உணர்வோசை

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையான மதவாத கும்பல் : நாட்டை ‘தாய்நாடு’ என அழைத்தால் மட்டும் போதுமா?

நாட்டை ‘தாய் நாடு’ என அழைப்பதால் மட்டும் பெண்கள் முன்னேறிவிட மாட்டார்கள்.

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையான மதவாத கும்பல் : நாட்டை ‘தாய்நாடு’ என அழைத்தால் மட்டும் போதுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மார்ச் - 8 : சர்வதேச பெண்கள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்திற்கு வித்திட்டவர்கள் யார்? இந்த கொண்டாட்டத்திற்கு என்ன காரணம்? இன்றைய நாளில் பெண்கள் நமது சமூகத்தில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து இந்த உலக மகளிர் தின நாளில் காண்போம்!

பெண்கள் தினத்துக்கு ஒரு உலகளாவிய போராட்ட வரலாறும், சோஷலிச பாரம்பரியமும் உண்டு. 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே அமெரிக்க நாட்டிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உரிமைகளுக்காகப் பெண்கள் போராடினர். அதற்கு முதன்மையான காரணமானவர் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின். முதன்முதலில், கிளாரா ஜெட்கின்ஸ் தலைமையில்தான் பெண்களின் உரிமை காக்கும் இயக்கம் தோன்றியது.

1889 ஆம் ஆண்டு, கிளாரா ஜெட்கின், ‘அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தில் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும்’ என்று முதல் உரிமைக்குரல் எழுப்பினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், “எங்களுக்குத் தொழிற்சங்க உரிமை வேண்டும்; பணிபுரிகின்ற இடங்களில் சமநீதி கிடைக்க வேண்டும்” என்று ஆயிரக்கணக்கான பெண்கள் அணிவகுத்து வந்தார்கள்.

ஒருகட்டத்தில் ஆலை நிர்வாகம் அவர்களது கோரிக்கைக்கு செவிசாய்த்தது. தங்களது போராட்டம் வெற்றி பெற்றதை வாழ்த்திப் பாராட்டி, மூன்று ஆண்டுகள் கழித்து, “இனி இந்த நாள்தான், உலக மகளிர் நாள்” என்று அறிவித்தார் கிளாரா ஜெட்கின்.

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையான மதவாத கும்பல் : நாட்டை ‘தாய்நாடு’ என அழைத்தால் மட்டும் போதுமா?

அதுமட்டுமல்லாது, சோவியத் புரட்சியின்போது, ஆரோரா கப்பலில் பீரங்கிகள் வெடித்தபோது, 1917 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் நாள், பெட்ரோகாம் நகரில் எட்டாயிரம் பெண்கள் அணிவகுத்து, “உரிமை வேண்டும்; ஒடுக்குமுறையை எதிர்ப்போம்” என்று போர் முழக்கம் முழங்கினார்கள். அந்த முழக்கமும் உரிமைப் பதாகையும் தான் சோவியத் புரட்சிக்கு நுழைவாயிலாக அமைந்தது. அதன்பின்னர் நடைபெற்ற பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னரே இங்கிலாந்து நாட்டில் பெண்கள் வாக்குரிமை பெற்றார்கள்.

ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்!

சமூக வாழ்வில் ஆண்களை மையப்படுத்தி உடைமை சமூகம் தோன்றிய நாளிலிருந்து பெண்களை அடிமைப்படுத்தும் சமூக அநீதி தொடங்கியது. குறிப்பாக, பெண்கள் ஏடு தொடுவது தடுக்கப்பட்டு அது தீட்டென போதித்தும், படிக்கவே கூடாது என்பதையும் ஒழுக்கவிதியாக உபதேசிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் ஜனநாயக உரிமைகளுக்காகவும், மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காகவும் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் இந்த இருண்ட வாழ்க்கை சூழலை எதிர்த்துப் மகத்தான போராட்டங்கள் மூலம் இன்று பெண்கள் ‘ஆணுக்கு பெண் இளைப்பில்லை காண்’ என உலகறியச் செய்து முத்திரையை பதித்துக் கொண்டுள்ளன.

குறிப்பாக இந்தியாவில் பெண்கள் முன்னெடுத்த தனியார்மயத்துக்கு எதிரான போராட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர் - என்.ஆர்.சி.க்கு எதிரான போராட்டங்கள், மாணவர்களின் பல்கலைக்கழகங்களில் நடக்கும் போராட்டங்கள், பொது வேலை நிறுத்தங்கள் மற்றும் டெல்லியில் விவசாய - விவசாயத் தொழிலாளர் போராட்டங்கள் என எனப் பலவற்றிலும் பெண்களின் வீரம் செறிந்த பங்கேற்பு உலக நாடுகளுக்கே உத்வேகம் அளிப்பதாக இருந்திருக்கிறது.

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையான மதவாத கும்பல் : நாட்டை ‘தாய்நாடு’ என அழைத்தால் மட்டும் போதுமா?

சுரண்டலுக்கு உள்ளாகும் பெண் சமூகம்!

கடந்த ஆண்டில், "விவசாயிகள் போராட்டத்தின் முன்னணி வீரர்கள்" என தலைப்பிட்டு பிரபல அமெரிக்க ஆங்கில இதழான டைம், மார்ச் மாத இதழின் அட்டைப்படத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களின் படத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தியது.

அதேவேளையில், ஆட்சியாளர்களின் கொள்கைகளின் விளைவாக வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி, அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கான வேலையின்மை, அடிப்படை சுகாதாரக் கேடுகள், ஜி.எஸ்.டி., உயர் பணமதிப்பு நீக்கம், சிறு குறு தொழில் பாதிப்பு, கல்வி/மருத்துவத்தில் தனியார்மயம், அரசின் அடிப்படை சேவைகள் தனியார்மயம், சீரழிந்து வரும் பொது விநியோக முறை போன்றவை ஒருபுறம் இறுக்குகின்றன.

இந்தப் பொருளாதார நெருக்கடியால் பெரும் பாதிப்புக்கு ஆளாகுபவர்களாக பெண்களே அதிகம் உள்ளனர். மறுபுறம், குறிப்பாக, வேலையின்மை, பணிச்சுமை, சமவேலைக்கு சமஊதியமின்மை என பெரும் பகுதிப் பெண்கள் கடுமையான பொருளாதாரச் சுரண்டலுக்கும் ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாது, தற்போது இந்தியாவில் உள்ள பெண்களில் 50 விழுக்காட்டினருக்கும் மேல் இரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஒரு நாளைக்கு 93 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் கொடுமை, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகள் மீதான வன்முறை 250 சதவீதம் அதிகரிப்பு என்ற நிலைமையும் பெண்களின் பாதுகாப்பான வாழ்க்கைமுறையின் மீது பெரும் பாதிப்பை உருவாக்குகிறது. மேலும், தலித், பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் நிற்காமல் தொடர்கின்றன.

அதாவது, இதர பெண்களைவிட தலித் பெண்களின் ஆயுட்காலம் சுமார் 15 ஆண்டுகள் குறைவாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குழந்தைப் பருவத்தில் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமை; மருத்துவ வசதிகளை எளிதில் பெற முடியாத சமூகத் தடைகள் முதலான காரணங்களால் இளம் வயதிலேயே மரணமடைந்து வருகின்றனர். இதன் மூலம் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றன. மாற்றுத்திறனாளி பெண்களும் பாதுகாப்பற்ற சூழலில் தான் வாழ்கின்றனர்.

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையான மதவாத கும்பல் : நாட்டை ‘தாய்நாடு’ என அழைத்தால் மட்டும் போதுமா?

அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்

அதுமட்டுமல்லாமல், பெண்கள் மீது நடத்தப்படும் இணையதளக் குற்றங்கள் பெருமளவு அதிகரித்து வருகின்றன. தங்களது சுய கருத்துகளைக் பேசும் பெண்கள் மீது சமூக வலைதளங்களில் மோசமாக அச்சுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக சாதி, மத வெறியர்களே இக்குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். அறிவியல் விரோத பிற்போக்குக் கருத்துக்கள், பெண்ணடிமைத்தனத்தை கெட்டிப்படுத்துகின்றன.

சங் பரிவார அமைப்புகள், தலைவர்கள் இதில் தங்கு தடையின்றிப் பங்காற்றுகிறார்கள். பாலியல் வல்லுறவை ஓர் ஆயுதமாக முன்வைக்கிறார்கள். அரசியலில் கிரிமினல்மயமும், சமத்துவத்துக்கு எதிரான வலதுசாரி நிலைப்பாடும் அதிகரித்து வருவது பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் கேடாய் மாறி நிற்கிறது.

நீதி வழங்கும் இடங்களில் இருப்பவர்களில் ஒரு பகுதி இத்தகைய சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களாக இருப்பது பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது. சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படையைப் பற்றி நிற்கும் அரசியல் சாசனம் சிதைக்கப்படுவதற்கான முயற்சிகள், குறிப்பாகப் பெண்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையான மதவாத கும்பல் : நாட்டை ‘தாய்நாடு’ என அழைத்தால் மட்டும் போதுமா?

ஆணுக்கு பெண் நிகரென்றுகொட்டு முரசே!

ஒன்றுபட்ட போராட்டங்கள் மட்டுமே இன்றுள்ள அவல நிலையில் மாற்றத்தைக் கொண்டு வரும். “ஆணுக்கு பெண் நிகரென்றுகொட்டு முரசே” என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப குடும்பம், சமூகம், ஊடகம், கல்வித் திட்டம், அரசு நடவடிக்கைகள், அமைப்புகள் என அனைத்திலும் பாலின சமத்துவத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை, பாலின வேறுபாடு இன்றி முன்னெடுப்போம். அதிகாரத்தில் பெண்கள் சமபங்கு பெறும் போதுதான் பாலின சமத்துவம் காண இயலும். அந்த இலக்கு நோக்கி போராடி வரும் பெண்களோடு துணைநிற்போம்!

இறுதியாக, நாட்டை‘தாய் நாடு’ என அழைப்பதால் மட்டும் பெண்கள் முன்னேறிவிட மாட்டார்கள். அவர்களது ஆரோக்கியத்துக்கான திட்டங்களை முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தவேண்டும் அதுவே அவர்களது வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும்.

அதற்கு இந்த உலக மகளிர் நாளில் உறுதியேற்போம்!

banner

Related Stories

Related Stories