உணர்வோசை

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்: “பதவியேற்கும் முன்பே பொறுப்பேற்ற தலைவன்” - சுப.வீரபாண்டியன் புகழாரம்!

ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில், ஏறத்தாழ ஒரு கோடி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும். இந்த நடைமுறை தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லை, இந்தியாவிற்கே புதியது என்று சொல்ல வேண்டும்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்: “பதவியேற்கும் முன்பே பொறுப்பேற்ற தலைவன்” -  சுப.வீரபாண்டியன் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்கள் கிராம சபைக் கூட்ட பரப்புரையை அடுத்து உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதிய பரப்புரையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (ஜன.,29) தொடங்கவிருப்பதை அடுத்து அதனை வரவேற்றுள்ள திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் புழந்துள்ளார்.

அதில், “முன் எப்போதும் நிகழ்ந்திராத சில புது முன்னோட்டங்கள் வரலாற்றில் நிகழும்போது, பிற்காலத்தில் அவை முன்மாதிரிகள் ஆகிவிடும். அதற்குப் பின்னால் அந்நிகழ்வு பிற கட்சிகளாலும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாக ஆகியே தீரும்! இப்போது அப்படி ஒரு முன்னோட்டத்தை, எதிர்காலத்தில் முன்மாதிரி ஆகக்கூடிய நிகழ்வை, மொழிப்போர் வீரர்களின் நினைவுநாளான ஜனவரி 25 அன்று, தி.மு.க. தலைவர் தளபதி நடத்திக்காட்டியுள்ளார்.

அந்த நிகழ்ச்சி, தலைவர் கலைஞர் என்னும் சிங்கம் வாழ்ந்த வீட்டின் முன், ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அரங்கேறியுள்ளது! யார் ஒருவரும், தேர்தலில் வெற்றிபெற்றுச் சட்டமன்றத்திற்கு வந்தபிறகு, மாநில ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றுக்கொள்வதுதான் வழக்கம். பதவியேற்றுக்கொள்ளத்தான் ஆளுநர் வேண்டும். மக்களுக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு, மக்கள் போதும் என்று தலைவர் கருதியிருக்கக்கூடும். அதனால்தான், மக்களிடம் செய்திகளைக்கொண்டு போய்ச்சேர்க்கும் ஊடகங்களின் முன்னால் அப்பொறுப்புகளை அவர் ஏற்றுள்ளார். 25ஆம் தேதி அறிவிப்பில், நான்கு புதுமைகள் நடந்துள்ளன.

1. தலைவர் ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்கவில்லை, பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். 2. சட்டம் என்பதைப் பின்னிறுத்தி, அந்தச்சட்டம் யாருக்காக இயற்றப்படுகிறதோ, அந்த மக்களை முன்னிறுத்தியுள்ளார். 3. கடவுள் மீதோ, மனசாட்சியின் மீதோ உறுதி ஏற்காமல், தன்னையும், இயக்கத்தையும் உருவாக்கிய அண்ணா, கலைஞர் மீது உறுதியேற்றுள்ளார். 4. நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்று சொல்லும் தேர்தல் அறிக்கைக்கு முன்பே, மக்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு, அவற்றையும் நிறைவேற்றும் புதிய முறையைக்கொண்டு வந்துள்ளார். இவை நான்கும், இதற்கு முன் தமிழகத்தில் நடந்ததில்லை. புதியவைகளை உருவாக்குவதும் தலைமைப் பண்புகளில் ஒன்று என்பதை இங்கு நாம் எண்ணிப் பார்க்கலாம்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்: “பதவியேற்கும் முன்பே பொறுப்பேற்ற தலைவன்” -  சுப.வீரபாண்டியன் புகழாரம்!

நேற்றைய உறுதிமொழிகளை, வெறுமனே ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல் சொல்லிவிட்டுப்போய் விடாமல், ஒரு படிவத்தை உருவாக்கி, அதனை நிரப்பச்சொல்லி, அதற்கு ஓர் ஒப்புகைச் சீட்டும் வழங்கப்படுகிறது. மக்களால் நிரப்பப்பட்ட படிவங்கள் அனைத்தும், ஒவ்வொரு தொகுதியிலும், தலைவர் முன்னிலையிலிலேயே ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, அப்பெட்டிக்கு முத்திரையும் வைக்கப்படுகிறது. அந்தப் பெட்டிகள் எப்போது திறக்கப்படும், அந்தக் கோரிக்கைகள் எப்போது நிறைவேற்றப்படும் என்பனவும் சொல்லப்பட்டுள்ளன. நம் கட்சி வெற்றி பெற்று, தலைவர் முதலமைச்சராகப் பதவியேற்ற மறுநாள், அந்தப் பெட்டிகள் திறக்கப்படும். அன்றிலிருந்து நூறாவது நாளுக்குள் அவை நிறைவேற்றப்படும். நிறைவேற்ற முடியாத கோரிக்கைகள் இருக்குமானால், அவை பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்படும்.

ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில், ஏறத்தாழ ஒரு கோடி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும். இந்த நடைமுறை தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லை, இந்தியாவிற்கே புதியது என்று சொல்ல வேண்டும். உலக அளவில் நடந்துள்ளதா என்று தேடிப்பார்க்க வேண்டும்! இதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன என்பது கட்சியின் தலைவருக்குத் தெரியாமல் இருக்க முடியாது. ஆட்சிக்கு வந்து 10, 15 நாள்களிலேயே, ஏதும் நிறைவேற்றப்படவில்லையென்றால், எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவார்கள். ஒரு மாதம், இரண்டு மாதங்களுக்குள் ஏதும் நடக்கவில்லை என்றால், மக்களே கேள்வி கேட்கத்தொடங்கிவிடுவார்கள். தேவையில்லாமல், கெட்ட பெயரை ஆட்சியும், கட்சியும் சுமக்க வேண்டியிருக்கும்.

தேர்தல் அறிக்கையின் உறுதிமொழிகளை பொறுத்தமட்டில் இப்படிப்பட்டநெருக்கடிகள் எல்லாம் இல்லை. பிறகு ஏன் நம் தலைவர் இப்படி ஒரு செயலில் இறங்கியுள்ளார்? இரண்டே இரண்டு காரணங்கள்தாம் இருக்க முடியும். ஒன்று, தமிழக மக்களின் மீது உள்ள அக்கறை. இரண்டு, தன் உழைப்பின் மீதும், தன் கட்சியினரின் ஒத்துழைப்பின் பேரிலும் அவருக்குள்ள நம்பிக்கை!இவையெல்லாம் மிகுந்த மகிழ்ச்சிக்குரியனவே என்றாலும், இதில் கவலை தரக்கூடிய ஒரு செய்தியும், அவர்பால் அன்பு கொண்டவர்களுக்கு இருக்கிறது. கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து, அவரும் கட்சியினரும் ஓய்வே இன்றிப் பணியாற்றி வருகின்றனர். இப்போது தொடர்ந்து கிராம சபைகள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இனிமேல், வரும் 29 ஆம் தேதியிலிருந்து, ”தொகுதிதோறும் ஸ்டாலின்” என்னும் இத்திட்டம் தொடங்க உள்ளது.

தேர்தல் முடியும் வரையில், உண்ணவும், உறங்கவும் நேரம் இருக்கப் போவதில்லை. ஆட்சிக்கு வந்து அமர்ந்த பின்னும் இனி அவருக்கு ஓய்வு இருக்கப்போவதில்லை. மக்களுக்கான இத்தனை உழைப்பையும் அவர் மனம் தாங்கலாம். உடல் தாங்க வேண்டுமே என்பதுதான் அந்தக் கவலை! எனினும், வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமின்றி, ஒரு பெரிய சமூக மாற்றம் நடக்க உள்ளதே என்பதில் நம் எல்லோருக்கும் பெரு மகிழ்ச்சிதான்! இன்றைய சூழலில். அமைச்சர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மக்கள் எல்லோரும் துன்பத்தில் வாடுகின்றனர். நம் ஆட்சி அமைந்தபின், அமைச்சர்கள் எல்லோரும், பதவியேற்ற நாள் தொடங்கி, மிகக் கடுமையான வேலைகளைச் சுமந்து நிற்பார்கள். மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதுதான் வேறுபாடு! நம் தலைவரை எண்ணி, கட்சியின் ஒவ்வொரு தொண்டனும் இன்று பெருமைப்படலாம்! ஒவ்வொரு தமிழனும் நாளை பெருமைப்படுவான்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories