உணர்வோசை

'கடல் கொல்லும் வலை' - சர்வதேச ஊடகத்தில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் ஆவணப் படம் !

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி தயாரித்த 'கடல் கொல்லும் வலை' என்னும் ஆவணப்படம் சர்வதேச சூழலியல் ஊடகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

'கடல் கொல்லும் வலை' - சர்வதேச ஊடகத்தில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் ஆவணப் படம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

Earth Journalism Network(EJN) - என்ற சூழலியல் சார்ந்த சர்வதேச செய்தி ஊடகத்தில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி தயாரித்த ‘கடல் கொல்லும் வலை’ எனும் ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது.

1982 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக் ஹோம்மில் சூழலியல் சார்ந்த ஒரு மாநாடு நடத்தப்படுகிறது. அதில் முக்கியமாக இரண்டு விஷயங்கள் விவாதிக்கப்படுகிறது. ஒன்று புவி வெப்பமயமாதல்; மற்றொன்று ஓசோன் மண்டல பாதிப்பு. இந்த இரண்டு மாற்றங்களினாலும் வருங்காலங்களில் பூமிக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துகள் குறித்தும், சூழலியல் பிரச்சனைகள் குறித்தும் அந்த மாநாட்டில் எச்சரிக்கப்படுகிறது.

EJN Tamil Documentary
EJN Tamil Documentary

தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது 2020ஆம் ஆண்டு. ஸ்வீடன் மாநாடு நடைபெற்று சரியாக 38 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது அந்த மாநாட்டில் எச்சரிக்கப்பட்டதை விட மோசமான விளைவுகளை இந்த உலகம் எதிர்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் தரப்பட்டு கவனமுடன் கையாண்டிருக்க வேண்டிய இந்த பூமியின் நலன், இன்று மோசமான சுற்றுசூழல் பிரச்சனைகளால் பெரிதும் சேதமடைந்திருக்கிறது.

ஊடகங்களும், மக்களும் ஒவ்வொரு சூற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளையும் தினசரி செய்திகளாக கடந்து வந்துகொண்டிருக்கும் நிலையில்.. இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் நுணுக்கமான சூழலியல் மாற்றங்கள் குறித்து ஆராய்வதற்கு பெரும்பாலும் யாரும் முன்வருவதில்லை. ஆனால், அறம் சார்ந்த சில ஊடகங்கள் மட்டும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. அவ்வகையில், அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும், EJN – Earth Journalism Network என்ற சர்வதேச ஊடக அமைப்பு, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வழங்கி வருகிறது.

Global Warming
Global Warming

கடந்த 16 ஆண்டுகளாக பூமியில் நிகழும் ஒவ்வொரு சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் பதிவு செய்து பல முக்கியமான சூழலியல் படைப்புகளை உருவாக்கி வரும் EJN., இதுவரை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 8000-க்கும் அதிகமான ஊடகவியலாளலர்களுக்கு சூழலியல் சார்ந்த பயிற்சிகளை அளித்துள்ளது. 2004ஆம் ஆண்டு உலக நாடுகளை சேர்ந்த ஊடகங்கள் சுற்றுச்சூழல் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து செயல்படவேண்டும் என்பதற்காகவும், சூழலியல் சார்ந்து இயங்கும் பத்திரிக்கையாளர்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் துவங்கப்பட்ட இந்த Earth Journalism Network தற்போது 130-க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.

பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், பல்லுயிர் பிரச்சனைகள், காடுகள் ,தண்ணீர், பெருங்கடல் மற்றும் கடலோர வளங்கள், மீன்பிடித்தல் என பல்வேறு தளங்களில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் மாற்றங்களை நுணுக்கமாக கவனித்து, அது குறித்து பதிவு செய்து வருகிறது. மேலும் இந்த அமைப்பு பல முக்கியமான சூழலியல் புலனாய்வு படைப்புகள் உருவாவதற்கும் மிகச்சிறந்த தளத்தை ஏற்படுத்து தருகிறது.

