற்றும் பிராமணர்களும் குறிப்பிடப்பட்டனர். அதனாலேயே வருணாசிரமும் வைதிக மதமும் இந்த நிலத்திலேயே இருந்த அம்சங்களாகவும் போதிக்கப்பட்டு வந்தன.

இவை யாவும் கட்டுக்கதைகள்தான் என்பதை முதன்முதலாக உலகுக்கு அறிவித்தது சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பு.

கி.மு 1750-ல் ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இந்திய (அப்போது இந்தியா என்ற பெயரே கிடையாதெனினும்) நிலப்பரப்புக்குள் நுழைந்தனர். வேத நாகரிக போதனைகளின்படி, இந்திய நிலப்பரப்புகளுக்குள் இருந்த மக்கள் நாகரிகமற்றவர்களாக இருந்ததாகவும் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களே அம்மக்களுக்கு நாகரிகம், மொழி, கலை முதலியவற்றை பற்றிய அறிவை புகட்டியதாகவும் கூறப்பட்டது. ஆனால் 1924ம் ஆண்டில் அகழாய்வு செய்யப்பட்ட சிந்து சமவெளி வேறொரு செய்தியை உலகுக்கு அளித்தது.

கீழடியும் திராவிட நாகரிகமும்..! : அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டதற்கு ஏன் இத்தனை வரவேற்பு?

சுட்ட செங்கற்கள் கொண்டு அங்கு கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. கழிவுநீர் அகற்றுவதற்கான கால்வாய்களும் வெட்டப்பட்டிருந்தன. ஒரு பெரும் குளியலறை இருந்தது. எங்கும் கோயில் இல்லை. அரசனுக்கான அரண்மனையும் இல்லை. சிந்து சமவெளி மிகவும் பண்பட்ட முற்போக்கு நாகரிகத்தை உலகுக்கு காட்டியது. தொடர்ந்து நடந்த பல அகழாய்வுகளின்படி சிந்து சமவெளியின் காலம் கி.மு 2500 வரை எட்டியது. அதாவது இன்றிலிருந்து 4500 வருடங்களுக்கு முந்தைய நாகரிகமாக அது அடையாளம் கொண்டது. அதாவது ஆரியர்கள் வந்த கி.மு 1500க்கும் 1000 வருடங்களுக்கு முந்தையது. ஒரு பெரும் வரலாற்றுப் புரட்டு வெளுத்தது.

ஆரியர்கள் நாடோடிகளாக இந்திய நிலப்பரப்புக்குள் நுழைவதற்கும் முன் அவர்களையும் விட முற்போக்கான சமூகமாக, நாகரிகமாக, மொழியினமாக நாம் இங்கு வாழ்ந்திருக்கிறோம் என்கிற உண்மை வெளியானது.

எனினும் ஆரிய மொழியினத்தை சேர்ந்தவர்களின் மேலாதிக்கம் ஓயவில்லை. தங்களின் மொழியான சமஸ்கிருதத்தை திணிப்பதும், சாதிகளைப் புகுத்துவதும், வருணாசிரமத்தை கெட்டிப்படுத்துவதும் உயர்சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதும் என பல வேலைகளை தொடர்ந்து அதிகாரத்தின் துணை கொண்டு செய்து வருகிறார்கள்.

சமூகநிலை அடுக்குகளின் உச்சத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள படாத பாடு படுகிறார்கள். அந்த பாடுகளினூடாக சிந்துவெளியில் ஆரியர்களின் குதிரை முத்திரையை திருட்டுத்தனமாக நுழைப்பது, சிந்து நாகரிகமே வேத நாகரிகம்தான் என பேசுவது, சமஸ்கிருதமே ஆதி மொழி எனப் பிரசாரம் செய்வது போன்ற புரட்டு வேலைகள் சிரத்தையுடன் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவற்றில் ஒன்றாக உருவாக்கப்பட்டதுதான் சிந்துவெளிக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்கிற புரட்டல்!

கீழடியும் திராவிட நாகரிகமும்..! : அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டதற்கு ஏன் இத்தனை வரவேற்பு?

இந்திய துணைக்கண்டத்தின் பூர்வகுடிகளான நாம் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் நேரங்களில் எல்லாம் மண்ணுக்குள்ளிருந்து வரலாறு முளைத்து வந்து நமக்கு ஆயுதங்களை வழங்கும்.

ஆரிய மேலாதிக்கத்தை போற்றுவோர் அதிகாரத்தில் அமர்ந்து மொத்த மக்களையும் பொருளாதார ரீதியாகவும் சமூகரீதியாகவும் ஒடுக்கிக் கொண்டிருந்த காலத்தில்தான் நமக்கான ஆயுதத்தை மீண்டும் வரலாறு எடுத்து வந்து கையளித்தது. கீழடியில்!

சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் பகுதி கீழடி. விவசாயத்துக்கென உழும் நேரங்களில் பலவகை தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வந்த நிலையில் கீழடியில் தொல்லியல் ஆய்வு செய்வதற்கான முயற்சி தொடங்கியது. 2013ம் ஆண்டில் கீழடி அகழ்வாராய்ச்சிக்கான தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அவரின் மேற்பார்வையில் கீழடியில் அகழாய்வுகள் நடக்கத் தொடங்கின. முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளிலேயே மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் கீழடியில் நேர்ந்தன.

சுட்ட செங்கற்களாலான சுவர்கள் மண்ணிலிருந்து வெளிப்பட்டன. சிந்து சமவெளியில் இருந்த அதே வகை செங்கற்கள்! இங்கும் கழிவுநீர் போக்குவரத்துக்கான வழிகள் அமைக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 5000 தொல்பொருட்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டன. அவற்றின் காலமும் கணிக்கப்பட்டன. இரண்டாம் கட்ட அகழாய்வு முடிந்தபோது அறிக்கையை வெளியிட்டார் அமர்நாத் கிருஷ்ணன். கீழடியின் காலகட்டம் கி.மு 4ம் நூற்றாண்டுக்கும் கிமு 2ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது என்றார் அவர். வேதகால நாகரிகமாக சொல்லப்படும் கங்கைச் சமவெளி நாகரிகத்தின் காலகட்டம் கி.மு 5.

இந்திய துணைக்கண்டத்துக்கே நாகரிகம் வழங்கியதாக சொல்லப்பட்ட நாகரிகத்தின் காலத்துக்கும் முந்தைய நாகரிகம் சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், கங்கைச் சமவெளி காலத்தையே எட்டும் நாகரிகம் நம்மூர் கீழடியில் முளைத்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் இந்திய அரசியலான நாகரிகங்களின் மோதல் மோசமான கட்டத்தை எட்டியது.

கீழடியும் திராவிட நாகரிகமும்..! : அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டதற்கு ஏன் இத்தனை வரவேற்பு?

கீழடியின் தொல்லியல் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் கிருஷ்ணனுக்கு ஒன்றிய அரசால் பணியிட மாற்றம் வழங்கப்பட்டது. அஸ்ஸாமுக்கு அவர் மாற்றப்பட்டார். ஒன்றிய அரசின் செயலுக்கு எதிராக கேள்விகள் பறந்தன. கீழடி அகழாய்வுக்கான தொல்லியல் கண்காணிப்பாளராக பி.எஸ்.ஸ்ரீராமன் என்பவர் நியமிக்கப்பட்டார்.

அமர்நாத் ராமகிருஷ்ணனின் பணியிட மாற்றத்துக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ‘கீழடி அகழாய்வு என்பது வரலாற்றின் ஒரு பகுதி. கீழடி அகழாய்வு சிறப்பாக நடக்க வேண்டும். நல்ல அதிகாரி இருக்க வேண்டும் என்பதில் நீதிமன்றத்துக்கும் அக்கறை உண்டு. ஏன் அவரே கீழடியில் பணியை தொடரக் கூடாது’ என நீதிபதிகள் கேட்டனர். பணியிட மாற்றம் வழக்கமான நடைமுறைதான் எனக் குறிப்பிட்டது ஒன்றிய அரசு.

ஆனால் பணியிட மாற்றம் ஒன்றிய அரசின் திட்டமிட்ட நடவடிக்கை என்பதை அடுத்தடுத்த சம்பவங்கள் வெளிப்படுத்தின. அமெரிக்க தமிழ்ச்சங்கங்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் விருந்தினராக அழைக்கப்பட்டார். அமெரிக்கா செல்வதற்கான அனுமதியை நிராகரித்தது ஒன்றிய அரசு.

மூன்றாம் கட்ட அகழாய்வு ஒன்றிய அரசு அனுப்பிய பி.எஸ்.ஸ்ரீராமின் கண்காணிப்பில் நடந்தது. அகழாய்வை முடித்து விட்டு, ‘குறிப்பிடத்தகுந்த விஷயங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை’ என அறிவித்தார் பி.எஸ்.ஸ்ரீராம். ஊடகங்களை சந்தித்தபோது இன்னும் குறிப்பாகவே பேசினார் ஸ்ரீராம்: ‘சிந்து சமவெளிக்கும் கீழடிக்கும் தொடர்பு எதுவும் இல்லை’ என்றார். அங்கு ‘கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கொண்டு அங்கு வணிகம் இருந்ததாக புரிந்து கொள்ள முடியாது’ என்றும் கூறினார்.

தமிழருக்கும் திராவிட மொழி இனத்துக்கும் எதிரான ஒன்றிய அரசின் போக்கு தெளிவானது. பெரும் அதிருப்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் கீழடி அகழாய்வுக்கு நியமிக்கப்பட வேண்டுமென தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் குரலெழுப்பினர். தமிழ்நாட்டின் பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் போராட்டம் நடத்தின. தொல்லியல் ஆய்வாளருக்காக போராட்டம் நடத்தியது உலகிலேயே நாமாகத்தான் இருப்போம். ஒன்றிய அரசு செவிசாய்க்கவில்லை.

கீழடியும் திராவிட நாகரிகமும்..! : அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டதற்கு ஏன் இத்தனை வரவேற்பு?

மாநில தொல்லியல் துறையே கீழடி ஆய்வுகளை நடத்த வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நான்காம், ஐந்தாம் கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. கருப்பு சிவப்பு பானை ஓடுகள் வெளிவந்தபடி இருந்தன. இவற்றுக்கிடையில் அமர்நாத் ராமகிருஷ்ணனும் வரலாற்றுரிமைக்கான போராட்டத்தை விட்டுவிடவில்லை.

கீழடியில் நடைபெறும் அடுத்தடுத்த கட்டங்களில் பங்கேற்கும் வகையில் தன்னை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யும்படி நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டார் அமர்நாத் ராமகிருஷ்ணன். ஒன்றிய அரசின் மோதல் போக்கும் முடிவுறவில்லை. அமர்நாத் ராமகிருஷ்ணன் கோவாவுக்கு மாற்றப்பட்டார்.

வரலாற்றை கண்டறிவதற்கு இத்தனை பெரிய போரை நிகழ்த்த வேண்டிய கட்டாயம் வேறெந்த நாட்டிலும் இருந்திருக்குமா என தெரியாது. ஆனால் இந்திய துணைக்கண்டத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. நமக்கான வரலாறே நாம் கேட்டுப் பெற வேண்டிய உரிமையாகவும் ஆகிக் கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில்தான் பொருநை நாகரிகத்தின் காலத்தை சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கி.மு ஐந்தாம் நூற்றாண்டை தொட்டதற்கே கீழடியை புதைக்க விரும்பிக் கொண்டிருந்த ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாட்டின் பொருநை நாகரிகம் கி.மு 11ம் நூற்றாண்டை தொட்டிருப்பது நிச்சயமாக உவப்பான செய்தியாக இருக்க முடியாது. ஆனாலும் உண்மை என்னும் பெரும் வரலாற்றோட்டத்துக்கு முன் எவராகினும் தாழ்பணிய மட்டுமே முடியும் என்பதை இன்றைய அறிவிப்பு உறுதி செய்திருக்கிறது.

கீழடியை திராவிட மொழி இன வரலாற்றின் முதலடியாக தொடங்கி வைத்த அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் தென்னிந்திய கோவில்களுக்கான தொல்லியல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு நாகரிகம் தன்னுடைய மேலாதிக்கத்தை தக்கவைக்க பொய் வரலாறை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இன்னொரு நாகரிகம் தனது ஜனநாயகத்தை உறுதிப்படுத்த அறத்தின்பால் நின்று போராடிக் கொண்டிருக்கிறது.

கோயில்களின் அரசியல் நடந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தென்னிந்திய கோவில்களில் ‘கோ’வாக வீற்றிருந்தோர் யாரென்பதை இந்திய துணைக் கண்டம் இனி காணும்.

அமர்நாத் ராமகிருஷ்ணனை வரவேற்போம்!

banner

Related Stories

Related Stories