உணர்வோசை

“என் புருசனும் கல்யாணத்துக்கு போனான்”... பாணியில் தடுப்பூசியை கையாளும் இந்திய அரசுக்கு ஒரு கேள்வி?

நடிகர் விவேக் போன்ற பிரபலத்தை கொண்டு அதிக மக்களை ஈர்க்கலாம் என்ற எண்ணத்தில் ஊசி போட்டதும் நேர்ந்த ஊடக சந்திப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம்.

“என் புருசனும் கல்யாணத்துக்கு போனான்”... பாணியில் தடுப்பூசியை கையாளும் இந்திய அரசுக்கு ஒரு கேள்வி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

'Let's be clear.. '

அறிவியல் ஒன்றும் மதம் கிடையாது. அறிவியலில் blasphemy-க்கு இடம் கிடையாது. கேள்வியிலிருந்து ஆய்விலிருந்துமே அறிவியல் பிறக்கிறது. எனவே மக்களுக்கு எழும் கேள்விகளையும் விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டும். கேள்வி கேட்பதாலேயே 'இவன் அறிவியலுக்கு எதிரானவன்' என முத்திரை குத்துவதும், விமர்சனம் செய்வதாலேயே ‘இவன் எதிரி’ என முடக்குவதும் பாசிச வகைமைக்குள் வரும்.

இன்றைய விவேக் மரணம் ஏற்கனவே கனன்று கொண்டிருக்கும் கேள்விகளை பற்ற வைத்திருக்கிறது. அந்த சந்தேகங்கள் இருக்கும் பலரும் இல்லாத பாசாங்குடனே இன்றைய நாளை கடந்து கொண்டிருக்கின்றனர். நம் கேள்விகள் மக்களின் மனதை தடுப்பூ ஊசிக்கு எதிராக்கலாம் என்குற மனநிலையில் அம்முடிவுக்கு அவர்கள் வருகிறார்கள். ஆனாலும் கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனென்றால் அறிவியலில் அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நம்மை ஆளும் state இருக்கிறது பாருங்கள்!

அநேகமாக விவேக் போன்ற பிரபலத்தை கொண்டு அதிக மக்களை ஈர்க்கலாம் என்ற எண்ணத்தில் ஊசி போட்டதும் நேர்ந்த ஊடக சந்திப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம். அதுவே இப்போது சாட்சியாக மாறுவதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மருத்துவர் புடைசூழ, சுகாதார செயலரையும் அருகே வைத்துக் கொண்டு, தான் கூறும் எல்லா விஷயங்களையும் சரியா என ஒவ்வொருவரையும் பார்த்து அவர்கள் உறுதிபடுத்திய பிறகே விவேக் பேசுகிறார்.

அதில் ஒன்று, 'தடுப்பூசி போட்டு இதுவரை யாருக்கும் எந்த பக்கவிளைவு வரவில்லை என அரசு கூறியிருக்கிறது' விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு சுகாதாரத்துறை செயலரும் மருத்துவரும் ஊடகத்தை சந்தித்தபோதும் கூட தடுப்பூசி மீதான சந்தேகத்தை தவிர்ப்பதே பிரதான நோக்கமாக இருந்தது. இருவகை தடுப்பூசிகளில் கோவேக்சின் தடுப்பூசியை விவேக் போட்டிருக்கிறார்.

“என் புருசனும் கல்யாணத்துக்கு போனான்”... பாணியில் தடுப்பூசியை கையாளும் இந்திய அரசுக்கு ஒரு கேள்வி?

தடுப்பூசியை பற்றி பரவலான சர்ச்சை கருத்துகள் இருக்கிறது. ஆரம்ப சர்ச்சை அவற்றின் efficacy data-விலிருந்து தொடங்கியது. Efficacy data என்பது ஒரு மருந்து குறிப்பிட்ட நோயை தீர்க்கும் வல்லமை எந்தளவுக்கு இருக்கிறது என்பதை பற்றிய தரவு. மேலும் ஒரு நோய்க்கான மருந்து பரிசோதிக்கப்பட வேண்டிய மூன்று கட்டங்களில் முறையாக உள்ளாக்கப்படாமல் தடுப்பு மருந்துகள் வெளியாயின. ‘என் புருஷனும் கல்யாணத்துக்கு போனான்’ என்கிற அவசரத்துடன் உலக நாடுகளுக்கு முன்பு இந்தியா நிற்க வேண்டுமென்கிற கட்டாயத்தில் பிரதமர் மக்களின் ஆரோக்கியத்தை பிணையாக்கினார். மேலும் தடுப்பூசிகளை போட வைப்பதற்கு இந்த அரசு கையாண்ட வழிமுறையுமே சிக்கலானது.

மருந்துகளின் திறன் சார்ந்த கேள்விகள் இருக்கும்போது அவை எதற்கும் முறையான பதில்களளிக்காமல் திரையில் தோன்றி பிரதமர் பணமதிப்பு நீக்கத்தை போல தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவிக்கிறார். பிறகு நடைமுறைக்கு வருகிறது. உலக நாடுகளில் தலைவர்களே முதல் தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருப்பது வழக்கமாக இருந்தபோது இந்தியாவில் மட்டும் ‘சண்டை போட்டுக் கொள்ளாமல் தூய்மை பணியாளர்கள் முதலில் தடுப்பூசி பெற வழி வகை செய்யுங்கள்’ என முதலைக்கண்ணீர் வடித்து பிரதமர் எளிய மக்களை மாட்டி விட்டார்.

அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் என தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. ஒரு பெரும் திரள் போட்ட பிறகு பிரதமர் போட்டுக் கொண்டதாக சொல்லப்பட்டது. எனவே உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தும் மூன்று கட்ட பரிசோதனையை முடிக்காமலும் தடுப்பூசிகளை சார்ந்து மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமலும் கூட்டம் கூட்டமாக மக்களை அலையவிட்டு கும்பமேளா கொண்டாடும் அரசை மக்கள் எப்படி நம்புவது? ஊரில் ஓர் உறவினர் முதல் தடுப்பூசி போட்டு விட்டார். இப்போது இரண்டாம் டோஸ் இல்லை, பற்றாக்குறை என்கிறார்கள். இப்போது அவர் என்ன செய்வது? அவருக்கு பதில் சொல்லவென இந்த அரசு ஏதேனும் வழிமுறையை உருவாக்கி வைத்திருக்கிறதா? குறைந்தபட்சம் ஒரு ஹெல்பலைன்?

“என் புருசனும் கல்யாணத்துக்கு போனான்”... பாணியில் தடுப்பூசியை கையாளும் இந்திய அரசுக்கு ஒரு கேள்வி?

சில நாட்களுக்கு முன் ஒரு நண்பருக்கு கோவிட் பாசிட்டிவ் வந்திருக்கிறது. தொலைபேசிக்கு அழைப்பு வரும், ஆம்புலன்ஸ் வரும், அழைத்துச் செல்லப்படுவோம் என ‘மாரி பெய்யும் தூதுவன் வருவான்’ பாணியில் காத்திருந்தார். ஒன்றும் நடக்கவில்லை. இவரே வண்டியை எடுத்துக் கொண்டு கிங்ஸ் இன்ஸ்டியூட்டுக்கு சென்று ‘அன்பே சிவம்’ மாதவன் கைவிரித்து ‘Take my blood' என சொல்வது போல ‘ஐம் கோவிட் பாசிட்டிவ்’ என சொல்லியிருக்கிறார். இடமில்லை என செக்யூரிட்டி அவரை திருப்பி அனுப்பி இருக்கிறார்.

அதாவது மக்களே, please digest this. கோவிட் பாசிட்டிவ் வந்த ஒருவர் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் சுற்றி திரிந்திருக்கிறார். கிண்டி தொழிற்பேட்டைக்கு போனபிறகும் பதிலில்லை. ஊடகத்தில் இருப்பதாக சொன்னதற்கு பிறகுதான் மரியாதையே வந்திருக்கிறது. பிறகு பதில் வந்திருக்கிறது. எக்ஸ்ரே எடுத்து கொடுத்து, படிவத்தை நிரப்பி, வீட்டில் தற்போது தனிமை சிகிச்சையில் இருக்கிறார்.

ஆதார் அட்டை என்றாலும் நாமே அலைய வேண்டும். நோய் வந்தாலும் நாமே அலைய வேண்டும் என்றால் நம்மை ஆள்வது அரசா அல்லது எருமை மாடா? முதல் டோஸில் சிறிய reactions வரலாம் என்கிறார்கள். விவேக்கின் வாயிலிருந்தே ‘பக்கவிளைவு இல்லை’ என அரசு சொல்ல வைக்கிறது. ஆனால் இரண்டாம் டோஸ் போட்ட பிறகு நடிகர் பார்த்திபனின் முகம் வீங்கியிருப்பதாக அவரே பதிவிட்டிருக்கிறார். இந்த அரசையா நம்பச் சொல்கிறீர்கள்?