EJN Media
EJN Media

உலக நாடுகளில் செயல்பட்டு வரும் ஊடகவியலாளர்கள் புதிய சூழலியல் படைப்புகளை உருவாக்கும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறு தலைப்புகளை அறிவிக்கிறது. அதில் தேர்வாகும் நபர்களுக்கு ஊக்கதொகையும், படைப்புக்கான அங்கீகாரத்தையும் வழங்கி ஒவ்வொரு ஆண்டும் கௌரவித்து வருகிறது Earth Journalism Network. இதில் இந்தாண்டு தெற்கு ஆசிய பிரிவில், கலைஞர் செய்திகள் தொலைகாட்சியின் ஊடகவியலாளரும், சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கி வருபவருமான பா.நரேஷ் அவர்களின் படைப்பு இடம்பெற்றுள்ளது.

’கடல் கொல்லும் வலை’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம், தற்கால சமூகம் கண்டுகொள்ளாத நுகர்வுக் கழிவுகளின் இருள் பக்கத்தை படம்பிடிக்க முயற்சித்துள்ளது. நம் தட்டுக்கு வரும் ஒவ்வொரு மீனுக்காகவும் காரணமேயில்லாமல் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான சின்ன மீன்களுடைய கதைதான் இந்த ஆவணம்.

கழிவாகும் மீன்கள்
கழிவாகும் மீன்கள்

உணவுக்கான மீன்பிடிமுறை என்பதிலிருந்து வணிகத்திற்கான தொழிலாக மாறிய மீன்பிடி தொழில்நுட்பத்தின் வலையில், கழிவுகளாக தினம் தினம் தூக்கியெறியப்படும் கடல் உயிரிகளின் பயணம் பதபதைக்கவைப்பதாக இருக்கும்.

நாம் கற்பனை செய்யமுடியாத அளவிற்கான கடல் உயிரிகள் கழிவுகளாக தினம் தினம் கழிக்கப்படுகிறது. ஒவ்வொரு துறைமுகத்திற்கும் வரும் வணிக மீன்பிடி களங்களில் இருக்கும் மீன்களின் 40 - 60 சதவிகித மீன்கள் கழிவுகளாகின்றன. இதுபோன்ற வணிக மீன்பிடிமுறையை கடைப்பிடிக்காமல், பாரம்பரிய தொழில்நுட்ப அறிவைக்கொண்டே இன்றும் கடற்சூழலை சிதைக்காமல் மீன்பிடித் தொழிலைத் தொடர்ந்து வரும் தமிழ்நாட்டு மீனவர்களின் அனுபவங்கள், உலக மீன்வணிகத்திற்கான பாடமாக இருக்கிறது. கலைஞர் செய்திகள் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் ’கடலோடி’ என்ற தொடரை இயக்கிய ஊடகவியலாளர் அருள் எழிலன், இந்த ஆவணப் பட உருவாக்கத்தில் பெரிதும் துணைநின்றார்.

கடல் கொல்லும் வலை என்ற இந்த ஆவண படத்திற்கான ஒளிப்பதிவு கலைஞர் செய்திகள் தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர்களான அ. சரண் குமார், ஷரண் சந்தர், டேனியல் மற்றும் படத்தொகுப்பு சுந்தர் மதி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக பழங்குடிகள் வாழ்வியல் குறித்தும், வரலாறு குறித்தும் கலைஞர் செய்திகளில் நரேஷ் உருவாக்கிய “எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே” என்ற ஆவணத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து சூழலியல் தளங்களில் இயங்கி வந்த அவருக்கு தற்போது சர்வதேச அளவில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், மற்ற ஊடகவியலாளர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் தமிழகத்தை சேர்ந்த ஒரு தொலைகாட்சியின் படைப்புக்கு கிடைத்துள்ள இந்த கௌரவம் இந்திய ஊடகத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. NDTV, The Hindu ஆகிய ஆங்கில ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களின் புகைப்பட ஆவணத்தை EJN வெளியிட்டுள்ளது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த ஊடகயவியலாளர் ஒருவர் உருவாக்கிய ஆவணப் படம் ஒன்றை EJN அங்கீகரித்திருப்பது இதுவே முதல் முறை.

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவுத் தலைவர் திருமாவேலன் அவர்களின் வழிகாட்டுதலில், ’கடலோடி’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே’, ’சமூகம் என்பது நான்கு பேர்’ போன்ற நேர்த்தியான ஆவணத்தொடர்கள் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

' கடல் கொல்லும் வலை' குறித்து Earth Journalism Network வெளியிட்ட பதிவைக் காண கிளிக் செய்யுங்கள்

banner

Related Stories

Related Stories