உணர்வோசை

“கல்லக்குடியில் களமாடி தமிழ்க்குடி காத்த தலைவன்” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவுநாள் சிறப்புக்கட்டுரை !

75 ஆண்டுகள் பொதுவாழ்வு, 50 ஆண்டுகாலம் ஒரு மக்கள் இயக்கத்திற்கு தலைமை என அபூர்வ வரலாறாய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று.

“கல்லக்குடியில் களமாடி தமிழ்க்குடி காத்த தலைவன்” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவுநாள் சிறப்புக்கட்டுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

'பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு' என்ற பாவேந்தரின் சங்கநாதத்தை உயர்த்திப் பிடித்து தமிழின உயர்விற்காக பாடுபட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். சமூக விடுதலை, சமூக நீதி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவு கொள்கைகளில் இம்மியளவும் பிசகாமல் தமிழருக்கும், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தொண்டாற்றிய தவப்புதல்வன் அவர்.

திராவிட இயக்கத்தின் ஆலமரமாக, நற்திசைகாட்டும் வழிகாட்டியாக தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்த தன்னிகரில்லாத அந்த மகத்தான தலைவனின் சரித்திர சாதனைகளில் கல்லக்குடி போராட்டம் ஒரு மைல்கல். இந்த போராட்டத்தின் வெற்றி தமிழர் தன்மான வாழ்விற்கு மணிமகுடம்.

திராவிட இயக்கத்தின் மூத்த எழுத்தாளர் ப.இளவழகன், முத்தமிழறிஞர் கலைஞரின் எழுச்சி மிகுந்த இந்த போராட்டத்தினை கலைஞரின் வரலாறு என்ற நூலில் கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

“தி.மு.கழகம் தோன்றி நான்கே ஆண்டுகள் ஆகியிருந்தன. ஆற்றுநர் பலரைக் கொண்டிருந்த அதன் பயணம் ஆற்றொழுக்காய்த் தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது அரசியல் சாணக்கியர் என்ற விருதோடு விளங்கிக் கொண்டிருந்த இராஜாஜி அவர்கள் அரசுக்கட்டிலை அலங்கரித்துக் கொண்டிருந்தார். அவர் மூதறிஞர் தான். ஆனைக்கும் அடி சறுக்கும்' என்ற முதுமொழியும் உண்டே !

"முன்னேற்றக் கழகம் ஒரு மூட்டைப் பூச்சி. அதை நசுக்காமல் விடமாட்டேன்" என முனகினார். "அப்பன் தொழிலை பிள்ளை செய்ய வேண்டுமென்று" வர்ணாசிரம திட்டத்தை வகுத்தார். அதற்கு 'குல தர்மக் கல்வி' என்றொரு பெயரையும் சூட்டினார்.

“கல்லக்குடியில் களமாடி தமிழ்க்குடி காத்த தலைவன்” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவுநாள் சிறப்புக்கட்டுரை !

அது குல தர்மம் கல்வியல்ல, குலங்கெடுக்கும் அதர்மக் கல்வி முறையாகுமென்று அந்தத் திட்டத்தை எதிர்த்தும், 'கல்லக்குடி' எனும் பண்டைத் தமிழ்ப் பெயரை டால்மியாபுரம் என்று தனிப்பட்ட ஒரு பணமூட்டையின் பெயரால் மாற்றியமைக்கப்பட்ட அக்கிரமத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது.

எழுச்சிப்பேரிகை ஆர்த்தது. மும்முனைப் போராட்டம் முகிழ்த்தது. வாலடித்து எழும் வரிப்புலிகளைப் போல வீறு கொண்டெழுந்த வீரர்களாய் கழகத் தொண்டர்கள் போராட்டத்திற்கு அணியமானார்கள் அந்தப் போராட்டம் அறுவை போராட்டமல்ல, ஆக்கப் போராட்டம். இன-மொழி மான உணர்வை ஆக்கும் போராட்டமாகும்.

முத்தமிழ்க் குடிகளை மூங்கையர் என எண்ணி ஏளனப்படுத்தியோர்க்கு அவர்கள் வேங்கையர் என்பதை விவரித்துக் காட்டியது அந்த மும்முனைப்போராட்டம்.

ஜூலை -15. பிரெஞ்சுப்புரட்சி வித்திட்ட அந்த நாளே தமிழகப் புரட்சிக்கும் அமைந்தது ஒரு அற்புதமான பொருத்தமாகும். பல முனைகளில் பகடி செய்து பாழ் செய்ய நினைத்தவர்களை மும்முனைகளில் நிறுத்தி முடிவு காண முனைந்த முன்னேற்றக் கழகம், ஒரு முனைக்குத் தளபதியாகக் கலைஞரைத் தேர்ந்தெடுத்தது. அமைதி வழி - அறிவு வழி - அன்புவழி - இதுவே அண்ணா கண்ட அறப்போர் வழி. அந்த வழியிலே அன்று முதல் இன்று வரை பொறுப்போடு நடையிடுபவர் கலைஞர். அவர் கல்லக்குடி புரட்சிக் காதையின் நாயகனாய் நின்றார். பெயர் எதுவாக இருந்தால் என்ன என்று பேசிய பெரும் மேதை'களை நோக்கி "எதுவாயிருந்தாலென்ள என்னும்போது எதற்காகக் கல்லக்குடியை டால்மியாபுரம் ஆக்க வேண்டும்?" என்று எதிர்க்கேள்வி எழுந்தபோது வாயடைத்து நின்ற காட்சியைத்தான் காண முடிந்தது. வக்கணை பேசுவதில் வல்லவர்களான அவர்களை மறந்து நாம் வரலாற்றுக்குள் நுழைவோம்.

அதோ... கல்லக்குடியின் புகைவண்டி நிலையம், வடக்கு தெற்கு என ஒட்டாத இரு திசைகளைப் போல் இரட்டைக்கோடுகளாய் நீண்டு தொடரும் தண்டவாளப் பாதை, அரிதாம் மழலைப் பருவத்தில் தாயின் மடிமீது தலை வைத்துறங்கிய சேய்கள் : இனிதாம் இளமைப் பருவத்தில் தாய் மண்ணிற்கு வந்துற்ற கேடு களைய அந்த தண்ட வாளத்தின் மீது தலை வைத்துப்படுத்தார்கள்.

ஏகாதிபத்திய நினைவுகளைக் கொத்தும் இளமைப் புறாக்கள் எண்ணிக்கையில் ஐவர். கருணாநிதி, முல்லைசத்தி, கஸ்தூரி, குழந்தைவேல், குமரவேல் எனும் பஞ்சரத்தினங்கள். பண்பாடு-பகுத்தறிவு-பாசம்- கடமை-என்றெல்லாம் பட்டைத் தீட்டப்பட்டு ஒளிவிடும் உயர் ரத்தினங்கள்.

காலகாலமாய் இருந்து வரும் கல்லக்குடி பெயரை மறைத்து அதன் கோலத்தைக் குலைக்க எண்ணும் எண்ணத்திற்குக் குழி பறிக்கும் காட்சியைக் காண அந்த இரயில் நிலையத்தில் அன்று ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தார்கள்

போராட்டம் என்றால் ஆழம் பார்க்க - அடுத்தவரை முன்னுக்குத் தள்ளி அவரின் முதுகுப்புறத்தில் முக்காடிட்டு ஒளிந்துக் கொள்ளும் முதுகெலும்பில்லாத தலைமையைப் போலன்றி, அற்பர்களைப் போல் விசிலடித்து வந்த அந்த இரயிலின் முன்னே முதல் அணியில் முதல் ஆளாகவே படுத்தவர் கலைஞர். காவலர்கள் அவரிடம் நெருங்கினார்கள் தண்டவாளத்தை விட்டு அவர்கள் விலக வேண்டுமென்று கூறிப் பார்த்தார்கள். நாங்கள் இங்கிருந்து அகலவேண்டுமானால் டால்மியாபுரம் பெயர் அகல வேண்டுமென்றார் கலைஞர்.

“கல்லக்குடியில் களமாடி தமிழ்க்குடி காத்த தலைவன்” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவுநாள் சிறப்புக்கட்டுரை !

அது எங்கள் கையில் இல்லை என்பது போல் காவலர்கள் நின்றார்கள். 'உங்கள் கையில் அது இல்லாத போது, உங்கள் பணி எதுவோ அதைச் செய்யலாம் என்பது போல் கலைஞரும் அமைதி காத்தார். காவலர்கள் கெஞ்சிப் பார்த்தார்கள் - பயனில்லை; மிஞ்சிப் பார்த்தார்கள் அதுவும் பலிக்கவில்லை. அதட்டலும் மிரட்டலும் பலிக்காத நிலையில் அந்த ஐவர் கைது செய்யப்பட்டார்கள். அடுத்தடுத்து அணி வகுக்கப் பலர் தயாராய் நின்றிருந்தனர். மூன்றாவது அணி கவிஞர் கண்ணதாசன் தலைமையில் புறப்பட்டது. காவலர்களின் சொற்கள் பிடிப்பற்றுப் போன போது துப்பாக்கிச் சனியன்கள் வெடிக்க ஆரம்பித்தன.

மொத்தம் 64 'ரவுண்டுகள்'.

அந்த வெஞ்சமர்க்களத்தில் அடியுதை மிதிப்புக்கு ஆளாகி நூற்றுக்கணக்கானவர்கள் குருதி கொட்டினார்கள். குண்டுக்குத் தவறிய கவிஞரின் தலையை குண்டாந்தடி பதம் பார்த்தது.

ஆளவந்தாரின் ஏவல் கொள்ளிகளால் கழகத்தின் கற்பூரம் ஒன்று எரிந்துபோனது. அந்தக் கற்பூரத்தின் பெயர் லால்குடி நடராசன். தாளமுத்து-நடராசன் பாதையில் தமிழ் காக்க எண்ணிய அவன், பாவிகளின் குண்டுகளால் பலியாகிப் போனான்.

அடுத்தொரு பரிதாபம்; அடுத்த மாதம் திருமணத்தை நிச்சயம் செய்து நிர்மலமான கனவுகளில் மிதந்துகொண்டு பயணம் போய்க் கொண்டிருந்த இளைஞன்-பெற்றெடுத்த தாய்க்கு கறிவேப்பிலை கொத்துப் போலிருந்த ஒரே மகள் கேசவன் பாய்ந்து வந்த குண்டுக்குப் பஞ்சாகி சிதைந்தான்.

அத்தோடு நில்லாமல், அகந்தைக் கூத்தாடிய அதிகாரம் தூத்துக்குடியிலே நான்கு உயிர்களைக் குடித்து தன் தாகம் தீர்த்தது. கல்லக்குடி போராட்டத்தில் கலைஞருடன் கைதானோர் மட்டும் 400 பேர். மும்முனைப் போராட்டங்களில் மொத்தம் கைதானோர் 5,000 பேர். அத்தனை பேரும் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

அறிஞர் அண்ணா , என்.வி.என்., மதியழகன், நாவலர், சம்பத் ஆகியோர் மீது வழக்கு. போராட்டத்தைத் தூண்டிவிட்டதாக வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறை தண்டனை பெற்றார்கள். அக்கிரமத்தை எதிர்த்ததற்குப் பரிசு ஆறு மாதம் சிறை. காட்டாட்சி வழங்கிய கடுந்தண்டனை ஏற்றுக் கலைஞர் சிறைக்குச் சென்றார். திருச்சி சிறைச்சாலைக்கு அந்தப் பெருமை கிட்டியது.

காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது என்ற கருத்தாளர் கலைஞர் அந்த சிறைக்கூடத்தை சிந்தனைக் கூடமாக்கிக் கொண்டார். அங்கே ஒரு அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. அதன் குடிமக்களாய் நானூறு பேர். அந்தக் குட்டி அரசாங்கத்தின் தலைவர் கலைஞர். துணைத்தலைவர் மன்னை நாராயணசாமி. பிரிவுக்கு நூறு பேரென நான்கு பேர். இந்தப் பிரிவுகளின் பொறுப்பாளர்களாக பேராவூரணி அடைக்கலம், மாயவரம் கிட்டப்பா, பாட்டு, காரைக்குடி சுப்பையா ஆகியோர்.

அந்தப் பிரிவுகள் சரியாக இயங்க, கழித்தல், குளித்தல் - உண்ணல் உறங்குதல்-உடல் நலம் காத்தல் என்று எல்லா இலாக்காக்களையும் கவனிக்க அமைச்சர்களாக முல்லைசத்தி, இராம. சுப்பையா, புகாரி, வேலு ஆகியோர்.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டினை ஆளும் முதலமைச்சராவோம் என்று எள் முனையளவும் எண்ணிப் பாக்காத கலைஞர் அப்போது அந்த சிறைச் சாலையையே ஒரு அரசாங்கமாக்கி ஆட்சி நடத்தியது ஒரு அற்புதம்தான்.

ஆறு திங்கள் கைதிகளின் ராச்சியத்திலே கம்பிரமாய் உலவி வந்த கலைஞர், கற்பனைக்கு உருக்கொடுத்து 'மணிமகுடம் நாடகத்தில் கழகக் கருத்துக்களை சிறையிட்டார். அத்துடன் 'ஆறுமாத சிறை தண்டனை' என்றொரு நூலையும் எழுதி முடித்தார். தண்டனைக் காலம் முடிந்தது. விடுதலையானார். வெளியுலகம் கண்டார்.

“கல்லக்குடியில் களமாடி தமிழ்க்குடி காத்த தலைவன்” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவுநாள் சிறப்புக்கட்டுரை !

சென்னை மாநகரம் மாஸ்கோவின் செஞ்சதுக்கமானது. அக்டோபர் புரட்சி விழாவில் உயரும் பதாகைகளைப் போல் எண்ணிக்கையற்ற இருவண்ணக் கொடிகள் எங்கு பார்த்தாலும் உயர்ந்து பறந்து கொண்டிருந்தன சிறைச்சாலை சென்று திரும்பிய சிந்தனைச் செல்வத்திற்கு சிங்கார வரவேற்பு. சீர் கொஞ்சும் வாழ்த்துக்கள்.

உணர்ச்சிக் கடலாய் உற்சாக அலையெழுப்பிச் சென்ற மக்களின் ஊர்வலம் போக்குவரத்தை அறுபது நிமிடங்கள் அப்படியே நிலைகுத்தி நிற்கச் செய்தது. அமெரிக்க நாட்டவர் ஒருவர் காரிலிருந்தபடியே அந்த பிரம்மாண்டமான வரவேற்பு ஊர்வலத்தைக் கண்டு வியந்தார். விவரங் கேட்டறிந்தார். அவர்தான் ஐசனோவரின் துணையாக இருந்து பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிக்சன். கல்லக்குடி பெயர் மாற்றத்திற்காக கழகம் அன்று போராட்டத்தின் மூலம் ஊன்றிய விதை பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர் பலனைத் தந்தது. அறிஞர் அண்ணாவைத் தொடர்ந்து கலைஞர் முதலமைச்சரானபோது டால்மியாபுரம் அழிக்கப்பட்டு கல்லக்குடி பெயர் பொறிக்கப்பட்டது. மக்கள், கலைஞருக்கு 'கல்லக்குடி கொண்டான்' என்ற சிறப்புப் பெயர் கட்டி மகிழ்ந்தார்கள்.

இதுதான் தமிழனத்திற்காக கல்லக்குடி களத்தில் கலைஞர் களமாடிய வரலாறு.

தமிழர்கள் மீதான ஆதிக்கத்தை, தமிழ் மீதான அடக்குமுறையை, தமிழ்நாட்டிற்கு எதிரான உரிமைப்பறிப்பை கண்டு பொங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். களம் பல கண்ட திருமகனாய், காவியமாகும் அவர் வாழ்வு, வளமிகு நாடாய் தாயகம் வாழ தண்டவாளத்தில் தலை வைத்த கலைஞர் என்றால் தமிழ்நாடு. கலைஞர் என்றால் தமிழர் நலம். கலைஞர் என்றால் முத்தமிழ்முரசம் என்பதே வரலாறு.

ஓங்குக முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ்!

banner

Related Stories

Related Stories