உணர்வோசை

“அவதூறு வழக்குகளே ஆத்தா ஆட்சியின் அரிய சாதனை” : அ.தி.மு.க அரசை விளாசிய பத்திரிகையாளர் கோவி.லெனின்!

அரசியல்ரீதியாகவும்-ஆட்சி மீதும் விமர்சனம் வைப்போர் மீது, அவதூறு வழக்கு, கிரிமினல் வழக்கு எனத் தொடர்வது ஜனநாயகத்தின் மீதான பட்டப்பகல் கத்திக்குத்து” என பத்திரிகையாளர் கோவி.லெனின் விமர்சித்துள்ளார்.

“அவதூறு வழக்குகளே ஆத்தா ஆட்சியின் அரிய சாதனை” : அ.தி.மு.க அரசை விளாசிய பத்திரிகையாளர் கோவி.லெனின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பதிவு ஒன்றை பத்திரிகையாளர் கோவி.லெனின் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், “தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்றம்.

ஆட்சி மீதான விமர்சனங்களை வைப்போரை மிரட்டுவதற்கும் பணிய வைப்பதற்கும் ஆள்பவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களில் ஒன்று, அவதூறு வழக்கு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லா ஆட்சியிலும் பத்திரிகைகள்-அமைப்புகள்-தனி நபர்கள் மீது அரசு நிர்வாகத்தின் சார்பில்-அமைச்சர்கள் சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆட்சிக்கேற்ப வழக்குகளின் அளவும் தன்மையும் மாறுபடும். அ.தி.மு.க. இதில் தனி ரகம்.

“அவதூறு வழக்குகளே ஆத்தா ஆட்சியின் அரிய சாதனை” : அ.தி.மு.க அரசை விளாசிய பத்திரிகையாளர் கோவி.லெனின்!

எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியத்தையும், வணிக ஒற்றுமை ஆசிரியர் பால்ராஜையும் சபாநாயகர் ‘தீர்ப்பின்’படி சிறைக்கு அனுப்பும் அளவுக்கு ‘நீதி’ நிலைநாட்டப்பட்டது. செல்வி.ஜெயலலிதா ஆட்சி இன்னும் வித்தியாசமானது.

1991-96 ஜெ.வின் முதல் ஆட்சிக்காலத்தில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாததால் சட்டமும் நீதியும் தாண்டவமாடின. முரசொலி ஆசிரியர் செல்வத்திற்காக சட்டமன்றத்திலேயே விசாரணைக் கூண்டு அமைக்கப்பட்டு, அதில் நிறுத்தி விசாரிக்கப்பட்டார். இல்லஸ்ட்ரேடட் வீக்லி சுனிலுக்கும் சபாநாயகர் ஓலை அனுப்பி விசாரித்தார்.

பிறகு, விசாரணையே தேவையில்லை நேரடியாக தண்டனை என்ற வகையில் நீதி, பரிணாம வளர்ச்சி அடைந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீச்சு, தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் அடியாள் கூட்டத்தை அனுப்பி துவம்சம் செய்தல், ஆளுநர் சென்னாரெட்டியை திண்டிவனம் அருகே மறித்து தாக்குதல், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் அனந்தகிருஷ்ணனைத் தேடி ஆட்டோவில் வந்த அடியாட்கள் மேற்கொண்ட தாக்குதல், அதே பாணியில் வழக்கறிஞர் விஜயனுக்கும் ‘சிறப்பான கவனிப்பு’, வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் உயிருக்கு குறிவைத்து, கைவிரல்களைத் துண்டாக்கி- ரத்தவெள்ளத்தில் மிதக்கச் செய்தல், தூத்துக்குடி ரமேஷ்- மதுராந்தகம் சொக்கலிங்கம் போன்ற சொந்தக் கட்சி எம்.எல்.ஏக்களுக்கே ‘அடையாளம் தெரியாத’ ஆட்களால் மண்டகப்படி என இன்ஸ்டண்ட் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

“அவதூறு வழக்குகளே ஆத்தா ஆட்சியின் அரிய சாதனை” : அ.தி.மு.க அரசை விளாசிய பத்திரிகையாளர் கோவி.லெனின்!