தடுப்பூசி போட்டுக் கொண்ட மற்றவரெல்லாம் சரியாக இருக்கிறார்கள் என வார்த்தைக்கு வார்த்தை சுகாதார செயலர் சொல்கிறார். எப்படி தெரியும்? அடுத்த டோஸ் போடும் வரை தினமும் குறிப்பிட்ட நபரை தொடர்பு கொண்டு விசாரிக்கிறார்களா? கண்காணிக்கிறார்களா? மருத்துவ பாதுகாப்பு எதுவும் கொடுக்கப்படுகிறதா? தடுப்பூசி குத்திய பிறகு அடுத்த ஒரு மணி நேரம் மட்டுமே கண்காணிப்பு. ஒன்றும் இல்லை எனில் அவருக்கு ஒன்றுமில்லை என அரசுக்கு கணக்கு சொல்லப்பட்டு விடுகிறது. வீட்டுக்கு செல்லும் வழியிலே அல்லது அடுத்த நாளோ, அதற்கு அடுத்த நாளோ நேர்ந்தால் என்ன ஆவது?

“என் புருசனும் கல்யாணத்துக்கு போனான்”... பாணியில் தடுப்பூசியை கையாளும் இந்திய அரசுக்கு ஒரு கேள்வி?

விவேக் பிரபலம் என்பதால்தான் இந்த மரணமும் உடல் குறைவும் வெளியே வருகிறது. பிறரின் நிலை? தடுப்பூசி போட்டதும் பிற உபாதைகள் ஏற்படின் அதற்கான மருத்துவ சிகிச்சை செலவை அரசு கொடுக்கிறதா? அல்லது அது ஒரு separate event என பழியை போட்டு தப்பித்துக் கொள்ளுமா? என் வீட்டருகேயே தடுப்பூசி போட்ட ஓர் அம்மாவுக்கு உடல் அசதியும் கிறுகிறுப்பும் ஒரு வாரமாக தொடர்கிறது என்கிறார்.

அய்யா, நாளையே நான் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயார். எக்மோவுக்கான செலவை அரசு ஏற்குமென உத்தரவாதம் எனக்கு கிடைக்குமா? விவேக் என்கிற கலைஞனின் cardiac arrest-டை separate event என்கிறார்கள். 100 சதவிகித அடைப்பு ஓரிரவில் நேராது என்கிறார்கள். சரிதான். சிடி ஸ்கேன் எல்லாம் விவேக்குக்கு எடுத்தபோது இதயத்தை ஆராயவில்லையா? 100 சதவிகித அடைப்பு ஓரிரவில் நேராது எனில் 60, 70 சதவிகிதமேனும் முன்பே இருந்திருக்குமே, விவேக் அதை தெரிவிக்கவில்லையா?

இத்தனை காலமும் 100 சதவிகிதத்துக்கு குறைவாக இருந்த அடைப்பு ஒரே இரவில் 100 சதவிகிதமாக ஆனதற்கு என்ன காரணம்? ரத்தம் உறைந்து போனதா? இந்த கேள்விகளை மருத்துவர்கள் ‘ரொம்ப யோசிக்காதீங்க’ என புறம் தள்ளிவிட்டு போகலாம். சாமானியன் என்ன செய்வது? எனவே இங்கு மருத்துவத்தின் மீதும் அறிவியலின் மீதும் நம்பிக்கை இல்லாமல் எவரும் கேள்வி எழுப்பவில்லை. இங்கிருக்கும் அரசு அமைப்பின் லட்சணம் மக்களுக்கு எதிராக இருப்பதுதான் எங்களின் சிக்கல். அதுவும் பிரதமருக்கு உகந்த ஒரு நிறுவனம் லாபமீட்ட, அதிலிருந்து தடுப்பூசிகள் வாங்கப்பட்டு மொத்த மக்களின் தலைகளில் கட்ட முயலுகையில் கேள்விகளை தவிர எங்களுக்கு வேறு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்?

banner

Related Stories

Related Stories