நக்கீரன் பத்திரிகை மீது தொடர்ச்சியான தாக்குதல்கள், கைது-சிறைவைப்பு, ஏராளமான வழக்குகள், மின்சாரம் துண்டிப்பு எனத் தாண்டவங்கள் தொடர்ந்தன. தராசு, ஜூனியர் விகடன் உள்பட அரசை எதிர்த்து யார் எழுதினாலும் நெருக்கடிதான். தஞ்சை உலகத் தமிழ் மாநாடு குறித்து உரிமைப் போராட்டம் நடத்திய தமிழறிஞர்களை-ஈழப் பிரச்சினைக்காகப் போராடிய தமிழ் உணர்வாளர்கள் இவர்களுக்கெல்லாம் தடா சிறைவாசம்.

1996 தேர்தலில் அ.தி.மு.க மட்டுமல்ல, ஜெயலலிதாவே பர்கூரில் மண்ணைக் கவ்வினார். 2001 தேர்தலில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆனார். இந்த முறை அரசு மீதான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் தடுக்க ‘மிட்நைட் மசாலா’க்கள் அரங்கேறின. நள்ளிரவில் கலைஞர் மீதான கைது நடவடிக்கை. நள்ளிரவில் கண்ணகி சிலை மாயம், எஸ்மா-டெஸ்மா சட்டங்களைப் பயன்படுத்தி நள்ளிரவில் அரசு ஊழியர்களின் குடியிருப்புக்குள் புகுந்து கைது எனத் தாண்டவமாடிய நேரத்தில், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டு வந்த பொடா சட்டத்தின் கீழ், அந்தக் கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.கவின் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 9 பேரை கைது செய்தார் ஜெயலலிதா.

அதன் தொடர்ச்சியாக பழ.நெடுமாறன், சுப.வீ, புதுக்கோட்டை பாவாணன், தமிழ்முழக்கம் சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் உள்பட பலரும் பொடா சிறைவாசம் அனுபவித்தனர். (ஜெ தந்த பரிசால் தடா-பொடா இரண்டையும் கண்டவர் சுப.வீ) நக்சலைட்டுகள் என்ற பெயரில் ஏராளமானோரும் பொடாவில் சிறையில் தள்ளப்பட்டனர்.

“அவதூறு வழக்குகளே ஆத்தா ஆட்சியின் அரிய சாதனை” : அ.தி.மு.க அரசை விளாசிய பத்திரிகையாளர் கோவி.லெனின்!

ஓராண்டு காலத்திற்கு பொடாவில் ஜாமீனே கிடையாது என்ற நிலையில், நக்கீரன் ஆசிரியர் ஒரு துப்பாக்கி-இரண்டு குண்டு வைத்திருந்தார் என்று போலீசார் போட்ட எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் அவர் மீதும் பொடா வழக்கு பாய்ந்தது. உச்சநீதிமன்றம் வரை நக்கீரன் நடத்திய சட்டப்போராட்டத்தால், ஓராண்டுக்குள்ளாக (252 நாட்களில்) பொடா சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டார் நக்கீரன் ஆசிரியர். அதன் பின்னர், மற்றவர்கள் வரிசையாக பொடாவிலிருந்து விடுதலையாகினர்.

நக்கீரன் செய்தியாளர்கள் சிவசுப்ரமணியன், பிரகாஷ், ஜீவாதங்கவேல், மகரன் எனப் பலர் மீதும் வழக்கு தொடரப்பட்டு, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசை விமர்சித்து எழுதிய THE HINDU உள்பட எல்லா பத்திரிகைகள் மீதும் வழக்கு, ரெய்டு என மிரட்டல்கள் தொடர்ந்தன. ஆட்டோ அடியாட்கள்-ஆசிட் வீச்சு என்கிற முந்தைய நடைமுறைகளிலிருந்து மாறுபட்டு, சட்டத்தின் பெயரில் போலீஸே எல்லாவற்றையும் ‘கவனித்தனர்’.

2011ல் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானபோது, ஆட்சி பற்றிய விமர்சனத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை ‘மேம்படுத்தினார்’. பத்திரிகைகள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் மீது அவதூறு வழக்கு தொடர்வதற்காகவே அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். மாதத்திற்கு எத்தனை அவதூறு வழக்குகள் தொடரப்படுகின்றனவோ அதற்கேற்ப மக்களின் வரிப்பணத்திலிருந்து வழக்குச் செலவுக்கென நிதி ஒதுக்கப்படும். வக்கீல் ஃபீஸ் என்பது இதில் முக்கியமானது.

“அவதூறு வழக்குகளே ஆத்தா ஆட்சியின் அரிய சாதனை” : அ.தி.மு.க அரசை விளாசிய பத்திரிகையாளர் கோவி.லெனின்!

டார்கெட் அச்சீவ் செய்தும்-அதைத் தாண்டியும் மாதந்தோறும் வழக்குகள் தொடரப்பட்டன. நக்கீரன், ஜூனியர் விகடன், ஆங்கில நாளிதழ்கள் என எட்டுத் திக்கும் வழக்குப் பாய்ந்தது. தீயாக வேலை செய்தது அரசு வழக்கறிஞர் தரப்பு. தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மீதும் சரமாரியான வழக்கு.

அப்படித் தொடரப்பட்ட வழக்குகளில் மு.க.ஸ்டாலின் மீதான 4 வழக்குகளை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இன்னும் 12 வழக்குகள் அவர் மீது மிச்சமுள்ளன. இதுபோலவே, மற்ற அரசியல் தலைவர்கள்-பத்திரிகைகள் மீதான வழக்குகளும் உள்ளன. அவதூறு வழக்குகளைக் கடந்து, கிரிமினல் வழக்குகள் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்வதையும் ஜெயலலிதா அரசு வாடிக்கையாகவே வைத்திருந்தது.

இவற்றுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் நக்கீரனும் மேலும் பலரும் பல ஆண்டுகளாக சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து வருவது குறித்தும், சாதகமான பல இடைக்காலத் தீர்ப்புகளைப் பெற்றிருப்பது குறித்தும், சக ஊடகங்கள்கூட வாய் திறப்பதில்லை. அரசு கேபிள் எனும் கயிறு அவற்றின் கழுத்தை சுற்றியிருப்பதால், சூழ்நிலைக் கைதிகளாக உள்ள அவல நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

“அவதூறு வழக்குகளே ஆத்தா ஆட்சியின் அரிய சாதனை” : அ.தி.மு.க அரசை விளாசிய பத்திரிகையாளர் கோவி.லெனின்!

தனிமனித தாக்குதல் விமர்சனங்கள்-பொய்களைப் பரப்பி கலவரச் சூழலை உருவாக்குதல்-அடாவடியான செயல்பாடுகள் இவற்றைக் கட்டுப்படுத்த சட்டத்தில் ஏற்கனவே வாய்ப்புகள் உள்ளன. அப்படி செயல்படுவோரை விட்டுவிட்டு, அரசியல்ரீதியாகவும்-ஆட்சி மீதும் விமர்சனம் வைப்போர் மீது அரசுப் பணத்தை செலவிட்டு, அவதூறு வழக்கு-கிரிமினல் வழக்கு எனத் தொடர்வது ஜனநாயகத்தின் மீதான பட்டப்பகல் கத்திக்குத்து.

தன் மீதான அவதூறு வழக்குகளை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்று, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அடுத்து அமையும் ஆட்சியில், சட்டத்தின் பெயரிலான-மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதற்கான-இத்தகைய அவதூறு வழக்கு நாடகங்களுக்கு சட்டரீதியாக முற்றுப்புள்ளி வைப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழியமைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories